வெளியூர்களுக்கு சென்னையில் இருந்து இன்று 4054 சிறப்பு பஸ்கள்

201701111117008177_pongal-festival-special-bus-service-starting-from-5_secvpf-gif

சென்னை,ஜன.12–
பொங்கல் பண்டிகையொட்டி சென்னையில் இருந்து இன்று 2-வது நாளாக 4054 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுவரை 2 லட்சத்து 2 ஆயிரத்து 130 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க 5 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கோயம்பேடு, அண்ணா நகர் மேற்கு, அடையாறு இந்திரா நகர், தாம்பரம் சானிடோரியம், பூந்தமல்லி ஆகிய பஸ்நிலையங்களில் இருந்து நேற்று சிறப்பு பஸ்கள் புறப்பட்டு சென்றன. சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. இது வரையில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 130 பேர்  முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து 85,520  பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.
வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப 41,800 பேர் முன்பதிவு செய்தனர். நேற்று மட்டும் முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லாத பயணிகள் என மொத்தம் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று 2-வது நாளாக 4054 பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்பதிவு செய்த பஸ்களுக்கு பஸ் புறப்படக்கூடிய இடங்களுக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து முன் பதிவு செய்த பயணிகள் மட்டுமின்றி முன்பதிவு செய்யாத பயணிகளும் பயணம் செய்யலாம். அங்கு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தென்மாவட்ட பகுதிகளை மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், சேலம், கோவை கள்ளக்குறிச்சி ஆகியவற்றிற்கு இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நீண்ட தூரம் செல்லக் கூடிய இந்த பஸ்களில் பயணம் செய்ய பயணிகள் இன்று அதிகளவு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலையில் இருந்து பயணிகள் கூட்டம் அதிகமாக வாய்ப்பு இருப்பதால் அங்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் பயணம் செய்வோரின் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) மேலும் அதிகரிக்கும். வார இறுதி நாட்களில் பொங்கல் பண்டிகை வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் பயணத்தையே பெரிதும் விரும்புவார்கள். நாளை 4147 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.