குருப்பெயர்ச்சி- ராஜா செல்லமுத்து

‘‘செல்வராஜ் இன்னைக்கு இருந்து ஒங்களுக்கு குருபார்வை விழுந்தாச்சு. தொட்டதெல்லாம் துலங்கும். ஜோதிட சாஸ்திரத்தில் தனகாரகன், புத்திரகாரன்னு சொல்ற குரு பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி இன்னைக்கு ராத்திரி 9 மணி 10 நிமிடத்திற்கு கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு மாறுறாரு அதுனால திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடிக்குப் போயிட்டு வாங்க. அங்க ஆபத்சகாயேஸ்வரர் கோயில் இருக்கு. அங்க குருதட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் 4 ரிஷிகளோட ஒக்காந்து அருள்பாலிக்கிறாரு. ஒடனே போய் சாமியக் கும்பிட்டுட்டு வந்திருங்க. இனி நீங்க தொட்டதெல்லாம் துலங்கும்’ என்றார் ஜோதிடர்  தமிழ்மணி.
‘யப்பா இப்பத்தான் எனக்கு உயிரே வந்திருக்கு ஜோதிடரே’ என்ன கஷ்டம் என்ன அவஸ்தை. யப்பப்பா வார்த்தையில சொல்லி மாளாது. எப்படா என்னோட ராசிக்கு குருமாறுவாருன்னு நெனச்சிட்டு இருந்தேன். மாறிட்டாரு. இந்தா ஒடனே ஆலங்குடி போய்ட்டு வாரேன்’ பயபக்தியோடு சொன்னார் செல்வராஜ்.
‘செல்வராஜு  …குரு பார்வை பட்டாதான வாழ்க்கை சுபிட்சமாகும். இத யாரும் கண்டுக்கிறதில்ல’.
‘ஆமா ஜோதிடரே நீங்க சொன்னது சரிதான். நானும் என்னென்னமோ பண்ணிப் பாத்தேன் நடக்கலையே குரு பார்வையில்லாம நடக்காதுன்னு தெரிஞ்சு தான் நான் எந்த வேலையும் தொடலையே தொட்டாலும் துலங்காதுன்னு தெரிஞ்சு தான் நான் வீட்டலயே ஒக்காந்திட்டேன்.
‘நீங்க செஞ்சது சரி செல்வராஜ். குரு பார்வை படாம எதுவும் நடக்காதுன்னு தெரிஞ்சுக்கிட்டீங்களே. இதுதான் புத்திசாலித்தனம்.
‘சரிங்க கிளம்பட்டுமா?’
‘ம்….’
‘தட்சணையக் கொஞ்சம் கூட்டிக் குடுங்க… குருபார்வை படப்போகுது ஓகோன்னு வரப் போறீங்க. இனிமே ஒங்கள கையிலே பிடிக்க முடியாது. போகும்போது மஞ்சள் சட்டை போட்டுட்டுப் போங்க’
‘சரி ஜோதிடரே நேத்தே ரெண்டு செட்டு எடுத்து வச்சிட்டேன்’
‘செல்வராஜு ஆலங்குடி போய்ட்டு அப்பிடியே தஞ்சாவூரு கிட்ட இருக்கிற திட்டைக்குப் போய்ட்டு வாங்க. அத தென்குடி திட்டைன்னு வேற சொல்லுவாங்க. அங்க வசிஷ்டேசுவரர் கோயில் இருக்கு. அங்க நவக்கிரங்கள்ல இருக்கிற குருபகவான் சாமிக்கும் அம்பாளுக்கும் நடுவுல தனி சன்னதியில தனி விமானத்துல ராஜகுருவா இருக்காரு. அங்கயும் போய் சாமியக் கும்பிட்டு வந்திருங்க’
‘என்ன ஜோசியரே.. எல்லாக் கோயிலையும் அக்குவேறு ஆணிவேறாக தெரிஞ்சு வச்சிருக்கீங்க’
‘இல்லன்னா பொழப்பு நடத்த முடியாதுங்க’ என்றார் ஜோதிடர்.
ஜோதிடர் சொல்லியபடியே செல்வராஜ் பஸ் பிடித்து ஆலங்குடி போய் இறங்கினார். பரிகாரப் பூஜைகளைச் செய்தார். அப்பிடியே தஞ்சாவூரில் உள்ள திட்டைக்கும் போய்விட்டு வந்தார்.
