எம்.ஜி.ஆர். சிலைக்கு 17–ந்தேதி சசிகலா மாலை அணிவிக்கிறார்

3146

சென்னை, ஜன. 12–
அண்ணா தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 100-–வது ஆண்டு பிறந்த நாள் வரும் 17–ந்தேதி (செவ்வாய்க் கிழமை) தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது.
17–ந்தேதி அன்று காலை 10–45 மணிக்கு   சென்னை  ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமைக் கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.  சிலைக்கு, அண்ணா தி.மு.க. பொதுச்  செயலாளர் சசிகலா மாலை அணிவித்து வணங்குகிறார்.
எம்.ஜி.ஆர்.  100-–வது ஆண்டு பிறந்த நாள் மலரையும் அவர் வெளியிடுகிறார்.
இதனை தொடர்ந்து 104 நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.1  லட்சம் நிதி உதவி வழங்குகிறார்.
இது குறித்து அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
அண்ணா தி.மு.க. நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் பாரத் ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 100-வது  ஆண்டு பிறந்தநாளான 17–ந்தேதி செவ்வாய்க் கிழமை காலை 10.45 மணிக்கு,  சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில்  அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு, அண்ணா தி.மு.க. பொதுச்  செயலாளர் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, புரட்சித் தலைவரின்  100-வது ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளார்.
104 நலிந்த தொழிலாளர்களுக்கு
தலா ரூ.1 லட்சம்
அதனைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் சசிகலா, கழக அண்ணா  தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய்  வீதம் மொத்தம் 1 கோடியே 4 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்க  உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும்,  அமைச்சர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும்,  கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர்  எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி,  மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு,  சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ  அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்  பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு  அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக்  கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.