இது தாத்தா வீடு (சிறுகதை) ராஜா செல்லமுத்து

DSC_0086‘‘எம் பேரன் ரொம்பச் சுட்டி… எப்பவும் துறுதுறுன்னே இருப்பான். எதையாவது கேட்டுட்டே இருப்பான். அவனுக்கு பதில் சொல்லி மாளாது. அறிவுன்னா அறிவு அப்பிடியொரு அறிவு’’ தன் பேரனைப் புகழ்ந்தார் தங்கப்பன்.
‘‘நீங்க ஒண்ணு. எம் பேரன் மட்டும் என்னவாம். அவனும் பெரிய அறிவாளி. வீட்டுல ஒரு பொருள் வைக்க முடியாது எல்லாத்தையும் தூக்கிக் கீழே போட்டு ஒடச்சிடுவான். இந்த வயசுல என்ன அறிவுன்னு தெரியும்மா?  யப்பபப்பா அவன் கேக்குற கேள்விக்கு பதிலே சொல்லமுடியாது.
‘‘சின்ன வயசுல கடவுள் அப்பிடியொரு அறிவக் குடுத்திருக்கான்’’ என தன் பேரனின் பெருமையைச் சொல்லிக் கொண்டிருந்தார் குமாரதேவன்.
இருவரும் பேசியபடியே கான்வென்ட் வாசலில் உட்கார்ந்திருந்தார்கள்.
‘‘இப்ப மணி என்னாகுது?
‘‘மூணு இருபது’’
‘‘இன்னும் பத்து நிமிஷமிருக்கு’’
‘‘ஆமாமா… வீட்டுல மகன், மருமக எப்பிடி இருக்காங்க’’ என்றார் தங்கப்பன்.
‘‘ம்… இருக்காங்க… அவங்களுக்கென்ன? ஒங்கவீட்ல? எனக் கேட்டார் குமாரதேவன்.
‘‘இருக்காங்க… வயசான காலத்துல நம்மையெல்லாம் கொழந்தைங்கள ஸ்கூல்ல இருந்து கூப்பிட, கடைக்குப் போங்கன்னு அதுக்குத்தான் வச்சிருக்காங்க. வயசானவங்கெல்லாம் இந்தக் காலத்துல சம்பளம் இல்லாத வேலைக்காரங்க மாதிரி தான் நடத்துறாங்க. ஏதாவது பேசுனம்னா வயசான காலத்துல ஔர்றாருன்னு சொல்றாங்க. நல்லது கெட்டது கூடச் சொல்ல முடியல. எல்லாம் நம்ம மீறியே நடக்குது. எல்லாம் சகிச்சிட்டுத் தான் போக வேண்டியிருக்கு. இல்லன்னா காலம் போன கடைசியில முதியோர் இல்லம் அது எனக் கொண்டு போய் விட்டுருவாங்க. அதுக்குப் பயந்திட்டுத்தான் பல்லக் கடிச்சிட்டு இருக்கேன். குடும்பத்தோட இருக்கிற சந்தோசம் தனியா இருக்கிறதுல வராது. சாவு கூட சந்தோஷமா இருக்கணும்னு நெனைக்கிறேன்.’’ வெம்பிச் சொன்னார் தங்கப்பன்.
‘‘எம் மனசுல இருக்கிறத, ஏன்? எல்லா வயசானவங்க மனசுல இருக்கிறதையும் அப்பிடியே சொல்லிட்டீங்க. நீங்க சொன்னது தான் எம் மனசுலயும் ஓடிட்டு இருக்கு’’ ஏதோ குடுக்கிறாங்க சாப்படுறோம். எடுபிடி வேலைகளைச் செய்றோம். மாசா மாசம் சம்பளமோ இல்ல ஓய்வூதியமோ வந்தா நம்மள மனுசங்க செத்தாயென்னா இருந்தாயென்ன எல்லாமே ஒண்ணு தான்’’ நொந்து சொன்னார் குமாரதேவன்.
‘‘ஆமா சரியாச் சொன்னீங்க. இங்க வந்திருக்கிறவங்க நெறையாப் பேரு அப்பிடித்தான் இருப்பாங்க போல. எல்லா முகத்திலயும் ஒரு ஏக்கமிருக்கே! என்று இருவரும்  தெரிந்து கொண்டனர். பள்ளி முடிவதற்கான லாங் பெல் அடிக்கப்பட்டது. சாரை சாரையாய் குழந்தைகள் வந்தனர். அவரவரின் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு சென்றார்கள்.
தங்கப்பனும்  குமாரதேவனும் தங்கள் பேரன்களைத் தேடினார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் இரண்டு பேரன்களும் ஒரு இடத்தில் ஒளிந்திருந்து விட்டு திடீரென்று தாத்தாக்கள் முன் வந்து நின்று  ஆச்சரியப்படுத்தி சிரிந்த்து மகிழ்ந்தார்கள்.
‘‘தாத்தா… நீ வந்து ரொம்ப நேரமாச்சா? என்று குமாரதேவனிடம் கேட்டான் பேரன் மனோஜ்.
