ஜனாதிபதி வேட்பாளர் பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி, ஜூன் 19–
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
ஜூலை மாதத்துடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஜனாதிபதி  தேர்தல் ஜூலை 17ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் 14ம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்த உள்ளன.
இந்நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி மன்றக் குழு இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா அறிவித்தார்.
இக்கூட்டத்தில் கட்சியின் மூத்தத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி ஆகியோரைச் சந்தித்து ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளரை நிறுத்தும் முடிவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என பாரதீய ஜனதா சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று கூடிய ஆட்சி மன்ற நிர்வாகிகள் குழு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்துள்ளது.
வழக்கறிஞரான ராம்நாத் கோவிந்த் உத்தரப்பிரதேசத்தில் இருந்து 2 முறை மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்.
ராம்நாத் கோவிந்த் தற்போது பீகார் கவர்னராக இருக்கிறார். இவர் பாரதீய ஜனதா கட்சியில் நீண்ட நாள் கட்சிப் பணி ஆற்றியவர்.
வழக்கறிஞரான ராம்நாத் கோவிந்த் பாரதீய ஜனதா கட்சியில் தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.