சீரியல் கொலை(சிறுகதை) ராஜா செல்லமுத்து

GunInHand‘‘அவனக் கண்டாலே எனக்கு ஆகமாட்டேங்குது. ஆளு வச்சுக் கொல்லணும் போல தோணுது. அனுசுயா நான் முடிக்கவா? இல்ல நீ முடிக்கிறயா? என்று அனுசுயாவிடம் கேட்டாள் சுஜிதா.
‘‘இல்ல சுஜி. நீயே முடிச்சுடு. நான் இதுல இன்வால்வ் ஆக மாட்டேன். அப்பிடி நான் உள்ள நொழஞ்சா எல்லாமே தெரிஞ்சுப் போகும்’’ என்றார் அனுசுயா.
மர்டர் நடக்கணும் அதுவும் யாருக்கும் தெரியாதது மாதிரியே நடக்கணும். காரியத்தக் கச்சிதமா முடிச்சுடு’’ என்று இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சியிலிருந்து காட்சிகள் பின்னோக்கி வந்தன.
‘‘அன்றைய தினமும் வழக்கமாய் இரவு 7.30 லிருந்து தொடங்கியது தொலைக்காட்சித் தொடர்.
வர்ஷினி டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
டிவியில் தான் அனுசுயாவும்  சுஜிதாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். கொல்லப் பிளான் செய்யப்பட்ட அந்த ஆள் அனுசுயாவின் கணவர் கோபிநாதன்.
கோபிநாதனைக் கொலை செய்வது தொடர்பாய் பேசிய பேச்சில் வர்ஷனி தன்னை மறந்திருந்தாள்.
கணவன் ராகவ் வந்து சேர்ந்தான். டியூசன் சென்ற மகள் தர்ஷினியும் வந்து சேர்ந்தாள். எதையும் கவனிக்காமல்  தொலைக் காட்சியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி.
‘‘வர்ஷினி… வர்ஷினி… எதுவும் அவள் காதில் விழவில்லை.  தொலைக்காட்சியில் தன்னைத் தொலைத்திருந்தாள்.
‘‘வர்ஷினி… என சத்தமாய்க் கத்திய போது தான் நினைவுக்கு வந்தாள்.
‘‘என்னங்க… ஸாரி…’’
‘‘ஸாரியா… ஒனக்கு எப்பவுமே டிவியக் கட்டிட்டு தான் அழணுமா? கொழந்த வந்திருக்கு… நான் வந்திருக்கேன். அது கூடத் தெரியாம அப்பிடியென்ன டிவி வேண்டிக் கெடக்கு. அதுவும் புருசனை எப்பிடிக் கொல்லணும்? குடும்பத்த எப்பிடிப் பிரிக்கணும்? யார் யார் என்னென்ன சதி வேல செய்யணுமோ, அவ்வளவையும் சொல்லித்தாராங்க. அதப் போயிப் பாத்திட்டு இருக்க பாரு’’ கோபப்பட்டான் ராகவ்.
‘‘என்னங்க இப்பிடிக் சொல்றீங்க? குடும்பங்கள்ல நடக்கிறத்தானே எடுத்துக் காட்டுறாங்க…’’ என வாதம் செய்தாள் வர்ஷினி.
‘‘எது சீரியல்லயா! அது தான் நெறையாப் பொம்பளைங்களை கொலை காரியா மாத்தியிருக்கு… என்னைக்கு ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் டிவி வந்துச்சோ அன்னைக்கே குடும்பங்கள் சின்னா பின்னமாப் போச்சு. மொதல்ல இந்த டிவி சீரியல்களை நிறுத்தணும்.’’ கோபப்பட்டான் ராகவ்.
‘‘என்னங்க கொறஞ்சு போச்சு…. எதுல நாங்க கொறவச்சோம். ஒண்ணு சொல்லுங்க. பாப்போம்’’ என குமுறினாள் வர்ஷா.
‘‘ம்… அப்பிடிக் கேளு… கொழந்தய ஒழுங்கா ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கியா? இல்ல டைமுக்கு தான் சாப்பாடு வச்சிருக்கியா? சாயங்காலம் ஆகிட்டாப் போதும்.  அப்ப இருந்து நடுச்சாமம் வரைக்கும் ஒரே சீரியல் தான். அதுமட்டுமில்லாம சினிமாவ வீட்டுக்குள்ள விடாம ஒழிச்சதே இந்த சீரியல் தான். இந்தச் சீரியல ஒழிக்கணும்,’’ கடுகடுப்பாய்ப் பேசினார் ராகவ்.
