இங்கிலாந்து பாராளுமன்றம் அருகே மர்ம நபர் கத்தியுடன் கைது

லண்டன், ஜூன் 17–
இங்கிலாந்து தலைநகர் லண்டன் பாலத்தில் 3 தீவிரவாதிகள் கார் மூலம் மோதியும், கத்திக்குத்து தாக்குதலும் நடத்தினார்கள். அதில் 8 பேர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் மத்திய லண்டனில் உள்ள பாராளுமன்றத்தின் வெஸ்ட் மினிஸ்டார் ‘கேட்’ பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஒரு மர்ம நபர் சுற்றித்திரிந்தான்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவனை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்தனர். பின்னர் அவனை வேனுக்குள் தூக்கிப் போட்டு சோதனை நடத்தினர்.
அப்போது அவனிடம் கத்தி இருந்தது தெரிய வந்தது. எனவே அவனை கைது செய்த போலீசார் தீவிரவாதியாக இருக்கலாம். மீண்டும் ஒரு தாக்குதலுக்கு அவன் தயாராகி இருக்கலாம் என சந்தேகப்பட்டனர். எனவே அவனிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவன் தீவிரவாதி இல்லை என போலீசார் தெரிவித்தனர். முன்னதாக மர்ம நபர் கைது செய்யப்பட்டவுடன் பாராளுமன்றத்தின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பாராளுமன்றம் திறக்கப்பட்டது.