சொல்லாத வார்த்தைகள் (சிறுகதை) ராஜா செல்லமுத்து

writers‘என்ன கோமதி சரியா பாத்து அடிக்க மாட்டியா? வரிக்கு வரி தப்பா இருக்கு. அமவுண்டத் தப்பாப் போடுற? காரணத்துக்கு கரணமுன்னு அடிச்சிருக்க. உச்சநீதிமன்றத்துக்கு ‘வச்ச நீதிமன்றம்’ன்னு அடிச்சிருக்க அது மட்டுமில்லாம நீயே என்னென்னமோ எழுதுற. இது பெரிய தப்பு. நாங்க என்ன சொல்றமோ அதமட்டும் அடிச்சுக் குடு. அதவிட்டுட்டு வேற எதுவும் அடிக்காத! இதுல வேற கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சேன்னு சொல்ற? கம்ப்யூட்டர படிச்சயா? இல்ல கம்ப்யூட்டர தொடச்சுட்டு இருந்தியா? அவனவன் குதிரை வேகத்தில டைப் பண்ணிட்டு இருக்காங்க. நீ என்னாடான்னா ஆற அமர மெதுவா அடிக்கிற. இதுயென்னா காய்கறி லிஸ்ட்டா ஒன்னோட இஷ்டத்துக்கு அடிக்க. இது வியாபாரம் சம்மந்தமான புராஜக்ட். நீ அடிக்கிற ஒவ்வொரு வார்த்தையும் சரியா இருக்கணும். இல்ல திரும்பத் திரும்ப திருத்திக் குடுத்திட்டே இருக்க வேண்டியது தான் வேல முடியாது’ என ஒரே மூச்சில் கோமதியை திட்டிக் கொண்டிருந்தார் முருகேசன்.

‘சார் ஒங்க கையெழுத்துல இருக்கிற வார்த்தைகளக் கண்டுபிடிச்சு அடிக்கிறதே பெரிய கஷ்டம் சார். ஒங்களோட எழுத்தப் பாத்திருக்கீங்களா? என்னமோ கோழி கிறுக்கினது மாதிரி ஒரு வரியாவது சரியா இருக்கா பாருங்க. நீங்க எத நெனச்சு எழுதுறீங்கன்னு யாருக்குத் தெரியும்’ கோபித்தாள் கோமதி.

‘ம் பேச்சு மட்டும் வக்கணையாப் பேசு. சரியா வேல செய்யாத’

‘சார் மனுசன் எழுதுற எழுத்துலயே இத்தனை தப்பு வந்துச்சுன்னா மிஷன் என்ன பண்ணும் சார். ஏதோ சில வார்த்தைகள் தப்பா இருக்கும். அதுக்குப் போயி ரொம்பக் கோவிக்கிறீங்க.

கோவமா. ஒன்னையக் கொல்லப் போறேன். அமெரிக்கா ஏன் ஜப்பான் மேல குண்டு போட்டுச்சுன்னு தெரியுமா? என்றார் முருகேசன்.

‘எனக்கென்னா சார் தெரியும்?’

‘ம் அப்பிடிக் கேளு… இல்லாத வாய் பேசுறீயே… இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் தெரிஞ்சு வச்சுக்காத.

‘சொல்லுங்க சார்.. எம் புருசன் என்னைய எதுக்கு அடிக்கிறான்னே எனக்குத் தெரியாது. இதுல ஜப்பான்ல ஏன் குண்டு போட்டாங்கன்னு நான் எப்பிடி சார் கேக்க முடியும்’

‘ம் …. நல்லா பேசுற மொதல்ல நான் சொல்றதக் கேளு. ஜப்பான்காரங்களுக்கு ஒங்க மேல் போர் தொடுக்கப் போறோம்னு அமெரிக்கா ஒரு செய்தி அனுப்பியிருக்கு. அதப் படிச்சுப் பாத்த ஜப்பான்காரங்க. மெரண்டு போயிருக்காங்க. அவ்வளவு பெரிய நாடு நம்ம மேல ஏன் போர் தொடுக்கணும்னு நெனச்சு பயந்து போயி நீங்க அனுப்புன இந்தக் கடிதத்த நாங்கள் மறுபரிசீலனை செய்கிறோம்’ன்னு ஜப்பான் மொழியில எழுதி அனுப்பியிருக்காங்க. ஜப்பான் மொழியப் படிச்சுப் பார்த்தவங்க இதத் தவறா மொழிபெயர்த்து ‘இதை நாங்கள் நிராகரிக்கிறோம்னு படிச்சிட்டாங்க. இதக் கேட்ட அமெரிக்காவுக்கு கடுமையான கோபம் வந்திருச்சு.

என்னாடா இது ஒரு சின்ன நாடு நம்மள நிராகரிக்குதுன்னு சொல்றாங்களேன்னு நெனச்சுத்தான் ஜப்பான்ல இருக்கிற ஹீரோஷீமா, நாகசாகி மேல குண்டு போட்டாங்கன்னு வரலாறு சொல்லுது’ என்று வரலாறு தனக்குத் தெரியும் என்ற பெருமையோடு பேசினார் முருகேசன்.

அத ஏன் சார் என்கிட்டச் சொல்றீங்க?

‘ஒங்ககிட்டச் சொல்லலாமா? பெறகு யார்கிட்டச் சொல்றது. நீ தான நேத்து ஒரு விஷயத்த தப்பா அடிச்சுக் குடுத்த அதுனால மேனேஜர் என்னைய என்னா திட்டுத்திட்டுனாராங்கன்னு ஒனக்குத் தெரியுமா? அதுனால தான் இந்தக் கதைய ஒனக்குச் சொன்னேன்’ என்றார் முருகேசன்.

