கைதட்டலில் – காதல் தோல்வி வசனங்கள்; சிம்புவை ரசிக்கலாம் ஒவ்வொரு பிரேமிலும்!

acham-enbathu-madamaiyada-02

சிலம்பரசன் – இயக்குனர் கவுதம் மேனன் – இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மூவரும் கைகோர்த்திருக்கிறார்கள் என்பதால்… ஒரு எதிர்பார்ப்பு, சாமான்ய ரசிகன், சிம்புவின் ரசிகர்கள், ‘ஆன்லைனில்’  டிக்கெட் எடுத்துப் பழக்கப்பட்டுப் போயிருக்கும் ‘சாப்ட்வேர் – ஹார்டுவேர்’ இளம் என்ஜினியரிங் பட்டதாரிகள், கம்ப்யூட்டர் இளைஞர் – இளைஞிகள் மத்தியில்.
நம்பிக்கையோடு நடந்தவர்களுக்கு கொடுத்த காசுக்கு குறை வைக்கவில்லை என்ற திருப்தி.
இடைவேளை வரை காதலை – இளசுகள் ரசிக்கும் விதத்தில் சொல்லியிருக்கிறார் கவுதம் மேனன்.
இளசுகளை சுண்டி இழுக்கும் விதத்தில் ‘சோக்காலி…’, ‘தள்ளிப் போகாதே…’, ‘ஏனோ வானிலை மாறுதே’… என்று 3 பாடல்களை கொடுத்து, தன் பக்கம் வளைத்திருக்கிறார் நீண்ட இடைவெளிக்குப் பின்னால் ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரகுமான்.
அவளும் நானும் அமுதும் தமிழும்,
அவளும் நானும் அலையும் கடலும்,
அவளும் நானும் தவழும் மயிலும்,
அவளும் நானும் ஏறும் மரமும்…’
பாவேந்தர் பாரதிதாசனின் பாடல், விஜய் யேசுதாசின் வசீகரிக்கும் குரலில்.
பாட்டுக்கு மெட்டுக்குப் போட்டிருக்கும் ஏ.ஆர்.ரகுமானைப் பாராட்டுவதா? இல்லை அதை தன்னுடைய காமிராக் கோணங்களில் ரம்மியமாக பதிவு செய்திருக்கும் டான் மெத்ராத்தர், டான் ரெமன்ட் ஒளிப்பதிவாளர்களைப் பாராட்டுவதா?,
உள்ளத்தில் உறையும் காதலுக்கு பாரதிதாசனின் கவிதை வரிகளை தேடிப் பிடித்து திரைக்கதையில் இணைத்திருக்கும் இயக்குனர் கவுதம் மேனனின் இலக்கியச் சுவை ஈடுபாட்டைப் பாராட்டுவதா?
எழுப்பிடும் கேள்விக்கு ஒரே பதில் : பாவேந்தர் பாரதிதாசன் பாடலில் ஒளியும் – ஒலியும் – மா, பலா, வாழை முக்கனி தரும் சுவையில்.
உலகத் தமிழராய்ச்சி ஆர்வலர்கள், பூமிப் பந்தில் எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் உச்சுக் கொட்டி ரசிப்பார்கள். மூவர் கூட்டணிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
சிலம்பரசன் – முற்பகுதியில் காதல், காதல், காதல். பிற்பகுதியில் மோதல், மோதல், மோதல். இப்படி காதலுக்கும் மோதலுக்கும் இடையில் முகம் காட்டியிருக்கும் சிலம்பரசன், தான் ஒரு காதல் இளவரசன்… என்பதையும், ஆக்ஷன் பிரின்ஸ் என்பதையும் அருமையாக நிரூபித்திருக்கிறார். வசன உச்சரிப்பில் இவரது ஸ்டைல், அது ஒரு தனி ரகம், தனி சுகம்.
