தமிழக சட்டப்பேரவை ஜனவரி 23–-ம் தேதி கூடுகிறது

13

சென்னை,ஜன.12–
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளதாக பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடந்து முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை முதல் கூட்டம் ஜூன் மாதம் கவர்னர் உரையுடன் தொடங்கியது. பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்பட்டது. செப்டம்பர் 2-ம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிந்தது.
அதன்பிறகு கடந்த ஆண்டு கடைசியில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைப்பதாக கவர்னர் அறிவித்திருந்தார். இதற்கிடையில், முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது, உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கலாம் என பேசப்பட்டது. ஆனால், பேரவை கூட்டப்படவில்லை.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வரும் 23-ம் தேதி கூடுகிறது. இதுதொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கவர்னர் உத்தரவின்பேரில் சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் 23-ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சட்டமன்ற மைய மண்டபத்தில் கூடுகிறது’ என அறிவித்துள்ளார்.
கவர்னர் உரையுடன் கூடும் இந்த கூட்டத்தொடர் 5 நாட்கள் நடைபெறலாம் எனத் தெரிகிறது. இக்கூட்டத்தொடரில் முதல் நாளில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை ஒத்திவைக்கப்படும் எனவும், அதன்பின்னர் கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெறும் எனவும் தெரிகிறது.