ஜனாதிபதி தேர்தல்: எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனி நிறங்களில் வாக்குச் சீட்டு

புதுடெல்லி, ஜூன் 19–
ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனி நிறங்களில் வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு
உள்ளது.
இதில் வருகிற 28-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. இந்த மனுக்கள் பரிசீலனை 29-ந் தேதி எனவும், வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 1-ந் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதியை போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்ய ஆளும் பாரதீய ஜனதா விரும்புகிறது.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும் இதற்கு விருப்பம் தெரிவித்து உள்ள நிலையில், பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. எனினும் இதில் இழுபறி நீடித்து வருவதாக தெரிகிறது.
அப்படி இரு அணிகள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் ஜூலை 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படும்.
இதில் பதிவான ஓட்டுகள் 20-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்தப்படும்.
இதற்காக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனி நிறங்களில் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி எம்.பி.க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.க்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் தயாராகி வருகின்றன.
ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் உள்ள 4128 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 776 எம்.பி.க்கள் வாக்களிக்கின்றனர்.