ஆயுள் விருத்தி; மரண பயம் நீங்கும்: பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர்

G_T1_1133பரங்கிபேட்டை என்ற பேரூராட்சி கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய ஊர். இது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முக்கிய துறைமுகமாக விளங்கியது. இங்கு ஆங்கிலேயரை 1781ல் எதிர்த்து போராடிய ஹைதர் அலி நினைவுச் சின்னமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்கள் ஆக உள்ளன. சிதம்பரத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியாவின் முதல் கடல் உயிரின ஆய்வுக்கான கடல்சார் ஆராய்ச்சிக்கூடம் இங்கு தான் நிறுவப்பட்டுள்ளது என்பது பெருமைக்குரியதாகும். ஆங்கிலேயர் இங்கு வாழ்ந்ததால் “பரங்கி பேட்டை” என்ற பெயர் உண்டாயிற்று. நடிகர் ரஜினிகாந்தின் குருவாக கூறப்படும் பாபா  இங்கு தான் பிறந்தார். இந்த சிறிய ஊரில் சுமார் 1000 வருட பாரம்பர்யம் உள்ள அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில் பற்றி நாம் இன்று அறியப் போகிறோம்.
இங்கு வந்து வழிபட ஆயுள் விருத்தி கிடைக்கும், நோய்கள் நெருங்காத நல்ல வாழ்வும், மரண பயம் நீங்கும் என்பது ஐதீகம்.
மார்க்கண்டேயனுக்கு 16–வது வயதில் மரணம் நேரும் என்பதை சிவபெருமான் காலடியில் வீழ்ந்து பற்றி அந்த மரணத்தை வென்று என்றும் 16 வயது மார்க்கண்டேயனாக இருக்க வரம் பெற்றது போல் இங்கும் என்றும் 12 வயது சிறுவனாக இருக்க சித்திர குப்தன் ஆதிமூலேஸ்வரர் என்ற பெயர் பெற்ற சிவபெருமானை வணங்கி வரம் பெற்ற தலம் இதுவாகும்.
சித்திரகுப்தருக்கு 12 வயது வரை தான் வாழ்வு என்று விதி கூறியது. இதை அறிந்த அவரது தந்தை வசுதத்தன் மிகவும் வருந்திய பொழுது தான், சித்திர குப்தர் இங்கு வந்து சிவபெருமானிடம் வேண்டினார். எமதர்மன், தனது கணக்குப்படி உயிரைப் பறிக்க இங்கு வந்த பொழுது, சிவபெருமான் அன்னை பார்வதி தேவியை அனுப்பி எமனை தடுத்து சிவபெருமானின் சீரிய பக்தனான சித்திரகுப்தனை விட்டுவிட கட்டளையிட்டார். அதை ஏற்று சித்திரகுப்தனின் உயிரைப் பறிக்காததுடன் அவரது கூரிய அறிவை அறிந்து தன்னுடைய உதவியாளராக ஏற்றுக் கொண்டார். இதன்படி என்றும் 12 வயது இளைஞனாகவே சித்திரகுப்தர் இருக்கிறார் என்பதும் ஐதீகம். இங்கு அம்பாள் சன்னதி எதிரே சித்திர குப்தனுக்கு சிலை உள்ளது.
இந்த தலத்தில் சித்திரகுப்தருக்கு ஆயுளை நீடிக்கச் செய்ததால் இங்கு வந்து வழிபட நோய் நீங்கி சுக வாழ்வு கிடைத்து நீண்ட ஆயுள் பெற முடியும் என்பது ஐதீகம். எனவே இங்கு வந்து சதாபிஷேகம், எண்பதாம் திருமணம் ஆகிய நிகழ்வுகளை இத்தலத்தில் மகிழ்வுடன் நடத்தி வணங்கி வழிபட்டு செல்கின்றனர்.
எந்த திருக்கோவிலும் காண முடியாத பொக்கிஷமாக சுண்ணாம்பு களஞ்சியம் இங்கு உள்ளது. இது ஒரே கல்லில் உருவாக்கப்பட்டதாகும். கோவில் பராமரிப்புக்கு வெள்ளை அடிக்க இங்கு தான் சுண்ணாம்பு கலவை தயார் செய்கின்றனர்.
