மாதர்பாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் அமைக்கப்படும்

சென்னை, ஜூன் 219–
கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வட்டங்களை பிரித்து  மாதர்பாக்கத்தை தலைமை யிடமாக கொண்டு புதிய வட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
சட்டசபையில் கும்மிடிப்பூண்டி உறுப்பினர், கே.எஸ். விஜயகுமார் கேள்வி ஒன்றை எழுப்பினார். கும்மிடிப்பூண்டிக்கு உட்பட மாதர்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் அமைக்க அரசு ஆவன செய்யுமா? என்றார்.
அதற்கு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, அரசாணை நிலை எண். 279 வருவாய் துறையினால் 9.6.2003ல் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோள்களான பரப்பளவு மக்கள் தொகை மற்றும் கிராமங்களின் எண்ணிக்கை பூர்த்தியாகததால், மாதர்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக வாய்ப்பு இல்லை என்றார்.
அதைதொடர்ந்து உறுப்பினர் கே.எஸ். விஜயக்குமார் கூறும்போது, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ஆகிய 2 வட்டங்களிலும் பரப்பளவு மக்கள் தொகை, வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை 3 வட்டங்களாக பிரிப்பதற்கான தகுதிகள் உள்ளன. எனவே  கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, மாதர்பாக்கம் என 3 வட்டங்களாக பிரித்து தர ஆவன செய்ய வேண்டும். இந்த கோரிக்கை 1972ம் ஆண்டிலிருந்தே எழுப்பப்பட்டு வருகிறது என்றார்.
அதற்கு அமைச்சர் உதயகுமார் பதில் அளிக்கையில், வருவாய்த் துறையை  மக்கள் எளிதில் அணுகுவதற்கு ஏதுவாக, ஜெயலலிதா அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது, உறுப்பினர் புதிய வட்டம் அமைப்பதற்கான ஒரு விளக்கத்தை தெரிவித்திருக்கிறார். எனவே முதல்வருடன் கலந்து ஆலோசித்து புதிய வட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
அதை தொடர்ந்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு துணை கேள்வி எழுப்பினார். வால்பாறை தொகுதிக்குட்ட ஆனைமலையை தனி வட்டமாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அதற்கு அமைச்சர் உதயகுமார் பதில் அளிக்கையில், தகுதி உள்ள பகுதிகளில் வட்டம் அமைக்க 3 நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தகுதியுள்ள இடங்களை கண்டறிந்து அரசுக்கு பரிந்துரை வழங்கும். அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் புதிய வட்டங்கள் உருவாக்கி தரப்பட்டு வருகிறது. குழுவின் பரிந்துரையை ஏற்று உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது,      சங்ககிரி தொகுதி உறுப்பினர் ராஜா கேள்வி எழுப்பினார். தேவூர் பேரூராட்சியில் தேவூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா? என்றார்.
அதற்கு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பதில் அளிக்கையில், சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு உட்பட்ட தேவூரில் 2012–13 நெல்கொள்முதல் பருவத்தில், 4.4.2012 அன்று நேரடி கொள்முதல் நிலையம் ஒன்று திறக்கப்பட்டு, அதன் வாயிலாக 4.7.2012 வரை 44 ஆயிரத்து 560 மெட்ரிக் டன் சன்ன ரக நெல்லும், 24 ஆயிரத்து 520 மெட்ரிக் டன் பொது ரக நெல்லும், ஆக மொத்தும் 69 ஆயிரத்து 80 மெட்ரிக் கடன் அளவிற்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  அறுவடை முடிந்து நெல்வரத்து இல்லாத காரணத்தால் மேற்படி நெல்கொள்முதல் நிலையம் 4.7.2012 அன்று மூடப்பட்டது என்றார்.