ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களை மீட்க நடவடிக்கை

புதுடெல்லி, ஜூன் 17–
கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் இந்தியர்கள் 40 பேர் கடத்தப்பட்டனர். இதில் ஒருவர் மட்டும் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி இந்தியா வந்துள்ள நிலையில், 39 பேரின் நிலை என்னவென்பதே தெரியாமல் இருந்தது. 39 பேரையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் விடுவித்ததாக மற்றொரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்த, ஹர்ஜித் மசி, இந்தியர்கள் 39 பேர் மற்றும் வங்க தேசத்தினர் 50 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று விட்டதாக பரபரப்பு பேட்டி அளித்தார். ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள மத்திய அரசு 39 பேரும் உயிரோடு இருப்பதாக கூறியிருந்தது.
இந்நிலையில், 39 பேரை கண்டுபிடிக்க இந்தியா பல்வேறு நாடுகளின் உதவியை நாடி வருவதாக வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாத தொடக்கத்தில் 39 பேரின் குடும்பத்தினரை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்ததார் என்றும் பாக்லே தெரிவித்தார்.
எனவே 39 பேரையும் மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்தியாவிற்கு உதவி வரும் நாடுகள், உதவ தயாராயிருக்கும் நாடுகள் என நட்பு நாடுகள் அளித்த தகவலின்படி 39 பேரும் உயிரோடு தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் கூறினார். அவர்கள் கொல்லப்பட்டது குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்பதை பாக்லே குறிப்பிட்டிருக்கிறார். ஐ.எஸ். தீவிரவாதிகள்  கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 40 இந்தியர்கள் மற்றும் 50 வங்கதேசத்தவரை கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 11ம் தேதி கடத்திச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.