காஷ்யப மகரிஷி ஒரு சமயம் சிவபெருமானை வேண்டி யாகம் நடத்தினார். யாகத்திற்கு இடையூராக வருண பகவான் மழையைப் பொழிந்தார். எனவே காஷ்யபரிடம் சாபம் பெற்று தன் சக்தியை இழந்தார். தான் இழந்த சக்தியை பெற சிவபெருமானிடம் வேண்டி, தனது தவறுக்கு மன்னிப்பு தந்து திரும்பவும் சக்தி பெற கடுமையாக தவம் செய்து அருள் பெற்றார். பின்னர் வருண பகவான் கேட்டுக் கொண்டதன் பேரில் இத்தலத்தில் ஆதிமூலேஸ்வரராக சிவபெருமான் எழுந்தருளியதாக புராண வரலாறு. வருணன் அருள்பெற்ற புனித தலம் என்பதால் வருண பகவானை வேண்டினால் குறைவின்றி மழை பெய்யவும், அழிவு ஏற்படாத அளவு நீர்வளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிதம்பரம் நடராஜா கோவிலுக்கு வடகிழக்கு (ஈசான்ய) மூலையில் இத்தலம் அமைந்துள்ளதாலும், வேண்டுதல் கோரிக்கை வைப்போருக்கு அமுதம் போன்று அருளை வாரி வழங்கும் சக்தி பெற்றதால் இத்தல இறைவிக்கு அமுதவல்லி என்ற பெயர். மேலும் அம்பிகையின் கீழ் ஸ்ரீ சக்கரம் உள்ளதால் அதிக சக்தி வாய்ந்த அம்மன் என்கின்றனர். சித்திரை மாதம் முதல் ஏழு நாட்கள் இந்த அம்மன் மீதும் இறைவன் சிவபெருமான் மீதும் சூரிய ஒளி காலையில் விழும். இந்த ஏழு நாட்களிலும் சூரிய பகவானுக்கே முதல் பூஜைகள் செய்யப்படுவது சிறப்பம்சமாகும். அந்த காலங்களில் இங்கு வந்து வழிபட வாழ்க்கை சிறப்பாக அமையும் என்கின்றனர்.
அனைத்து சிவன் கோவில்களிலும் பைரவருக்கு அர்த்த ஜாம பூஜை செய்வது வழக்கம். ஆனால் இங்கு பைரவருக்கும் சித்திரகுப்தருக்கும் பூஜை செய்து நடை சாத்தப்படுகிறது. இதன் காரணம் சித்திரகுப்தரே அர்த்த ஜாமத்தில் சிவபூஜை செய்வதாக நம்பப்படுகிறது.
இங்கு முக்கிய விழாக்களாக சிவராத்திரி, பிரதோஷம், மாசிமகம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், சித்திரா பௌர்ணமி அன்று விஷேச ஆராதனைகள், ஐப்பசி மாதம் தீர்த்தவாரி, தை மாத அமாவாசை மற்றும் பண்டிகை நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தினமும் காலை 7 மணி முதல் பகல் 11 வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் திறந்து உள்ளது.
அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் அமுதவல்லி, பிரதான மூர்த்திகளாகவும், மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், பாதாள லிங்கேஸ்வரர், கஜ லட்சுமி, சூரியன், கால பைரவர், நீலாயதாட்சி, தஷிணா மூர்த்தி, ராமேஸ்வரம் ராமலிங்க சுவாமி, காசி விஸ்வநாதர், சனீஸ்வரர், துர்க்கை ஆகியோரும் தனித்தனி சன்னதிகள் வீற்று அருள்பாலிக்கின்றனர். மிகவும் புராதனமான பழைய கோவில் என்பதால் புனிதம் மிக்கதாக கருதப்படுகிறது.
அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில், பரங்கிபேட்டை, கடலூர் மாவட்டம் – 628 502
தொலைபேசி எண் : 99527 58295, 98404 56057
பற்றற்று பச்சைத்தாய் பகிர்ந்துடன் விளங்கு எழில்
பாரா தேநாள் வீணாமோ பகர்மொழி வினவிலையோ
செற்றற்றார் பற்றற்றார் தினம் செபந்த பஞ் செயும்
சீரால் ஓவா தாராவாழ் சிரவையில் வளர்சிவனே
–சந்தப்பதிகம்