ஜெயலலிதா ஆட்சியில் 40 புதிய பேருந்து பணிமனைகள் துவக்கம்

சென்னை, ஜூன் 19–
ஜெயலலிதா ஆட்சியில் 40 புதிய பேருந்து பணிமனைகள் துவக்கப்பட்டுள்ளது என்று  போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, திருப்பத்தூர் தொகுதி உறுப்பினர் பெரியகருப்பன் கேள்வி எழுப்பினார். திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட சிங்கம்புனரியில் போக்குவரத்து கழக பணிமனை அமைக்க அரசு அவன செய்யுமா? இந்த பகுதி பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் மைய பகுதியாக அமைந்துள்ளது. இங்கு பணிமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, தங்கமணி ஆகியோர் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
அதற்கு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில் அளிக்கையில்,  திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட சிங்கம்புனரியில் போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு பணிமனை அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை. ஏன் என்றால்,  சிங்கம்புனரியிலிருந்து 23 கி.மீ. தூரத்தில் திருப்பத்தூரிலும், 30 கி.மீ. தூரத்தில் பென்னமராவதியிலும், அருகில் மேலூர் மற்றும் நத்தத்திலும் பணிமனைகள் உள்ளன. புதிய பணிமனை அமைக்க குறைந்தபட்ச 40 கி.மீ. தூரம் இருக்க வேண்டும். எனவே  சிங்கம்புனரியில் பணிமனை அமைக்கவேண்டிய அவசியம் கிடையாது. அருகில் உள்ள மற்ற பணிமனையில் குறைந்த அளவே பேருந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 74 பணிமனைகள் உள்ளன. அம்மா ஆட்சியில் 40 புதிய பணிமனைகள் துவக்கப்பட்டுள்ளது. தேவை இருக்கும்பட்சத்தில் உறுப்பினரின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்றார்.
அதை தொடர்ந்து உறுப்பினர் பெரியகருப்பன் கூறும்போது, மாவட்ட தலைநகரங்களிலிருந்து ஏ.சி. பேருந்து இயக்கப்படுகின்றன. சிவகங்கையிலிருந்து இயக்கப்படும் ஏ.சி. பேருந்து  காரைக்குடி, திருப்பத்தூர், புதுக்கோட்டை வழியாக செல்கிறது. புதுக்கோட்டையிலிருந்து ஏ.சி. பேருந்து இயக்கப்படுவதால், சிவகங்கையிலிருந்து இயக்கப்படும் ஏ.சி. பேருந்தை காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புனரி வழியாக இயக்க வேண்டும். அதேபோல் 12 ஏ என்ற பேருந்து வழித்தடம் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் 10 வழித்தடங்களில் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்றார்.
அதற்கு அமைச்சர் பதில் அளிக்கையில், 12ஏ பேருந்து தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் ஏ.சி. பேருந்து தொடர்பாகவும் அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.