2020ல் முன் வரிசை 4 நாயகர்களில் விஜய்வசந்த்; நாளும் பேசப்படுவார்!

207

இன்றைய தேதியில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இளம் நாயகன் விஜய் வசந்தின் தலையெழுத்து, நடப்பு 2017க்குப் பிறகு திருத்தி எழுதப்பட்டுவிடும்.
1. கடமையில் முழு அர்ப்பணிப்பு,
2. கவனத்தை ‘சினிமா தொழிலில் மட்டுமே’ மையப்படுத்தி, வேறு எதிலும் சிதறவிடாமல் இருத்தல்,
3. ஆரோக்யமான சிந்தனையோடு புதுவரவாக கதவைத் தட்டும் இளம் இயக்குனர்களை (முன் பின் தெரியாவிட்டாலும்… பரவாயில்லை) இரு கரம் நீட்டி வரவேற்று வித்யாசமான கதையாக இருந்தால் காது கொடுத்தல்,
4. முன்வரிசை பிரபல இயக்குனர்கள் அழைத்து, கேரெக்டர் கொடுத்து, அதிகபட்சம் 400 நாட்கள் காக்க வைத்தாலும் பொறுமை காத்தல்,
– ஆகிய நான்கையும் கெட்டியாய் பிடித்துக் கொண்டு பொறுமை காக்கட்டும் விஜய் வசந்த், 2020களில் முன்வரிசை நாயகர்கள் நால்வரில் ஒருவர் என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லலாம். ‘அச்சமின்றி’!
இப்படியொரு நம்பிக்கையை விதைத்திருக்கிறது என் மனசுக்குள் ராஜபாண்டியின் ‘அச்சமின்றி’ சித்திரம்!
சென்னை600 028ல் அறுவர் கூட்டணியோடு வலம் வந்த விஜய் வசந்த், ‘அச்சமின்றி’… யில் இப்படி! ஆச்சரியம் எழும்.
அருமையாக வேலை வாங்கி நடிக்க, நடிக்க, டூயட்டில் கலக்க, ஆக்ஷன் அடிதடியில் பொறி பறக்க வைத்திருக்கிறார் விஜய் வசந்த் என்று ஆனந்தப் படலாம். அதற்கெல்லாம் அஸ்திவாரமே ‘ராஜபாண்டி’ என்றும் ‘அச்சமின்றி’ சொல்லலாம்.
பிலிம் இன்ஸ்டிடூட் மாணவர் ராஜபாண்டி. கதை – திரைக்கதை – இயக்கம். கையில் எடுத்துக் கொண்டிருப்பது என்னவோ கடந்த காலத்தில் வந்து போயிருக்கும் பல்வேறு ஆக்ஷன் பார்முலா கதையின் சாயல் என்றாலும்–
கதைக்கான காட்சிகளை நகர்த்தியிருக்கும் உத்தியிலும், சரண்யாவின் கேரெக்டரை வடித்திருக்கும் புத்தியிலும்
க்ளைமாக்ஸ் கோர்ட் காட்சிகளில் வசனகர்த்தா ஜி.ராதாகிருஷ்ணனின் ஒவ்வொரு வரியும் காதில் ஒலிக்கும் விதத்தில் பேனாவை உதற வைத்திருப்பதிலும்… ராஜபாண்டியின் திறமை பளிச்சிடுகிறது.
ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட் கும்பலில் ஒருவனாக அறிமுகமாகும் நாயகன் விஜய் வசந்த். இவனது சக குடும்பம் சண்முகசுந்தரம் – தேவதர்ஷிணி – கருணாஸ். திருட்டு கும்பலின் காமெடி கலாட்டாவோடு நகரும் கதையில் – சமுத்திரகனி வந்ததும் திரைக்கதையில் 4 கால் பாய்ச்சல், ராஜபாண்டியிடம் காக்கிச்சட்டைக்குள்ளேயே ஒரு கறுப்பு ஆடு பரத் ரெட்டி என்று அடையாளம் காணப்பட்டதும் இன்னும் சூடு பிடிக்கிறது
கல்வி – மையங்களில் அநியாயம் அக்கிரமத்துக்கு பிள்ளையார்சுழி போடுவதே சரண்யா தான் என்று தெரியவரும்போது அதிர்ச்சி. க்ளைமாக்சில் சாமர்த்தியமாக வாதத்தை நடத்திவிட்டு வெளியேறும் போது கார் விபத்தின் மூலம் கொல்லப்படுவது சற்றும் யாரும் எதிர்பார்த்திராத முடிவு ஷங்கரின் ‘ஜென்டில்மேல்’ ஸ்டைலில்.
அமைச்சர் ராதாரவி கண்ணியம் காத்திருக்கிறார்.
கலெக்டர் தலைவாசல் அஜெய் கம்பீரமாய் நிற்கிறார்.
கும்கி அஸ்வின், வித்யா, ரோகினி குறைசொல்ல முடியாது.
ஒளிப்பதிவு : வெங்கடேஷ், இசை: பிரேம்ஜி அமரன், பாடல் : யுகபாரதி, ஸ்டண்ட் : கணேஷ்குமார், ராஜபாண்டிக்கு தோள் கொடுத்திருக்கும் தோழர்கள் வெற்றிக்கு பங்காளிகள்.
‘தாவி வரும் அலைகடல், உன்னை பார்த்தால்’ பாடல்களில் வசந்த் விஜய்யின் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் ரசிக்கலாம் நல்ல முன்னேற்றம்.
சிருஷ்டி டாங்கே கன்னத்தில் விழும் குழியில் அழகு. நடிப்புக்கெல்லாம் எங்கே சான்ஸ்?!
வினோத்குமாரின்
‘அச்சமின்றி’:
ராஜபாண்டிக்கு
இறக்கை கட்டலாம்;
விஜய் வசந்துக்கு
இரு கை தட்டலாம்!
விஜய் வசந்துக்கு இனி
வெற்றிப் பயணமே
அச்சமில்லை, அச்சமில்லை!
– வீ.ராம்ஜீ