உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள்

விழுப்புரம், ஜூன்.19–-
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம்  மற்றும் கள்ளக்குறிச்சியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி இந்திரா பானர்ஜி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நூட்டி ராம் மோகன ராவ், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி சரோஜினிதேவி வரவேற்றார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை திறந்துவைத்து கோர்ட் பணிகளை துவக்கிவைத்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மோகன ராவ், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலை வகித்தனர். பிரமுகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
பின்னர் உளுந்தூர்பேட்டையில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறக்கப்பட்டு உளுந்தூர்பேட்டையில் கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டை இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் சேர்ந்து உளுந்தூர்பேட்டை சக்கரவர்த்தி லலிதா திருமண மண்டபத்தில் விழா நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட தலைமை நீதிபதி சரோஜினி தேவி தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் காமராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் குமரகுரு, பிரபு, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உளுந்தூர்பேட்டை வக்கீல்கள் சங்க தலைவர் சந்திரசேகர் வரவேற்றார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மோகன ராவ், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் உளுந்தூர்பேட்டையில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம்ஆகியவற்றை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
ஒரே பாதையில்
பயணிக்க வேண்டும்
இதில் உயர்நீதிமன்ற தலைமை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது:–-
உளுந்தூர்பேட்டை வக்கீல்களின் 50 ஆண்டு கால கனவான இந்த சார்பு நீதிமன்றத்தை திறந்து வைப்பதில் நான் பெருமையடைகிறேன். இந்த நீதிமன்றம் மூலம் பல்வேறு வழக்குகளுக்காக பொதுமக்கள் வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை.
நீதிபதிகளும், வக்கீல்களும் நீதிக்காக ஒரே பாதையில் பயணிக்க வேண்டும். வக்கீல்கள் தேவையற்ற நீதிமன்ற புறக்கணிப்புகளை கைவிட வேண்டும். நீதித்துறையில் பெண்களின் பங்கு அதிகம் இடம் பெறவேண்டும். இளம் வக்கீல்கள் நீதிமன்றங்களில் உள்ள நூலகத்திற்கு சென்று படித்து, தரமான வழக்குகளை நடத்தவேண்டும். வக்கீல்கள் சங்கத்தில் உள்ள மூத்த வக்கீல்கள் விடுமுறை நாட்களில் இளம் வக்கீல்களுக்கு வழக்குகள் சம்பந்தமாக சட்டவிழிப்புணர்வுகளை வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-–
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் அரசு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து வட்டத்திலும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களை கொண்டு வர தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்படும். உளுந்தூர்பேட்டையில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1 கொண்டு வரவேண்டும் என்று உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையின் அடிப்படையில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது நீதிமன்றம் இங்கு தொடங்கப்பட்டுள்ளது.
100% சொந்த கட்டிடம்
தமிழகத்தில் நீதித்துறையானது சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் 100 சதவிகிதம் அரசு சொந்த கட்டடத்தில் இயங்கிவருகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்ப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து வட்டத்திலும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களை கொண்டுவர தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்படும். உளுந்தூர்பேட்டையில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவை கொண்டு வரவேண்டும் என இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரால் மறைந்த முன்னால் முதலமைச்சர் அம்மாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் அம்மா உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நீதித்துறையின் மானிய கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார். உளுந்தூர்பேட்டையில் சார்பு மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் அமைய உங்களுக்கு உறுதுனையாக இருந்த உங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றியினை தெரிவிக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அனைத்தையும் அப்படியே இந்த அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த ஓரு ஆண்டு மட்டும் ரூ.659கோடி நீதித்துறைக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீதித்துறைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர இவ்அரசு முனைப்பாக உள்ளது.
இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதிகள் சுபா.அன்புமணி, மாவட்ட அரசு வக்கீல் சீனுவாசன், அரசு வக்கீல்கள் கிருஷ்ணன், துரைசாமி, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைய தலைவர் ஞானமூர்த்தி, உளுந்தூர்பேட்டை அண்ணா தி.மு.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் ஜி.மணிராஜ், நகர செயலாளர் துரை, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாயிராம், உளுந்தூர்பேட்டை வக்கீல்கள், சங்க வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.