நடந்தது வேறொன்று (சிறுகதை) ராஜா செல்லமுத்து

writers-900x675‘‘தம்பி கொஞ்சம் நில்லுங்க…’’
கொஞ்சம் நில்லுங்க…’’ என ராஜா ஒருவனை துரத்திக் கொண்டே சென்றார்.
ஆனால் சுகுமார் நிற்காமலே ஓடிக் கொண்டிருந்தான். அவன் கையில் பார்சல் ஒன்று இருந்தது.
‘‘ஏன் சார் அவரை அப்பிடி வெரட்டுறீங்க’’ என்று ராஜாவிடம் கேட்டார்கள்.
சார் நான் வாங்கிட்டு வந்த பிரியாணியைப்  பிடுங்கிட்டு ஓடுறார்.  அதான் தொறத்திட்டுப் போயிட்டு இருக்கேன் என பார்சல் திருடியவனைப் பின் தொடர்ந்து சென்றார் ராஜா.
ஆனால் சுகுமார் நிற்காமலே சென்றுக் கொண்டிருந்தான்.
‘‘என்னடா இது ஒரு பிரியாணிக்குப் போயி இந்தத் தொரத்து தொரத்திட்டு இருக்கார். விட்டுட்டுப் போக வேண்டியது தானே’’ சலித்துக் கொண்டே ஓடினான் சுகுமார்.
ராஜா சுகுமாரை விடுவதாகத் தெரியவில்லை.
‘‘என்ன இது பார்சலப் பிடுங்காமப் போகமாட்டாரு போலே யிருக்கே. பசி வேற  எடுக்குது… பேசாம இங்கேயே பொட்டலத்தப் பிரிச்சுத் திங்கலாமா? என்று முடிவு செய்தான் சுகுமார்.
‘‘சே… பார்சலப் பறி குடுத்தவன் வேற பின்னாடியே வந்திட்டு இருக்கான். கீழ ஒக்காந்து சாப்பிடும் போது ஏதாவது அசிங்கமாயிட்டா கேவலம்.’’ திரும்பவும் ஓடினான் சுகுமார்.
ஆனால் ராஜா அவனை விடுவதாகத் தெரியவில்லை.
திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றான் சுகுமார்.
ராஜா இப்படி ஓடுவதைப் பார்த்தவர்கள் திருடன் போல என நினைத்து ராஜாவுக்கு உதவ முன் வந்தார்கள்.
‘‘சார் திருட்டுப் பயலா? ஏதாவது திருடிட்டுப் போயிட்டானா? சொல்லுங்க பிடிச்சிடுவோம்’’ என ஆட்கள் கேட்டார்கள்.
‘‘இல்ல அதெல்லாம் ஒண்ணுமில்ல.  நீங்க போங்க’’ என்று சொல்லிக் கொண்டே சுகுமாரை துரத்திக் கொண்டேசென்றார் ராஜா.
‘‘என்னய்யா இது? பெரிய பிச்சைக்காரப் பயலா இருப்பானோ? சாதாரண பிரியாணிக்குப் போயி இந்த மாதிரி வெரட்டிட்டு இருக்கான் பாரு. பேசாம தெருவுல கெடக்கிற எலையில ஒக்காந்திருந்தோம்னா  நாய் கூட சண்டை போட்டு நாம சாப்பிட்டு இருக்கலாம். அதவிடக் கேவலமா நம்ம வெட்டுறான் பாரு’’ என மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருந்தான் சுகுமார்.
ஆட்கள் நிறைந்த சாலைகளில் ஓடிக் கொண்டிருந்தார்கள் இருவரும். இருவரும் இப்படி ஓடுவதை எல்லோரும் வேடிக்கை பார்த்தபடியே இருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் ஓடி ஓய்ந்து போன சுகுமார் ‘‘ச்சே… கேவலம்… இந்த பிரியாணிப் பொட்டலத்துக்குத் தான நம்மள வெரட்டுறான். பேசாம இத வச்சிட்டு ஓடிடுவோம். பிரியாணி கெடச்ச திருப்தியில நம்மள விட்டுருவான் என நினைத்து பிரியாணிப் பொட்டலத்தை கீழே வைத்துவிட்டு ஓடினான்.
ஓடிவந்த ராஜா தான் பறிகொடுத்த பிரியாணிப் பொட்டலம் கீழே இருப்பதை பார்த்துக் கையில் எடுத்தார். சுகுமார் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தான்.
பிரியாணிப் பொட்டலத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மீண்டும் சுகுமாரை நோக்கித் துரத்திக்கொண்டு ஓடினார் ராஜா.
திரும்பிப் பார்த்த சுகுமாருக்கு சுரீரென்று கோபம் வந்தது.
‘‘அதான் பொட்டலத்தை எடுத்திட்டானே. பெறகு எதுக்கு என் நம்மளத் தொரத்துறான்.’’
அப்பிடியே நின்றான் சுகுமார். கோபத்தோடு ராஜாவைப் பார்த்தான். நேரே சுகுமாரிடம் வந்தார் ராஜா.
‘‘என்ன தம்பி இதப் போயி பிடுங்கிட்டு ஓடிட்டீங்க… இது நான் சாப்பிட்ட மிச்சம்… எச்சியப் போயிப் பிடுங்கிட்டு ஓடுறீங்கன்னு தான் ஒங்களப் தொரத்திட்டு வந்தேன்.’’
‘‘வாங்க….’’ என சுகுமாரின் கையைப் பிடித்துக் கூப்பிட்டார் ராஜா. பயந்து போன சுகுமார் ‘‘எங்க?’’ எனக் கேட்டான்’’
‘‘போலீஸ் ஸ்டேசனுக்குன்னு பயந்திட்டீங்களா?
சாப்பிடப் போகலாம். வாங்க.
எவ்வளவு பசியா இருந்தா இதப் பிடுங்கிட்டு ஓடுவீங்க? ’’என சுகுமாரைக் கூப்பிட்டுக் கொண்டு ஒரு அசைவ ஓட்டலுக்குள்  நுழைந்தார் ராஜா .
சுகுமாருக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்தார். நெகிழ்ந்து போனான் சுகுமார்.