பிரதமரின் விபத்துக் காப்பீடுத் திட்டம்: சென்னையில் கவர்னர் ரோசய்யா துவக்கினார்

1012சென்னை, மே 10–
பிரதமரின் விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை கவர்னர் ரோசய்யா சென்னையில்   தொடங்கி வைத்தார்.
மாநில வங்கியாளர் குழுமம் சார்பில் சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், “பிரதம மந்திரி ஜீவன்ஜோதி பீமா யோஜனா’ ஆயுள் காப்பீடுத் திட்டம், “பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா’ விபத்துக் காப்பீட்டுத் திட்டம், “அடல் பென்ஷன் யோஜனா’ முதியோர் ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று புதிய திட்டங்களைத் தொடக்கிவைத்து, திட்டத்தில் சேர்ந்ததற்கான சான்றிதழ்களை 14 பயனாளிகளுக்கு கவர்னர் ரோசய்யா வழங்கினார்.
முன்னதாக விழாவில் கவர்னர் ரோசய்யா பேசகையில், ஏழை மக்கள் பிரச்சினைகளில் இருந்து காக்கப்பட புதிய காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் உதவவேண்டும்.
விபத்து காரணமாக உயிரிழந்தால் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சமும், இயற்கை மரணமாக இருந்தால் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ.2 லட்சமும் சாதாரண மக்களாலும் பெறமுடியும் என்றார்.
அதேபோல, புதிய ஓய்வூதியத் திட்டம் மூலம் சாதாரண மக்களும் வயதான காலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கு அரசு வழி செய்கிறது. இந்தக் காப்பீட்டு திட்டங்களில் சேர்வதற்கு வயதும், வங்கிக் கணக்கும் மட்டுமே பிரதானத் தகுதியாக இருப்பதால், மக்கள் இதனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
விழாவில் மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் கூறுகையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் எதிர்பாராத விபத்துக்களால் ஏற்படும் உறுப்பு இழப்பு, உயிரிழப்பின்போது இழப்பீடு பெற முடியும்.
இதில் “பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா’ விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் 18 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் இணைய முடியும். இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு வங்கி சேமிப்பு கணக்கு மூலம் ரூ.12 பிரீமியம் செலுத்தினாலே போதும் என்றார்.
அதேபோல, “பிரதம மந்திரி ஜீவன்ஜோதி பீமா யோஜனா’ ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.330 பிரீமியம் செலுத்தினால் போதும். இந்தத் திட்டத்தில் 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இணைய முடியும்.
மேலும், முதியோரைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தில் முதியோருக்கு வயதான காலத்தில் மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும் என்றார்.
அமைச்சர்
நத்தம் ஆர்.விஸ்வநாதன்
விழாவில் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் பேசுகையில், மத்திய அரசின் இந்தப் புதிய காப்பீட்டு திட்டங்களையும், ஓய்வூதியத் திட்டத்தையும் தமிழகத்தில் முழுமையாகச் செயல்படுத்துவோம் என்றார் அவர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும், மாநில வங்கியாளர்கள் குழுமத்தின் தலைவருமான ஆர்.கோட்டீஸ்வரன் வரவேற்றார்., இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் திட்டம் பற்றி விளக்கி பேசினார். ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜெ.சதக்கத்துல்லா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.