குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கு, காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்: திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி துவக்கினார்

திருவள்ளூர், ஜூன்.19–
திருவள்ளூர் மாவட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக 0–5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாமினை அரசு தலைமையிட மருத்துவமனையில்  கலெக்டர் சுந்தரவல்லி இன்று (19–ந் தேதி) துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம்  கலெக்டர் பேசியதாவது:–
இந்த முகாம் 1.7.2017 வரை இரண்டு வாரங்களுக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில் திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த 0–5 வயதுள்ள 2,22,708 குழந்தைகளுக்கு 1,426 அங்கன்வாடி வார பணியாளர்களும் இத்துறையைச் சார்ந்த 302 பணியாளர்களும் மொத்தம் 1,728 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு 1,808 அங்கன்வாடி மையங்களில் மூலம் வயிற்றுப் போக்கினை தடுக்கும் பொருட்டு குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ் உப்புக்கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்படும்.
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ். உப்புக்கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகள் கொடுத்து அவர்களுடைய ஆரோக்கியத்தினை உறுதிபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இம்முகாமில் திருவள்ளூர் மாவட்ட இணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்) ஏ.தயாளன், திருவள்ளூர் துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) பிரபாகரன், அரசு தலைமையிட மருத்துவமனை கண்காணிப்பாளர் நாகேந்திர பிரசாத், மாவட்ட பயிற்சி மருத்துவர் தீபலட்சுமி மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.