எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆகிட்டேன் (சிறுகதை) ராஜா செல்லமுத்து

writers‘சீக்கிரமாக் கொண்டு போங்க. நாம தாமதிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் பிரசாந்தோட உசுருக்குத் தான் ஆபத்து என பிரசாந்தை காரில் ஏற்றி வைத்து ஆஸ்பத்திரி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.
காருக்கு ரெக்கை முளைத்தது போல் தார்ச் சாலையில் பறந்தது.
‘ஐயோ இப்பிடிக் பண்ணுவான்னு நெனைக்கலியே. இந்தக் காலத்துல ஒரு பொண்ணுக்காக உசுர விடுற பயல நான் பாத்ததே இல்ல. இவ இல்லன்னா இன்னொருத்தி. இன்னொருத்தி இல்லன்னா வேறொருத்தி. வேறொருத்தி இல்லன்னா எவளோ ஒருத்தி. இந்த ஒலகத்தில பொண்ணுக்கா பஞ்சம் .’ ஒரு பொண்ணுக்காக இப்பிடி தற்கொலை முயற்சி பண்ணியிருக்கானே  கூறுகெட்ட பய’ என அப்பா ராசு அழுது கொண்டிருந்தார்.
அம்மா நிர்மலா பேச்சு  மூச்சற்றவளாய்க் கிடந்தாள்.
கார் விரைந்து சென்று ஆஸ்பத்திரி வாசலில் நின்றது. பரபரப்பாக இறக்கப்பட்ட பிரசாந்த் வேகமாக ஐசியூவிற்குக் கொண்டு செல்லப்பட்டான்.
மற்றவர்கள் எல்லாம் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
‘எல்லோரும் இங்கயே நில்லுங்க. டாக்டர் கூப்பிடும் போது வந்தாப் போதும்’ என்ற நர்ஸின் கட்டளையை யாரும் மீற வில்லை. ’
எல்லாருக்கும் கவலை கனமாய் இருந்தது.
‘இப்பிடிச் செய்வான்னு நெனைக்கலியே. அந்தப் பொண்ண உசுருக்கு உசுராக் காதலிச்சிருக்கான் போல இருக்கு. அதான் தாங்க முடியல. அதுவும் இந்தக் காலத்துல போயி ஒரு பொண்ணுக்காகத் தற்கொலை பண்ணிக்கிறது ரொம்ப முட்டாள் தனம்’ என்றான் ஆஸ்பத்திரியில் இருந்த கணேஷ்.
‘அப்பிடிச் சொல்லாத கணேஷ், நெறயாப் பேரு காதல ஒரு பொழுதுபோக்கா நெனைக்கிறாங்க. இவனோட காதல் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்திருக்கு போல’ இவன் காதலிச்ச பொண்ணு எங்க இருக்காம்?’ என கேள்வியாய்க் கேட்டான் தயாளன்.
‘அந்தப் பொண்ணும் இங்க வந்திட்டுத்தான் இருக்காம். இங்க வந்தா என்ன நடக்கணும்னு தெரியலையே’ ஏற்கனவே கொதிச்சுப் போய் இருக்காங்க எரியுற தீயில நெய்ய ஊத்துனது மாதிரி ஏன் இங்க வரணும்’ என்றார் கணேஷ்.
சற்று நேரத்திற்கெல்லாம் பச்சைக் கலர் சுடிதாரும் சிவப்புக் கலர் டாப்பும் போட்டு வந்தாள் சுசிதா. அழகுப் பதுமை வெண்ணெய்க்கு கண்முளைத்தது போல அழகு வாழைத் தண்டுகள் கொண்டு கால் முளைத்த வெள்ளைக் காளாய் நடந்து வந்தாள். பரபரப்பாய் இருக்கும் இந்த இடத்தில் அவள் அழகு பற்றிப் பேசுவது அநாகரீகம் தான். சுசிதா நடந்து வந்தாள். அவளுடன் அவள் தாய் தந்தை, தோழிகளும் நடந்து வந்தார்கள்.
வேண்டாம் ‘சுசி உள்ளே போக வேணாமே’ தடுத்தார் அப்பா.
ஏன்?
அந்தப் பையனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா  உன்னைத்தான் சொல்வாங்க வேண்டாமே’ அம்மாவும் தடுத்தாள்.
