சென்னையில் ரஷ்ய இளம் அழகிகளின் பாலே–ஜிம்னாஸ்டிக் விருந்து: வியப்பில் ஆழ்ந்த பார்வையாளர்கள்

2314சென்னை, ஜன. 23–
சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் ரஷ்ய இளம் அழகிகள் பங்கேற்ற மாபெரும் ரஷ்ய பாலே நடனம்– அக்ரோபாட்டிக்ஸ்– ஜிம்னாஸ்டிக்ஸ் நிகழ்ச்சி நேற்று மாலை மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்திய ரஷ்ய கலாச்சார– நட்புறவுக் கழகமும், ரஷ்ய கலாச்சார மையமும் இணைந்து இந்த பாலே நடன விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
தென் இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரக கான்சல் ஜெனரல் டாக்டர் செர்கீ எல். கோட்டோவின் வாழ்த்துக்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய ரஷ்ய வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் இயக்குனர் மிக்கைல் கோர்பட்டோவ் ரஷ்யக் கலைஞர்களை வரவேற்று வாழ்த்தினார்.
இத்தகைய கலைஞர்கள் பரிமாற்றம் மூலம் இந்திய கலை–கலாச்சார நட்புறவு இன்னும் வலுப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேரத்தில் தமிழகம் வந்துள்ள இந்த கலைக்குழுவினர், முதலில் தஞ்சையிலும், அடுத்து ஊட்டியிலும், 3–வதாக பெங்களூரிலும் நடன நிகழ்ச்சியை நடத்தி விட்டு  சென்னை வந்தார்கள். தஞ்சையில் 5 ஆயிரம் பேர் திரண்டிருந்து நிகழ்ச்சியை கண்டு களித்தனர் என்று இந்திய ரஷ்ய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் தலைமை செயலாளர் பி. தங்கப்பன் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யானைகள் புத்துணர்வு மையத்துக்கு நேரில் சென்ற கலைக் குழுவினர், மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் விசேஷ ஏற்பாட்டில் அந்த யானைகள் பராமரிப்புக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகளைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். மனந்திறந்து பாராட்டினர் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்ற இடங்களில் எல்லாம் மிக அருமையாக ரசித்து வரவேற்ற தமிழக மக்களுக்கும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து தந்த தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்த கலைக்குழுவின் தலைவி எலியோனா நிக்கோலைவ்னா (கலைக்குழுவினர் பெயர்: ‘ஆர்க்கிட்’. ரஷ்டோவ் ஆண்டன் நகரில் இயங்கி வருகிறது.) இந்தப் பயணம் தங்களின் வாழ்நாளில் மறக்க முடியாது என்று நெகிழ்ந்து போய் சொன்னார்.
17 நடனங்கள்
100 நிமிடங்கள் நடந்த நிகழ்ச்சியில் 10 இளம் அழகிகள், ஒரு ஆண் (ரில்ஸ்டோவ்) பங்கேற்றனர். மொத்தம் 17 வகையான நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விதவிதமான வண்ண வண்ண உடைகளில் மேடையில் அழகிகள் ஆடிய விதம், வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்தது. மேடையை முழுமையாகப் பயன்படுத்தி ஆடினார்கள். மேடையின்  ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு குதித்து குதித்து தாவி சென்ற விதம் இருக்கிறதே… வாவ்…. பார்வையாளர்கள் வியந்து கைத்தட்டி ரசித்தார்கள்.