‘சரிங்க சார் நீங்க எழுதும்போது சரியா எழுதித் தாங்க. நான் கரைக்டா அடிக்கிறேன்’ என தலையை நிமிராமலே டைப் செய்து கொண்டிருந்தாள் கோமதி.

நான் எழுதறத மட்டும் அடி. ஒன் இஷ்டத்துக்கு எதுவும் அடிக்காத. ஒன்னோட அறிவ வேற எங்கயாவது கொண்டு போய் காட்டு’ சரியா?’ குமுறினார் முருகேசன். இப்படியாய் தினமும் முருகேசனுக்கும் கோமதிக்கும் முட்டலும் ஒட்டலுமாய் பொழுதுகள் கழியும்.

ஒரு நாள் முருகேசனுக்கு அதிகப்படியான கோபம் வந்து கோமதியைத் திட்டினார்.

‘இனிமே நீ வேலைக்கு வர வேணாம். போ… வீட்டுக்கு! எப்பப் பாரு சொன்னதைச் செய்யமாட்டீங்கிற. நல்லா டைப் கத்திட்டு வா அதுவரைக்கும் ஒனக்கு இங்க வேலை இல்ல’ விரட்டினார் முருகேசன்.

கோமதி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் முருகேசன் அசையவே இல்லை, விரட்டியே விட்டார்.

அன்றிலிருந்து கோமதி அலுவலகம் வருவதில்லை. முருகேசன் வேலைக்கு வேறு ஆள் தேடிக் கொண்டிருந்தார்.

கோமதி முன்னால் தயாரித்து அனுப்பிய விலைப் பட்டியலைப் பார்த்த கம்பெனி அதை அப்படியே அப்ரூவல் செய்து அனுப்பியிருந்தது.

அனுப்பிய எல்லா டெண்டர்களுக்கும் ஒரே மூச்சில் ஆர்டர் கிடைத்தது. இது முருகேசனுக்குச் சந்தோசத்தை ஏற்படுத்தியது.

‘முருகேசா… அந்த டைப் அடிக்கிற பொண்ணு கோமதி எங்க? எனக் கேட்டார் மேலாளர்.

‘சார் அந்தப் பொண்ணு சரியா வேலை செய்யல அதான் வேலைக்கு வர வேணாம்னு சொல்லிட்டேன்’ எனச் சொன்னார் முருகேசன்.

‘இல்ல அந்தப் பொண்ண ஒடனே வேலைக்குச் சேருங்க’ என்றார் மேலாளர்.

ஏன் சார்?

‘மொதல்ல நான் சொன்னதச் செய்யுங்க’ என்று கடுமையான கோபத்தில் சொன்னார்.

முருகேசனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. மறுநாளே கோமதியை அலுவலகம் வரச்சொன்னார்.

‘ம்… எப்பிடியோ வேலைக்கு வந்திட்டேன்னு பெருமையா நெனைக்காத. நான் நெனச்சா ஒன்னைய எப்ப வேணும்னாலும் வேலைய விட்டுத் தூக்கிருவேன்’ மீண்டும் கோமதியை பயமுறுத்தினார் முருகேசன்.

‘கோமதி…கோமதி…’ என குரல் கொடுத்தார் மேலாளர்.

‘இந்தா வந்திட்டேன் சார்’ என மேலாளர் அறைக்கு ஓடினாள். கோமதிக்கு பரிசுப் பொருட்களும் வாழ்த்துச் செய்தியும் கொடுத்தார் மேலாளர்.

‘கோமதி நீ ஒரு இன்வாய்ஸ் சரியாப் போட்டதுனாலயும், அந்தக் கம்பெனியப் பத்தி நல்லதா ரெண்டு வார்த்தை எழுதி அனுப்புனதுனாலயும் தான் இன்னைக்கு அஞ்சு கோடி ரூபா புராஜக்ட் வந்திருக்கு. ரொம்ப தேங்க்ஸ். ஒனக்கு எது சரின்னு படுதோ அதச் சேத்து டைப் பண்ணு. நான் ஒனக்கு ப்ரீடம் தாரேன்’ என்று சொன்னார் மேலாளர்.

முருகேசனைக் கூப்பிட்டார். அவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து கையெழுத்து வாங்கினார். அதைப் பார்த்ததும் முருகேசன் பயத்தில் உறைந்தார். அந்தக் கடிதம் அவரின் ராஜினாமாக் கடிதமாய் இருந்தது.

‘சார் நான் புள்ளக்குட்டிக்காரன் சார் வேலைய விட்டு அனுப்பிடாதீங்க சார்… ப்ளீஸ்… ப்ளீஸ்… எனக் கெஞ்சினான்.

‘ம்… சரி… இனிமே எதையும் தப்பா எழுதாத. பாத்து நிதானமா எழுது. ஒன்னைய நீயே பெரிய ஆளுன்னு நெனைக்காத. மத்தவங்களுக்கும் அறிவு இருக்குன்னு நெனைச்சுக்கோ. நீ பண்ணுன தப்புல ஏற்கனவே நெறயா புராஜக்ட் நம்ம கைய விட்டுப் போயிருச்சு. இதும் போயிருச்சுன்னா ஒன்னைய வேலய விட்டுத் தூக்கலாம்னு நெனைச்சேன்.

ஏதோ ஒன்னைய கோமதி காப்பாத்திட்டா… போ கவனமா வேலையப் பாருங்க. இன்னொரு முறை எதுவும் தப்பாகக் கூடாது’ என்று முருகேசனைக் கண்டித்து அனுப்பினார் மேலாளர்.

கோமதி அமைதியாய் டைப் செய்து கொண்டிருந்தாள்.