குரு காவேரி ரமேஷின் தில்லானா; ஜுகல் பந்தியை கண்முன் கொண்டு வந்தார் சிஷ்யை ஜ்யோஸ்னா!

311

நிருத்யாஞ்சலி கலைப் பள்ளியின் முதல்வர் குரு காவேரி ரமேஷின் மாணவியும் கிருஷ்ணன், சசிரேகா ஆகியோரின் புதல்வியுமான ஜ்யோஸ்னாவின் அரங்கேற்றம் பாரதீய வித்யாபவன் அரங்கில் மிக விமர்சையாக நடந்தேறியது.
ஜ்யோஸ்னாவின் அரங்கேற்றத்திற்கு பிரபல கர்நாடக இசை கலைஞர் கலைமாமணி பாம்பே ஜெயஸ்ரீ, குச்சுப்புடி நடனக்கலைஞர்   கலைமாமணி மாதவபேடி மூர்த்தி தலைமை தாங்கினார்கள்.
மிக அற்புதமாக நிருத்யம், பாவம் இரண்டிலும் பாராட்டு பெற்றாள் ஜ்யோஸ்னா. மிக அற்புதமாக நடனத்தை வடிவமைத்துள்ளார் காவேரி ரமேஷ் என்று அவர்கள் பாராட்டினார்கள்.
வேணுகோபாலின் பாட்டு, ஆற்காடு பாலாஜியின் மிருதங்கம், சுரேஷின் வயலின், பி.எம்.ரமேஷின் புல்லாங்குழல், காவேரி ரமேஷின் நட்டுவாங்கம் என் அனைத்து தரப்பிலும் பாராட்டுக்களைப் பெற்றது நடனம். ஆல்பர்ட்டின் ஒப்பனை, முனைவர் ராஜேஸ்வரி, ஜனனி ஆகியோரின் நிகழ்ச்சி தொகுப்பு, பாரதிய வித்யாபவனின் ஒலி ஒளி அமைப்பு என அனைத்து அம்சங்களும் அற்புதமான சூழலை ஏற்படுத்தியது.
பாரதீய வித்யாபவன் அரங்கத்தின் இயக்குனர் ராமசாமி நாட்டியாச்சாரியார் சுவாமிநாதன், உமாதேவி  (தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர்) ஆகியோர்  ஜ்யோஸ்னாவை வாழ்த்தி பேசினர்.
‘‘அன்னை தந்தையும் தம் சொல்லை கேளாது’’ என்ற குரு அரவிந்தரின் பாடலுக்கு ஜ்யோஸ்னாவின்  சஞ்சாரி பாவமும், வேணுகோபாலின் உருக்கமான உணர்வுடன் கூடிய பாட்டும் கண்ணுக்கும் காதுக்கும் சுகமான ஆனந்தத்தை ஏற்படுத்தியது.
பரத நாட்டியம் என்றால் வர்ணம் முக்கிய அம்சமாகும். அந்த வகையில் சங்கராபரண வர்ணத்தை மிக நேர்த்தியாக ஆடி, அடவுகளில் சுத்தத்தையும், பாவத்தில் உணர்வுகளையும் கொண்டு வந்து அனுபவம் வாய்ந்த நடன மணியைப் போல சிறப்பாக ஆடினாள்  ஜ்யோஸ்னா.
‘‘அதுவும் சொல்லுவாள் அனேகம் சொல்லுவாள்’’ என்ற பதம், விரகதாபத்தை வெளிப்படுத்தும் அற்புதமான உருப்படியாகும். அதை உள்வாங்கி ஜ்யோஸ்னா மிக அற்புதமாக  பாவத்தை ஏற்படுத்திய விதம் குரு காவேரி ரமேஷின் திறமைக்கு சான்று.
சுவாதி திருநாளின் தனஸ்ரீ ராகத்தில் அமைந்த தில்லானா அன்றைய நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாய் அமைந்திருந்தது. ஆற்காடு பாலாஜி சுத்த நிருத்தியத்திற்கான ஜதிகளையும், காவேரி ரமேஷ் நடனத்தையும் அமைத்திருந்தார். ஜ்யோஸ்னா அற்புதமாக ஆட, ஒரு ஜுகல் பந்தியைப் போல தில்லானா அமைந்தது. ஆன்மாவுடன் ஒன்றிய உணர்வுக்குள் மக்களை அழைத்துச் சென்றது. முடிந்தவுடன் கரவொலி அரங்கத்தை அதிரச் செய்தது.