‘ஏம்மா அவன நானா வெசம் குடிக்கச் சொன்னேன். அவன் குடிச்சா அதுக்கு நான் பொறுப்பாக முடியுமா? முரண்பட்டாள் சுசி.
‘அப்பிடிப் பேசக் கூடாதும்மா. ஒன்னை லவ் பண்றேன்னு சுத்திச் சுத்தி வந்திருக்கான். அதுவுமில்லாம ஒன்னோட பேர எழுதிவச்சிட்டுத்தான் வெசம் குடிச்சிருக்கான். லோக்கல் போலீஸ் ஸ்டேசனல்லயும் கேஸ் புக் பண்ணிருக்காங்க. அந்தப் பையனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நிச்சயம் நீ கம்பி என்ன வேண்டியது தான்.
‘என்னம்மா சொல்ற? எவனோ வெசம் குடிச்சதுக்கு நான் ஏன் ஜெயிலுக்கு போகணும்’ இது தப்பு. நான் உள்ள போயிட்டு வாரேன்’ எனச் சென்றாள் சுசிதா.
சுஷிதாவைப் பார்த்ததும் பிரசாந்தின் அப்பா அம்மா ஓடி வந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களைச் சமாதானப் படுத்தினார்கள்.
சுஷிதாவின் பெண் தோழிகள் அவளை சற்றே ஆசுவாசப் படுத்தினார்கள்.
‘ஏய் வேண்டாம் சுஷி. பிரச்சினை பெருசா இருக்கும் போல. வா போகலாம்’  என வெளியே கூப்பிட்டார்கள்.
‘இந்தா இந்தப் பொண்ணத்தான் காதலிச்சானாம்’ என்று சிலர் சொல்ல.
‘ஆமா இவ பெரிய அழகியா என்னா? ஒட்டடக்குச்சி  மாதிரி ஒசரமா இருக்கா. இந்த மூஞ்சிக்கா இவன் வெசம் குடிச்சான். நானா இருந்தா வெசத்த இவளுக்குக் குடுத்து கொரவளயப் புடிச்சுக் கொன்னுருப்பேன். மூஞ்சியும் ஆளும் பாரு’ என கடுகடுத்தனர் ஆட்கள்.
‘ஏய் மக்களும் அவன் பக்கம் தான் இருக்காங்கடி. வா பேசாமா வெளிய போகலாம்’ என்றனர் தோழியர் ‘முடியாது நான் ஏன் போகணும்? என்றாள் சுசிதா.
அப்பிடின்னா ஒனக்கு லவ் வந்திருச்சா? தோழிகள் கிண்டலாய்க் கேட்டனர்.
‘அதெல்லாம் ஒண்ணுமில்ல. எனச் சுசிதா சொல்ல ஐசியூவிலிருந்து டாக்டர்கள் வெளியே வந்தனர்.
‘சார் என்னாச்சு என்னோட பிரசாந்துக்கு என்னாச்சு என பிரசாந்தின் அம்மா அப்பா டாக்டரை நோக்கி ஓடினார்கள்.
டாக்டர் கண்ணாடியை கழற்றினார். இப்ப என்னால எதுவும் சொல்ல முடியாது. குளோர பார்ம் குடுத்து ட்ரீட்மெண்ட குடுத்திருக்கோம். இன்னும் 2 மணி நேரம் கழிச்சுத்தான் எதுவும் உறுதியாச் சொல்ல முடியும்’ எனச் சொல்லிவிட்டு டாக்டர் செல்ல, சுஷிதாவை கொலை வெறியோடு பார்த்தனர்.
எம்பையனுக்கு மட்டும் ஏதாவது ஒண்ணு ஆகட்டும் என்னா செய்றேன்னு பாரு’ என முறைத்தார் அப்பா.
‘ஏம்மா நீ   கல்யாணம் பண்ணப் போறவர் –  ஏம்மா எம் புள்ளையா இருக்கக் கூடாது. உன்னையே நெனச்சுட்டு இருந்த எம் மகனே இப்பிடித் தவிக்க விட்டுட்டியே .பெத்த தாய் தகப்பன விட்டுட்டு  உனக்காக வெசம் குடிச்சிருக்கான்னா  உம்மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தா இந்த மாதிரிச் செஞ்சுருப்பான். எம்புள்ள நல்ல பயம்மா. பாசக்காரன். யார் மேலயும் பாசம் வைக்க மாட்டான். பாசம் வச்சுட்டா அவங்க கெடைக்கலன்னா இப்பிடித்தான் ஏதாவது ஏட்டிக்குப் போட்டியாச் செய்வான். தவமிருந்து பெத்த ஒத்தப் புள்ளம்மா போய்ச் சேந்திருவான் போல இருக்கே’ புலம்பினாள் பிரசாந்தின் அம்மா.
