கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி: அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பார்வையிட்டார்

கிருஷ்ணகிரி, ஜூன். 18–
கிருஷ்ணகிரியில் தொடங்கிய 25-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த 35 வகையான மாங்கனிகளையும், அரங்குகளையும் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 25-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மாங்கனிகளையும், அரங்குகளையும் அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி பார்வையிட்டார்.
தொடர்ந்து வேளாண்மைத் துறை சார்பில் 72 பயனாளிகளுக்கு ரூ. 1,74,215 மானியத்தில் தேசிய மானாவாரி இலக்கு திட்டத்தின் மூலம் துவரை, உளுந்து, ராகி, கொள்ளு விதைகளும், 100 சத மானியத்தில் 3 விவசாயிகளுக்கு சொட்டுநீர்ப் பாசன கருவிகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 28 பயனாளிகளுக்கு ரூ.1,18,680 மானியத்தில் விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், 5 பேருக்கு விபத்து நிவாரணமாக தலா ரூ.1 லட்சம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
கண்காட்சியில் வேளாண்மைத் துறை சார்பில் மாம்பழம், கத்திரிக்காய், பூசுணை, பீட்ரூட் ஆகிய காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மா விவசாயிகளுக்கான போட்டி அரங்கில், மல்கோவா, நீலம், பெங்களூரா, செந்தூரா, ருமானி, பங்கனப்பள்ளி, அல்போன்சா, இமாயூதின், மல்லிகா, பீத்தர், ரத்ணா, தசேரி உள்ளிட்ட 35 வகையான மா ரகங்கள் இடம் பெற்றிருந்தன.
தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு வகையான பூக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மாவில் இருந்து தயாரிக்கப்படும் ஊறுகாய், உணவு பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் நகர்மன்றத் தலைவர் தங்கமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.