திண்டுக்கல்லில் விரைவில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்

சென்னை, ஜூன் 19–
திண்டுக்கல்லில் விரைவில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, நிலக்கோட்டை தொகுதி உறுப்பினர் தங்கதுரை கேள்வி ஒன்றை எழுப்பினார். நிலக்கோட்டை தொகுதிக்குட்பட்ட வத்தலகுண்டு ஒன்றியம் தெப்பத்துப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு முன்வருமா? என்று கேட்டார்.
அதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பதில் அளித்து கூறியதாவது:–
மத்திய அரசு இலக்கின்படி சம வௌி பகுதியில் 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், மலைப் பகுதியில் 20 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்ற அடிப்படையில் 2 சுகாதார மையங்களுக்கு இடையே குறைந்தபட்ச இடைவௌி 8 கிலோ மீட்டர் மேல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
தெப்பத்துப்பட்டி கிராமம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்தது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் மக்கள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 33 ஆகும். இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப இங்கு செயல்பட்டு வரும் 4 ஆரம்ப சுகாதார நிலையங்களே போதுமானதாக உள்ளதாலும், தெப்பத்துப்பட்டி கிராமத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் விராலிபட்டி ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருவதாலும், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம்  தெப்பத்துப்பட்டி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறு இல்லை.
தமிழகத்தில் 1747 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. ரூ.167 கோடி மதிப்பில் 212 புதிய ஆரம்ப சுகாதார  நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட இருக்கின்றன. உறுப்பினர் தனது தொகுதி நலன் சார்ந்து கேள்வி எழுப்பி உள்ளதால், அவரது கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வத்தலகுண்டு தெப்பத்துப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம், திண்டுக்கல்லில் அரசு மருத்துவ கல்லூரி ஆகியவை அமைக்கப்படும்.
தமிழகத்தில் தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.
அதை தொடர்ந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறும்போது, திண்டுக்கல்லில் அரசு மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பாக அமைச்சர் சபையில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். முதல்வர் எடப்பாடி, முன்னுரிமை அடிப்படையில் திண்டுக்கல் மருத்துவ கல்லூரி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்