பிரசாந்தின் அம்மா பேசிய பேச்சில் நெகிழ்ந்தாள் சுசிதா. அவளுக்குள் என்னமோ செய்தது…
‘யம்மா  உன்ன ரொம்ப நேசிச்சாம்மா. வீட்டுல எப்பவுமே ஒன்னப் பத்தித்தான் பேசிட்டு இருப்பான். எனக்குப் பெறகு வாரிசு எம்புள்ளதான் இருந்தான். அவன் போயிட்டா எங்களுக்கு கொள்ளி போடக் கூட ஆள் இல்லை. அப்பிடி ஏதாவது தப்பு தண்டா நடந்து போச்சுன்னா நீதாம்மா எங்களுக்குக் கொள்ளி வைக்கணும்’ என குமுறிக் குமுறிக் அழுதார் பிரசாந்தின் அப்பா.
சுசிதா கண் கலங்கினாளேயொழிய மனம் கல்லாய்த்தான் இருந்தது.
பிரசாந்த் படுக்கையில் கிடந்தான். அவசரச் சிகிச்சையளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கட்டிலில் கண் மூடிக்கிடந்தான்.
சுசிதா தன் தோழிகளுடன் நடந்தாள். நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
சுசிதா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாள். அவளை யாரோ பின் தொடர்வது போல் இருக்கவே பட்டெனத் திரும்பிப் பார்த்தாள்.
சிரித்தபடியே அவள் பின்னால் நின்றிருந்தான் பிரசன்னா.
‘ஹலோ யார் நீங்க?’ என்றாள் சுசிதா.
பிரசாந்த் விழித்தான்.
‘ஹலோ ஒங்களத்தான்’
‘ஹாய் எம் பேரு பிரசாந்த். ஒங்களை கடந்த 6 மாசமா பாலோ பண்றேன். நான் பாத்ததிலயே நீங்க தான் அழகுன்னு நெனைக்கிறேன். ஒங்கள சின்சியரா லவ் பண்றேன்’ படபடவெனச் சொன்னான்.
‘ஹலோ ஒங்கள யார்ன்னே  தெரியாது’ நான் எப்பிடி ஒங்கள லவ் பண்ண முடியும்?’ கோபப்பட்டாள் சுசிதா.
‘காதலுக்கு காரணம் இருக்க முடியாது. காரணம் இருந்தா அது காதலா இருக்க முடியாது. ஒங்கள எனக்குப் புடிச்சிருக்கு அவ்வளவுதான்’ ஸ்டைலாய்ச் சொன்னான் பிரசாந்த்.
‘‘இப்பிடி முட்டாள்தனமா என் பின்னாடி வந்தீங்கன்னா போலீஸ்ல சொல்லிருவேன்’’ எனப் பயமுறுத்தினாள்.
‘ஒனக்காக உசுர விடவே தயாரா இருக்கேன். போலீஸ்ட்ட அடியா வாங்க மாட்டேன்’ சொல்லு எனச் சொன்னான்.
பிரசாந்த் பேசிய பேச்சுக்கள் சுசிதாவுக்குக் கோபத்தைத் தூண்டியது. அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள். இப்படியாய் அவள் எங்கு சென்றாலும் பின்னாலயே போவதை வாடிக்கையாய் வைத்திருந்தான். ஒரு முறையல்ல பலமுறை போலீஸில் சொன்னாள். போலீசார் பிரசாந்தைக் கண்டித்து அனுப்பினார்கள். ஆனால் அவன் அவளைப் பின் தொடர்வதை நிறுத்தவே இல்லை. இதனால் சுசிதாவிற்கு பெரும் தலைவலியே ஏற்பட்டது. அவள் பின்னால் செல்வது வாடிக்கையாய் ஆனது.
