மாமல்லபுரம் நாட்டிய விழா நிறைவு: 1 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்

2323காஞ்சீபுரம், ஜன. 23-–
மாமல்லபுரத்தில் ஒரு மாதம் நடைபெற்று வந்த நாட்டிய விழா நிறைவடைந்தது. வெளிநாட்டு பயணிகள் 2000 பேரும்,  உள்நாட்டு பயணிகள் ஒரு லட்சம் பேரும் விழாவை கண்டுகளித்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் மத்திய, மாநில சுற்றுலாத்துறை சார்பில் ஒரு மாதம் நாட்டிய விழா நடந்து வருகிறது.
இந்த வருட விழா கடந்த டிசம்பர் 21-ல் தொடங்கி ஒரு மாதம்  நடைபெற்றது.
மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகில் அமைக்கப்பட்ட திறந்தவெளி மேடையில் தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பாரம்பரிய பரதநாட்டியம், ஒடிசி, மோகினி ஆட்டம், குச்சுப்புடி, கதகளி ஆகிய நடன நிகழ்ச்சிகளும், கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆகிய கிராமிய கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுடெல்லி, குஜராத், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் நிகழ்ச்சிகளை வழங்கினர்.
ஒரு மாதம் நடந்த இந்த நாட்டிய விழா நிகழ்ச்சிகளை பிரான்ஸ், இத்தாலி, நார்வே, ஜெர்மன், சுவீடன், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த வெளிநாட்டு பயணிகள் சுமார் 2000 பேர் கண்டுகளித்தனர்.  உள்நாட்டு பயணிகள் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.
கலைமாமணி சித்ராவிஸ்வேஸ்வரன் குழுவினரின் பரதநாட்டியம், கிராமிய கலை வளர்ச்சி மையத்தினரின் நாட்டுப்புற கலைகளுடன் விழா நிறைவு பெற்றது.
நிறைவு நாள் விழாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், நாட்டிய கலைஞர்கள் மற்றும் நாட்டிய விழா நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய பல்துறை அதிகாரிகளுக்கும் நினைவு பரிசுகளை தமிழக அரசு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் செயலாளர் ரா.கண்ணன் சுற்றுலாத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஹர்சகாய்மீனா ஆகியோர் நினைவுப்பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர்.
விழாவின் முடிவில் மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அதிகாரி(பொறுப்பு) குணசேகரன் நன்றி கூறினார்.