நீர் விளையாட்டுகளுக்காக மேலக்கோட்டையூரில் முதன்மை நிலை விளையாட்டு மையம் அமைக்கப்படும்

சென்னை, ஜூன்.19–
கெனாயிங், கயாக்கிங் ஆகிய நீர் விளையாட்டுகளுக்காக மேலக்கோட்டையூரில் முதன்மை நிலையில் விளையாட்டு மையம் உருவாக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ்  முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்  கூறியிருப்பதாவது:–
இளைஞர்கள் நாட்டின் செல்வம். விளையாட்டு, ஒருங்கிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம், நேர்மையாக செயல்படும் பக்குவம் ஆகியவற்றை கற்றுத் தருவதுடன், வெற்றி, தோல்வியை சமமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனத் திண்மையையும் அளித்து சிறந்த பண்புகளை கூடிய மனிதனாக உருவாக்க உதவுகின்றன. எனவே தான் புரட்சித் தலைவி அம்மா கல்விக்கு அளித்த அதே முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் அளித்து வந்தார்.
புரட்சித் தலைவி அம்மா காட்டிய வழியில் செயல்படும் இந்த அரசின் சார்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை குறித்த கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
* காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டப்பட்டு 42 ஆண்டுகள் ஆகி விட்டதால், இந்த வளாகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடங்கள் மற்றும் விளையாட்டு உட்கட்டமைப்புகளை இடித்து விட்டு அதே இடத்தில் நவீன தரத்துடன் கூடிய புதிய விளையாட்டு வளாகம் ஒன்று 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். இவ்வளாகம் பார்வையாளர் மாடம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல அலுவலர் அறை, நிர்வாக அறை, பயிற்சியாளர் அறை, வீரர்கள் உடை மாற்றும் அறை, கழிவறைகள், சேமிப்பு அறை முதலான வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
* திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நீச்சல் பந்தய குளம், பயிற்சி நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், உடை மாற்றும் அறைகள், கழிவறைகள், அலுவலகம் மற்றும் பயிற்சியாளர்கள் அறையுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த நீச்சல்குள வளாகம் அமைக்கப்படும்.
* கெனாயிங் மற்றும் கயாக்கிங் எனும் நீர் விளையாட்டு உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது. தற்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இவ்விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச ரெகெட்டா எனப்படும் மிகப்பெரிய அளவிலான படகு போட்டிகளை நடத்தும் மையமாக சென்னை திகழ்கிறது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகம் அருகில், கெனாயிங் மற்றும் கயாக்கிங் விளையாட்டுகளுக்கு, முதன்மை நிலை விளையாட்டு மையம் ஒன்று 4 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.