சுசிதாவிற்கு என்னென்ன பிடிக்கும் என்னென்ன பிடிக்காது என்பதையெல்லாம் தெரிந்து வைத்து வாங்கிக் கொடுத்தான். சுசிதாவின் வீட்டில் நல்ல நண்பரானான். அவனை எல்லோருக்கும் பிடித்திருந்தது. சுசிதாவிற்கு மட்டும் பிடிக்காமல் இருந்தது. இவனுடைய காதலை ஏற்க மறுத்தாள். என்னென்னமோ குட்டிக்கரணம் போட்டும் அவள் மசியவே இல்லை.
‘டேய் பிரசாந்த் நீயும் என்னென்னமோ பண்ணிப் பாத்திட்ட . அவ ஒன்னோட வழிக்கு வரல. இனி என்ன பண்ணப்போற’ என நண்பர்கள் கேட்டனர்.
பிரசாந்த் கண் கலங்கினான்.
‘டேய் சுசிதாவ எனக்கு ரொம்பப் புடிக்கும்டா. அவ இல்லன்னா நான் இல்லடா இனி இந்த ஒலகத்துல நான் உசுரோட இருக்கப் போறதில்ல  என்று விஷம் குடித்தவன் தான். இன்று ஹாஸ்பிட்டலில் கிடந்தான்.
சுசிதாவின் நினைவுகள் நிகழ்காலம் வந்தன. டாக்டர்கள் பிரசாந்த் இருந்த அறையிலிருந்து வெளியே வந்தனர்.
‘சுசிதாவிரக்தியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணுனோம்… பிரசாந்தக் காப்பத்த முடியல. ஏதோ நெனைச்சுட்டு இருக்காரு போல ‘அவருக்குப் புடிச்சவங்க யாராவது இருந்தா உள்ள போங்க. கடைசியா பேசணும்னு ஆசைப் படுறார்’ என்று டாக்டர் சொன்னதும்.
எல்லோரும் சேர்ந்து சுசிதாவை உள்ளே அனுப்பினார்கள்.
சுசிதா அழுது கொண்டே உள்ளே சென்றாள். பிரசாந்த் கண் மூடிக் கிடந்தான். சுசிதா அவன் அருகே சென்றாள்.
‘‘பிரசாந்த்… ஸாரி என்ன மன்னிச்சிடு. ஒன்னோட காதல் எனக்குத் தெரியாமப் போச்சு. ஒன்னோட கடைசி ஆசைய நிறைவேத்துறேன். ‘ஐ லவ்யூ பிரசாந்த்’ என்று வாய்விட்டுச் சொன்னாள். இந்த வார்த்தை சொன்னதும் சுசிதா ஆச்சர்யத்தோடு பார்த்தாள்.
அப்போது பிரசாந்த் எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தான்.
‘சுசிதா நீ சொன்னதும் எனக்கு போன உசுரு திரும்பி வந்துருச்சு’ என மெதுவாகச் சொன்னான்.
நாடகள் நகர்தன.
பிரசாந்த் சுசிதா அருகே வந்தான். சுசிதா  ஒரு மாதிரியாக பிரசாந்தைப் பார்த்தாள்.
மருத்துவமனை பில் கவுண்டரில் பணம் கட்டிக் கொண்டிருந்தார் பிரசாந்தின் அப்பா. ரொம்ப நன்றி டாக்டர் எம் பையனோட காதலக் காப்பத்திட்டீங்க’ என டாக்டர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தார். உடன் நண்பர்களும் சேர்ந்திருந்தனர். பேசாம ஆஸ்பத்திரியிலே  ஊசி மருந்து போடாம காதலச் சேக்கிற இடமா  மாத்திடுவோம். நெறையாத் தப்புப் பண்ணிட்டோம்.
கொஞ்சமாவது நல்லது செஞ்சிட்டுப் போவமே’ என டாக்டர்கள் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள்.
‘டேய் என்னை எப்பிடியோ ‘ஐ லவ் யூ’ சொல்ல வச்சிட்டியே’ என சுஷிதா சொல்லப் பிரசாந்த் அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தான்.
‘எப்பிடி இருந்த நான் இப்பிடியாகிட்டேன்’ என்றான் பிரசாந்த்.
சுசிதா பிரசாந்தை செல்லமாக அடித்துக் கொண்டிருந்தாள்.