முதலமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டி: வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரூ.4½ லட்சம் பரிசு

1212

சென்னை, ஜன.12–
சென்னை வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான  நீச்சல் விளையாட்டுப் போட்டியினை  பள்ளிக் கல்வி, விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சர்  க.  பாண்டியராஜன்  துவக்கி வைத்து வெற்றி பெற்ற 6 வீரர்கள்–வீராங்கனைகளுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்துக்கான பரிசுத் தொகை வழங்கினார்.
2013–14ம் ஆண்டு முதல் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தின் அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கவும், அவர்களை விளையாட்டுக்களில் ஈடுபடுத்தவும், மாநில அளவிலான ‘‘முதலமைச்சர் கோப்பைக்கான’’ விளையாட்டுப் போட்டியினை நடத்திட ஆணையிட்டார். இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதன் முக்கிய நோக்கம் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொண்டு பயன் பெறுவதுமாகும்.
அதன் அடிப்படையில், 2016–17ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியினை மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகள் இருபாலருக்கும் கடந்த டிசம்பர் 27–ந்தேதி பல்வேறு மாவட்டங்களில் துவங்கியது. இந்த போட்டிகள் பிப்ரவரி 15–ந்தேதி வரை நடத்தப்படுகிறது. இதுவரை  டேக்வோண்டோ, கைப்பந்து, நீச்சல் போட்டிகள் திருப்பூர், திண்டுக்கல், சென்னை மாவட்டங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் 15–ந்தேதி முதல் 17–ந்தேதி வரை பளுதூக்குதல் போட்டியும், சென்னையில் 19–ந்தேதி முதல் 21–ந்தேதி வரை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியும், மதுரையில் 21–ந்தேதி முதல் 23–ந்தேதி வரை தடகள போட்டியும், திருச்சியில் 25–ந்தேதி முதல் 27–ந்தேதி வரை ஜுடோ  போட்டியும், நாகப்பட்டினத்தில் 27–ந்தேதி முதல் 29–ந்தேதி வரை கடற்கரை கையுந்துபந்து போட்டியும், நாமக்கல்லில் பென்சிங்  போட்டியும், விருதுநகரில் குத்துச்சண்டை போட்டியும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்.
இந்த மாநில அளவிலான விளையாட்டில் முதல் இடம் வென்ற விளையாட்டு வீரருக்கு தலா ரூ.1 லட்சமும், 2–ம் இடம் வென்ற விளையாட்டு வீரருக்கு தலா ரூ.75 ஆயிரமும், 3ம் இடம் வென்ற விளையாட்டு வீரருக்கு தலா ரூ.50 ஆயிரமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் 599 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையாக ரூ.5 கோடியே 66 லட்சத்து 61 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.
சென்னை வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான  நீச்சல் விளையாட்டுப் போட்டியினை  பள்ளிக் கல்வி, விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சர்  க.  பாண்டியராஜன்  துவக்கி வைத்து வெற்றி பெற்ற 6 வீரர்கள்–வீராங்கனைகளுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்துக்கான பரிசுத் தொகை வழங்கினார்.
ஆண்கள் பிரிவுக்கான 100 மீ பட்டர்பிளை நீச்சல் போட்டியில் காஞ்சிபுரம் சி.எஸ்.பி.பிரித்விராஜ் முதலிடத்தையும்,  சென்னை எம். கௌதம் 2–ம் இடத்தையும், திருவள்ளூர்   எம். எஸ். பவன் குப்தா 3-ம் இடத்தையும் பிடித்தனர். பெண்களுக்கான பிரிவில்  சென்னை முக்தா மல்லா ரெட்டி முதலிடத்தையும், தூத்துக்குடி எஸ். மம்தா சிவதர்ஷினி 2–ம் இடத்தையும், திருநெல்வேலி எஸ். ஜி. தேவி மகராசி 3–ம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு ரூ. 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கான பரிசுத் தொகை அமைச்சர் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சிக்கு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை  முதன்மைச் செயலர் டாக்டர். ராஜேந்திர குமார் முன்னிலை வகித்தார்.  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய  அலுவலர்கள், பயிற்றுநர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள்  கலந்து கொண்டனர்.
நீச்சல் போட்டிகளில் 550 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அணி  மேலாளர்கள் பங்கேற்றனர்.
மேலும், இந்த முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியினை ரூ.809 லட்சத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.