சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு: சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் பேசினார்

201701120509449097_O-panneerselvam-talks-with-Chandrababu-Naidu-in-Andhra_SECVPF.gif

சென்னை, ஜன.12-
தெலுங்கு கங்கை திட்டத்தின்படி சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு ஆந்திரா சென்றார்.
தமிழகத்தில் 2015ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடுமையான மழை பெய்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பிவழிந்தன. ஆனால் 2016ம் ஆண்டு தமிழகத்தில் பருவமழை பொய்த்துப்போனது. இதனால் வறட்சியால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 57 சதவீதம் மழை குறைவாகப் பெய்துள்ளது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய ஏரிகள் வறண்டு குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்ப்பதற்காக சென்னைக்கு கிருஷ்ணா நீரை திறந்துவிடும்படி ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் கடிதம் எழுதினார்.
அதனை ஏற்று சென்னைக்கு கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் கடந்த 9–ந்தேதி திறக்கப்பட்டது. 16–ந்தேதி அந்த தண்ணீர் தமிழக எல்லையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடிநீர் தேவை பற்றி விவாதிப்பதற்காகவும், தெலுங்கு கங்கை திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ஆந்திர மாநிலத்தின் தலைநகரம் அமராவதிக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்றார்.
அங்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு வேலகபுடியில் உள்ள இடைக்கால அரசு வளாகத்தில் நடைபெறுகிறது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனையை ஏற்று இந்த பேச்சுவார்த்தைக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார்.
தெலுங்கு கங்கை நீர் பங்கீடு தொடர்பாக ஆந்திர பிரதேசத்துக்கு சென்று அங்குள்ள முதல் மந்திரியுடன் தமிழக முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு இரண்டு மாநிலங்களுக்கும் இடையே கடிதப் போக்குவரத்து மட்டுமே இருந்து வந்தது.
தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தத்தின்படி ஆந்திர விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.400 கோடி தமிழகம் கொடுக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது.
இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய ஆந்திர மாநில நிதித்துறை மந்திரி ராமகிருஷ்ணுடு, ரூ.400 கோடி பங்கீட்டை வழங்கும்படி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இந்த சந்திப்பின்போது வேண்டுகோள் விடுப்போம்” என்று குறிப்பிட்டார்.