‘‘இல்லப்பா… இப்பத்தான் வந்தேன் என்றார் குமாரதேவன்.
‘‘தாத்தா… நீ எப்பவும் பேசிட்டு இருப்பியே இன்னைக்கும் அந்தத் தாத்தாக் கூட பேசிட்டு இருந்தயா? என்றார் தங்கப்பனின் பேரன் வசந்த்.
‘‘ஆமாப்பா பேசிட்டு தான் இருந்தேன்.’’
‘‘என்ன பேசுன?’’ தாத்தாவைக் குடைந்தான்.
‘‘சும்மா பேசிட்டு இருந்தோம்பா’’
‘‘என்ன சும்மா பேசிட்டு இருந்தீங்க’’ மீண்டும் கேட்டான் வசந்த். அவனிடம் உண்மையைச் சொல்வதால் என்ன நடக்கப் போகிறது என்று நினைதார் தங்கப்பன்.
‘‘ நாட்டு நடப்பப் பத்திப் பேசிட்டு இருந்தோம்பா’’ எனச் சமாளித்தார்.
‘‘நீங்க நாட்டு நடப்பப் பத்திப் பேசிட்டு இருக்கீங்க… ஆனா ஒங்கள வீட்டுல இருந்து வெளியேத்தணுமுன்னு அம்மா அப்பா பேசிட்டு இருக்காங்க’’ பேரன் பேசிய பேச்சில் சற்று கலங்கினார் தங்கப்பன்.
‘‘ என்ன பேசுனாங்க’’ என்று கேட்டார்.
தங்கப்பனின் விரல் பிடித்து நடந்துக் கொண்டே வசந்த் சொன்னான்.
‘‘ஒன்னையும் பாட்டியையும் ‘‘எங்கையோ முதியோர் இல்லத்துல சேக்கப் போறாங்களாம். அதான் பேசிட்டாங்க’’ என்றான் வசந்த்.
கண் கலங்கினார் தங்கப்பன். ‘‘தாத்தா முதியோர் இல்லம்ன்னா என்ன தாத்தா?’’
விழித்தாார் தங்கப்பன்.
‘‘நம்ம வீட்டுக்கு அப்பா பேரத்தான் வச்சிருக்க! அதுயென்ன என்ன ‘முதியோர் இல்லம்’ கேலியாய் கேட்டான் வசந்த்.
தங்கப்பனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
‘‘தாத்தா நீ ஏன் அழுகுற?’’ என்றான் வசந்த்.
‘‘இல்லப்பா ஒண்ணுமில்ல’’ சமாளித்தார் தங்கப்பன்.
தாத்தாவின் விரல் பிடித்தபடியே நடந்து வந்தான்– வசந்த்.
வீட்டின் எதிரே வந்து கொண்டிருந்தார்கள். வீட்டில் சுவரில் ‘ஆனந்த் இல்லம்’’ என்று எழுதியிருந்தது.
ஆனந்திடம் என்றோ பேசியது தங்கப்பனுக்கு நினைவில் வந்தது.
‘‘அப்பா வீட்டுக்கு எம் பேர  வையுப்பா…’’
‘‘ஒம் பேர வைக்காம வேற யார் பேர வைக்கப் போறேன்பா… இது எல்லாமே ஒனக்குத் தானே’’ என்றார் தங்கப்பன்.
தங்கப்பன் , பேரன் வசந்த் இருவரும் வீட்டின் முன்னால் வந்தார்கள்.
அப்பா  ஆனந்த் பேரை அடிச்சிட்டு ‘தங்கப்பன் இல்லம்னு எழுதினான் பேரன் வசந்த்.
தாத்தா திகைத்து நின்றார்.
வசந்த்  அப்பாவும் அம்மாவும் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.
பேரன் வசந்த் அழுத்தம் திருத்தமாகக் கூறினான்: ‘‘ அப்பா , அம்மா  நீங்க ரெண்டு பேரும் எங்கேயாவது முதியோர் இல்லத்திற்கு போங்க . இது எங்க தாத்தா வீடு. இங்க நானும்  தாத்தாவும் மட்டும் இருப்போம் ’’ என்றான் பேரன் வசந்த்.
அப்பா , அம்மா இருவருக்கும் செவிளில் அறைந்தது போலிருந்தது.
இருவரும் ஒருமித்த குரலில் கூறினார்கள்:
‘‘ தாத்தாவை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவோம்னு நாங்க சொன்னது தப்புதான். அதுக்காக உங்க ரெண்டு பேருகிட்டேயும் நாங்க மன்னிப்பு கேட்டுக்கிறோம். இனி நாம் எல்லோரும் இதே வீட்டில ஒன்னா இருப்போம் . சரியா ’’ என்றார்கள்.
வசந்த் முகத்தில் மகிழ்ச்சி. தாத்தாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டான்.
அவன் தலையை கோதிவிட்ட தாத்தா – தங்கப்பன் இல்லம் என்று எழுதியிருந்ததை அழித்துவிட்டு  வசந்த் இல்லம் என்று எழுதினார்.
எல்லோரிடமும் ஆனந்தம் குடி கொண்டது.