குருவின் ஆதிக்கம் இனி நமக்கு உண்டு என்று வீட்டில் குறட்டை போட்டுத் தூங்கினார்.
சில நாட்களில் அவர் எதிர்பார்த்த எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
‘ச்சே என்னாச்சு. குரு கோவிச்சுக்கிட்டாரா? நம்ம மேல ஏதும் கோபமா இருக்காரோ என்னமோ ஒரு முன்னேற்றமும் எற்படலையே’ நொந்தார் செல்வராஜ்.
நேரே ஜோதிடரை பார்க்கப் போனார்.
ஜோதிடர் வாயில் எச்சில் ஒழுக ஒழுக வெற்றிலையை மென்றுக் கொண்டிருந்தார்.
‘என்ன செல்வராஜ்… குருபகவான் ஒங்க உச்சியில கொண்டு போயி வச்சிருப்பானே’
‘ஆமா …நீங்க ஒண்ணு . எதுவும் நடக்கல. அங்க இங்கன்னு காசு செலவானது தான் மிச்சம். வேற ஏதாவது பரிகாரம் இருக்கா ஜோதிடரே! பரிதாபமாய்க் கேட்டார் செல்வராஜ்.
‘ம்…. என்ன செல்வராஜு இப்பிடிச் சொல்றீங்க. குரு பார்வை பட்டு எல்லாரும் நல்லா இருக்காங்கேள. நீங்க என்னடான்னா இப்பிடிச் சொல்றீங்க’ முனங்கினார் ஜோதிடர்.
‘ஏதாவது செய்யுங்க. அவனவன் எங்கையோ போயிட்டு இருக்கான். எனக்கு மட்டும் எதுவும் ஒட்ட மாட்டேங்குதே’
‘வருத்தப்படாதீங்க செல்வராஜு. வந்து சேரும்… ஒண்ணு செய்யுங்க. ஒரு யாக பூஜை பண்ணுனம்மா குருபார்வை விழும்னு நெனைக்கிறேன்.’
‘அப்பிடியா ஒடனே யாக பூஜைக்கு ஏற்பாடு செய்யுங்க. என்ன செலவானாலும் பரவாயில்ல’ என்றார் செல்வராஜ்.
‘போங்க பணத்த ஏற்பாடு பண்ணிட்டு வாங்க’ என்றார் ஜோதிடர்
‘செல்வராஜ் குருபார்வை பட வேண்டி பணத்தை எங்கெங்கோ திரட்டினார்.
ஜோதிடரின் ஜோதிட சாலையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கு பெரிய ஜோதிடச் சூடாமணி  கனகசுந்தர ஜோதிடர் வந்தார்.
‘என்னய்யா ஜோதிடச் சுடர் எப்பிடி இருக்க’
‘நல்லா இருக்கேன் சாமி’
‘எப்பிடிப் போகுது தொழிலு?’
‘ம்… நல்லாப் போகுது’
ஒனக்குக் குருப்பெயர்ச்சி ஆரம்பிச்சிருச்சுய்யா… வர்ற ஆளுககிட்ட நல்லாப் பேசு .பணத்த அள்ளு.. அப்பிடியே என்னையும் கவனிச்சுக்க’
‘சரிங்க சாமி’
‘உழைக்காம ஜோசியத்த நம்புற பயக இருக்கிற வரைக்கும் நமக்கு என்றைக்கும் குருபார்வை தாய்யா…’
‘சாமி இந்தாங்க’ என்று கொஞ்சப் பணத்தை கனகசுந்தர ஜோதிடரிடம் கொடுத்தார் ஜோதிடர்  தமிழ்மணி.
‘ம்… நீ பொழச்சுக்கிருவய்யா’ என்று தட்டிக் கொடுத்தார் கனகசுந்தர ஜோதிடர்.
இவர்கள் பேச்சு   குருபகவானின் பார்வைக்காக பணத்தை ரெடி பண்ணிக் கொண்டு ஓடி வந்து  செல்வராஜ் காதில் விழுந்தது.
அதிர்ச்சி அடைந்தார் அவர்.
‘ இந்த கயவாலி பயகளை நம்பி நாம இதுவரை ஏமாந்தது போதும். இனி இந்தப் பணத்தை வைத்தே ஏதாவது தொழில் செய்து  உழைத்து முன்னேறுவோம் ’ என்று வாய்விட்டுச் சொல்லி உறுதி எடுத்துக் கொண்டே புதிய மனிதனாகத்  திரும்பி வேகமாக நடந்தார் செல்வராஜ்.