முயற்சியும் – பயிற்சியும்
இல்லாமல் எப்படி!
புன்னகை. உடலை இறுகக் கவ்விப் பிடித்திருக்கும் ‘சிக்’ உடையில் இளம் அழகிகளைப் பார்த்ததுமே– பார்வையாளர்கள் கம்பீரமாய் நிமிர்ந்து உட்கார்ந்து ரசிக்க ஆரம்பித்தார்கள்.
* ‘சந்தோஷப் பறவை…’ என்ற தலைப்பில் ஒரு அழகியின் ஆட்டம்,
* புது வருஷம் பிறப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்று கொண்டாடும்  6 அழகிகளின் ஆட்டம்.
* க்யூபா–விடுதலை கொண்டாட்டத்தில் குதியாட்டம்.
–இப்படி தொடர்ந்த நாட்டியத்தில் ஒவ்வொரு அழகியும் உடலை வளைத்து, நெளித்து ஆடிய வேகத்தில்– சட்டென்று இரு கால்களையும், விரித்த நிலையில்– நீட்டி– தரையோடு தரையாக ஒரே நேர்க்கோடு கணக்காய் உட்கார்ந்து–கண் இமைக்கும் நேரத்தில் எழுந்தது இருக்கிறதே– சிலிர்க்க வைத்தார்கள் பார்வையாளர்களை. * முயற்சியும், பயிற்சியும் இல்லாமல் நடக்கிற காரியமா, அது?
பூனக்குட்டிகளின் சேட்டை
ரஷ்யாவில் பூனை இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். அப்படி ஒவ்வொரு வீட்டிலும், இருக்கும் * 2 பூனைகள்–ஒன்றோடொன்று வாலைப் பிடித்திழுத்து, முகவாய்க்கட்டையை செல்லமாக கடித்து–தரையில் துள்ளி ஒன்று இன்னொன்றின் மேலே விழுந்தால்… இரண்டின் குறும்பும் எப்படி பார்த்து ரசிக்க வைக்கும்? அப்படியே பூனையாய் லூட்டி அடித்த 2 அழகிகளின் அங்க அசைவு நடனம்.
* கையில் வண்ண வண்ண துணியைப் பிடித்து–இரு கைகளாலும் இசையின் ஒலிக்கேற்ப அசைத்து, அசைத்து அதை வெவ்வேறு உருவங்களில் காட்டி மீண்டும் பழைய நிலைக்கே அந்தத் துணியைக் கொண்டு வந்தபோது… எழுந்த கைத்தட்டல் அடங்க 60 நொடி ஆனது.
துணியில் டார்ச் லைட் பல்பும் எரிந்தது, தனி அழகு
* கடல் அலைகள் வந்து வந்து கரையைத் தொட்டுப் போவதைப் போல… கைப்பிடி துணியில் இன்னொரு அழகி செய்து காட்டிபோதும்–வியந்து நின்றது அரங்கம்.
தேசப் பற்றில் சிலிர்த்தது
நடன விருந்தில் பங்கேற்ற கலைஞர்கள் இறுதியாக இந்திய–ரஷ்யா கொடியை கையில் பிடித்து மேடையை வலம் வந்து ஆடி நின்றபோது… தேசப்பற்று உந்தித் தள்ளிய நிலையில் உணர்ச்சியில் உறைந்ததை உணர முடிந்தது.
ஒரு நிகழ்வு முடிந்து–கண்ணிமைக்கும் நேரத்தில் அழகிகள் அடுத்த நிகழ்வுக்கு ஆயத்தமாகி, மேடையில் தோன்றியதில்–மின்னல், வேகம், பாராட்டாமல் இருக்க முடியாது.
இளமை பூத்துக் குலுங்கும் அழகிகள் கூட்டத்தை கண் எதிரில் பார்த்து, அவர்களின் அங்க–அசைவு–நடனத்தில் நிலைகுத்திய பார்வையில் இருந்தபோது, முதுமைக்கும் இளமை திரும்பியதே–அதுதான் அந்த வசீகர நடனத்தின் வெற்றி. இளம் கலைஞர்கள் சிந்திய வியர்வைக்கு கிடைத்த அங்கீகாரம்.
ஒரே வாக்கியத்தில் சொல்வதென்றால்–‘ரஷ்ய பாலே நடனக் கலைஞர்கள்–இவர்கள் வித்தியாசமானவர்கள்!’

2313 2311

Related Posts