தாடி வைத்த முகம். இதுவரைக்கும் இல்லாத மாதிரி ஒரு சுற்று பெருத்த உடல். நீண்ட இடைவெளியில் பார்க்கிறோம் என்றாலும், முந்தைய படங்களில் ரசித்ததைப் போலவே ரசிக்க வைத்திருக்கிறார். இதில் இன்னொரு சிறப்பு அம்சம், அவர் பேசும் வசனம் 3 இடங்களில் அது அவரே தனக்குத்தானே எழுதிக் கொண்டாரா இல்லை கவுதம் மேனன், சிம்புவின் ‘குணாதிசயத்தை’ கண் எதிரில் பார்த்த அனுபவத்தில் பேனா பிடித்திருக்கிறாரா… கேள்விகள் எழும். எது எப்படியோ, ‘களுக்கென்று’ சிரிப்பு வரும். சந்தோஷமாய் கைதட்டி ரசிக்க வைக்கும். (‘பஞ்ச் டயலாக்கை பேசினால் மட்டுமே ஹீரோவுக்கு கைதட்டல் விழ வேண்டுமா என்ன!)
நண்பர்கள் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டு, தன் காதலிகளை 1, 2, 3… என்று பட்டியல் போட்டு ஒவ்வொருவரும் பிய்த்துக் கொண்டு போனது எதனால் என்று சொல்லிக் கொண்டு வரும்போது,
‘என் கதை தான் தமிழ்
நாட்டுக்கேத் தெரியுமே….!’ என்று  சிம்பு சொல்லி நிறுத்தும் காட்சி.
* ‘அவளைப் பார்க்க லவ்… பேசப் பேச லவ்…!’ என்று மஞ்சுமா மோகன் பற்றி நண்பர்களிடம் சிம்பு வர்ணிக்கும் காட்சி!
* ‘தப்பா எதுவும் செய்யாமலே தப்பாப் பேசினால் தப்பு தானே…!’ என்று சிம்பு தனக்குத்தானே அலுத்துக் கொள்ளும் காட்சி!
இந்த 3 காட்சிகளிலும் காதல் – காதலில் தோல்வி – காதலின் எதிர்பார்ப்பு என்ற மூன்றையும் ‘அனுபவப் பூர்வமாய்’ வெளிப்படுத்தும் முகபாவமும், வசன உச்சரிப்பும் அது சிம்பு ஸ்டைல். அவரைப் பற்றி ஊடகங்கள் செய்திகளின் வழியாக உணர்ந்திருக்கும் இளைஞர்கள் கூட்டம், தியேட்டரில் என்னமாய் ரசிக்கிறது? இது, நிழலில் நிஜம் சிம்புவுக்கு கிடைத்திருக்கும் வெற்றி.
பாபா சேகல் – காமத், போலீஸ் அதிகாரி வேடத்தில் சிம்புவை துரத்தோ துரத்தோ என்று துரத்திக் கொண்டிருக்கும் வெறித்தனமான வில்லன். அவருக்கு ரஜினிகாந்த் பெயரில் போலீஸ் அதிகாரியாக சிம்பு நேரில் வந்து ‘ஆப்பு’ வைக்கும் க்ளைமாக்ஸ் – எதிர்பாராதது.
மஞ்சுமா மோகன் – ‘குளுகுளு’ அழகி. சிரிப்பு – சுண்டி இழுக்கும் (நடிப்பதற்கு வாய்ப்பு…?!)
இடைவேளைக்குப் பிறகு கதை கோலாப்பூரில் (மகாராஷ்ட்ரா) நகர்வதால், 40%க்கும் மேல் தமிழில் துணைத் தலைப்பு. இந்தி – ஆங்கிலம் – மராத்தியில் தான் வசனம்.
காமிராவுக்கு முன் சிம்பு, நாயகன் என்றால், காமிராவுக்குப் பின் ஸ்டன் சிவா நாயகன். 50% படம் ஆக்ஷன், ஸ்டண்ட்டில் தானே நகர்கிறது!
கவுதம் மேனனின்
‘அச்சம் என்பது மடமையடா’:
சிலம்பரசின்
காதலை ரசிக்கலாம்;
ஸ்டண்ட்டையும் ரசிக்கலாம்!