‘‘ஹலோ… என்னைப் பத்திப் பேசுங்க. அனுசுயாவையும் சுஜிதாவையும் பத்திப் பேசாதிங்க’’ என்று தொடர்களிலுள்ள கதாப் பாத்திரங்களுக்கு சாதகமாப் பேசினாள் வர்ஷினி.
பின்னால் தொடர் ஓடிக் கொண்டிருந்தது.
‘‘ம்ஹூம்… நீ திருந்தவே மாட்ட. சீரியல்ல வர்ற பொம்பளைங்களப் பத்திப் பேசுற. குடும்பத்தக் கவனிக்க மாட்டீங்கிற? என்றான் ராகவ்.
குழந்தை தர்ஷினி களைத்துப் போய் படுத்துக் கிடந்தாள்.
‘‘தர்ஷினி… தர்ஷினி அப்பா ராகவ் தான் குரல் கொடுத்தான்.
‘‘ம்… என்னப்பா… சாப்பிட்டுப் படும்மா’’
‘‘சரிப்பா அம்மா எங்க? மெல்லப் பேசினாள் தர்ஷினி.
‘‘அம்மா டிவி பாத்திட்டு இருக்கா… நீ வந்து சாப்பிடு…’’ என்றான் ராகவ்.
தர்ஷினி மெல்ல மெல்ல நடந்து வந்தாள். வர்ஷினி டிவி பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அப்போது சுஜிதாவும்  அனுசுயாவும் கொலை செய்வதற்கான திட்டத்தில் இறங்கி இருந்தார்கள். இருவரும் கோபிநாதன் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தார்கள்.
கோபிநாதன் தூங்கிக் கொண்டிருந்தார். நிதானமாய் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்.
இருவரும் கொலை வெறியோடு கட்டிலை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.
படக்… படக்… படக்… படக்கென்று இதயம் துடித்தது. வர்ஷினியும் இருக்கையிலிருந்து எழுந்தாள். கதாப் பாத்திரங்களை பார்த்தாள் படபடப்புடன் இருந்தாள்.
‘‘ம்… கொல்லு விடாதே… அவனக் கொல்லு என தொலைக்காட்சியின் அருகே சென்றாள். உணர்ச்சியின் மிகுதியில் சத்தமிட்டாள். இவளின் செய்கையைப் பார்த்த ராகவும் மகள் தர்ஷினியும் பயந்தே போனார்கள். வர்ஷினி தொடரில் ஒன்றிப் போயிருந்தாள். அப்போது தொடர் துண்டிக்கப்பட்டது. தொடரும்… என டைட்டில் போடப்பட்டது. வர்ஷினிக்கு கோபம் தலைக்கேறியது.
‘‘ச்சே… அவனக் கொல்லாம கட் பண்ணிட்டானே’’ அவளாய்ப் பேசினாள் வர்ஷினி.
ராகவ்வும் தர்ஷினியும் வர்ஷினியைப் பார்த்தார்கள். வர்ஷினி கோபத்தில் இருந்தாள்.
‘‘என்ன?’’ என ராகவைக் கேட்டாள்.
‘‘ஒண்ணுமில்ல’’ எனப் பயந்தபடியே படுக்கையறைக்குச் சென்றனர் இருவரும். எல்லோரும் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென எழுந்து உட்கார்ந்தாள் வர்ஷினி.
‘‘அவனக் கொல்லாம விட்டுடாத’’
கழுத்த அறுத்துரு’’ என கணவன் அருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள் வர்ஷினி.
பயந்து நடுங்கிய படியே படுத்திருந்தான் ராகவ்.
மறுநாள் காலை தொலைக்காட்சியை ஆன் செய்தாள். அதில் தொடர்பு துண்டிக்கப்பட்டது’’ என்ற செய்தி வந்தது.
‘‘ஏங்க என்னாச்சு… கேபிள் டிவி வரலியே’’ கத்தினாள் வர்ஷினி.
‘‘அது… அது… தெரியலியே’’ சமாளித்தான் ராகவ்.
‘‘இன்னைக்கு சீரியல்ல ஒரு கொலை நடக்கப் போகுது. அத நான் கண்டிப்பாப் பாத்தே ஆகணும். கேபிள் போட்டுட்டு வாங்க. இல்ல வீட்டுல நெசமாவே ஒரு கொலை நடக்கும்’’ பயமுறுத்தினாள் வர்ஷினி.
பயந்து போன ராகவ் கேபிள் டிவி இணைப்பிற்குப் போன் செய்து கொண்டிருந்தான்.