ஜெயலலிதா அரசு கூட்டுறவு சங்கங்களுக்கு 204 கட்டிடங்களை கட்டி கொடுத்து சாதனை

சென்னை, ஜூன். 18–
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது குளச்சல் தொகுதி உறுப்பினர் பிரன்ஸ் கேள்வி எழுப்பினார். சரல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அரசு ஆவண செய்யுமா என்றார்.
அதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளிக்கையில்,
ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதிய அலுவலகம் கட்ட ரூ.20 லட்சத்திற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் போது சரல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.
ஜெயலலிதாவின் அரசு 204 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய கட்டிடங்களை கட்டிக்கொடுத்துள்ளது என்றார்.
ஆராய்ச்சி நிதியிலிருந்தும், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்தும் நிதி பெற்ற புதிய அலுவலக கட்டிடம் கட்டித் தரப்படும். கூட்டுறவு சங்கங்களில் வரன்முறைக்கு உட்பட்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு கடன் கொடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
சோழிங்கநல்லூர் தொகுதி உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் எழுப்பிய துணை கேள்வியில் கூட்டுறவு சங்கங்களில் வட்டியை குறைக்கவும், சோழிங்கநல்லூர் கூட்டுறவு சங்கத்திற்கு கட்டிடம் கட்டிக் கொடுக்கவும் அரசு ஆவன செய்யுமா? என்றார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, சோழிங்கநல்லூரில் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிலம் பெற்று தந்தால், இந்த ஆண்டிலேயே கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூட்டுறவு சங்கங்களில் வட்டி அதிகம் இல்லை. குறைந்த அளவிலேயே வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.