ஜெர்மன் தூதரகத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து விசா பெற முயற்சி: 2 பேர் கைது

சென்னை, ஜூன். 17–
ஜெர்மன் தூதரகத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து விசா பெற முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ஜெர்மன் துணை தூதரகத்தின் அதிகாரி லூகாஸ் கர்சர் (34) அபிராமபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ஜெர்மன் நாடு செல்ல விசா பெறுவதற்காக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகுமார் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகிய 2 பேர் நேர்முக தேர்வுக்கு வந்ததாகவும், அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரிபார்த்தபோது அது போலியானது என்றும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில், அபிராமபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்படி தூதரகத்திற்கு சென்று அங்கிருந்த முத்துகுமார் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோரிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில், முத்துகுமார் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோர் ஜெர்மன் நாட்டிற்கு செல்ல விசா பெறுவதற்காக சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்ததும், இவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் எற்கனவே ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தது போன்று போலி அனுபவ சான்றிதழ் சமர்ப்பித்ததும், தெரியவந்தது.
அதன்பேரில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த மன்னார்குடி தாலுக்கா ஆதிநாயக்கன்பாளையம் தெருவை சேர்ந்த முத்துகுமார் (30) மற்றும் திருத்துறைப்பூண்டி கீழக்காடு தென்புறம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (29),  ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.