தெய்வம் தந்த தீர்ப்பு (சிறுகதை) ராஜா செல்லமுத்து

writers‘‘நீங்க செல்வி தானே?’’ என்று கொஞ்சம் தயக்கமாய்க் கேட்டான் பாஸ்கரன்.
‘‘ஆமா?’’ எனத் திரும்பினாள் செல்வி.
‘‘நீங்க… நீ தடுமாறினான். என்னைத் தெரியாதா? சற்று உற்று நோக்கினாள் செல்வி.
நீங்க… பாஸ்கரன் தானே?
‘‘ஆமா செல்வி… கல்யாணம் பண்ணிட்டு வெளியூர் போயிட்டன்னு தெரியும். ஆனா நாம ரெண்டு பேரும் இப்பிடி ஒரே ஊர்ல சந்திப்போம்னு நெனச்சுக் கூடப் பாக்கல எப்பிடியிருக்க’’ ஆவலாய்க் கேட்டான் பாஸ்கரன்.
‘‘ம்… நல்லா இருக்கேன் பாஸ்கர். நீ எப்பிடி இருக்கே?
‘‘நல்லா இருக்கேன்.’’ ஆமா… ஒங்க வீட்டுக்காரரு என்ன பண்றாரு.
அவரு ஒரு மரக்கடையில வேல பாக்குறாரு’’
‘‘நீ என்ன பண்ற?’’
நல்ல வேல தான் பாத்திட்டு இருக்கேன்!
‘‘அப்பிடின்னா?’’
‘‘அஞ்சு வீட்டுல சமையல் பண்ணி போடுறேன்…’’ என சலிப்பாய்ச் சொன்னாள் செல்வி.
‘‘அஞ்சு வீடா? அப்பிடின்னா காலையில எத்தன மணிக்கு எந்திருக்கிற?
‘‘காலையில மூணு மணிக்கெல்லாம் எந்திருச்சுடுவேன். ஒவ்வொரு வீடாப் போயி சமச்சிட்டு இருப்பேன். காலையில நல்லா விடிஞ்சப்புறம் வந்து குழந்தைகளைப்  ஸ்கூலுக்கு அனுப்புவேன். அப்பெறமா தான் என் வீட்டோட வேல. டைம் சரியா இருக்கும்’’ என்றாள் செல்வி.
‘‘படிச்சிருக்கலாமே செல்வி… இப்பிடி கஷ்டப்படணும்னு அவசியமில்லையே’’
‘‘என்ன பண்றது பாஸ்கரா! நம்ம மரமண்டையில அவ்வளவு தான் ஏறுச்சு. அதான் இந்த வேல… ஒனக்கு ஒண்ணு தெரியுமா? சமையல் படிக்கிறதுக்குன்னு தனியா ஒரு படிப்பு இருக்காமே. நான் அதப்படிக்காமலே நல்லா சமையல் பண்றேன்னு சொல்றாங்க. என்னோட கைப்பக்குவம் அப்பிடியொரு ருசியாம். எல்லா வீட்டுக்காரங்களும் சொல்றாங்க’’ சந்தோசமாய்ச் சொன்னாள் செல்வி.
‘‘பாத்து எவ்வளவு வருசமாச்சு ஒண்ணாப் படிச்சோம்… என்னென்ன பேசுவோம், நெனச்சாலே மனசு வலிக்குது செல்வி.
‘‘என்ன பண்றது பாஸ்கரா இல்லாதவன் வீட்டுல பெறந்தா வயித்துக்கு பாக்க வேலைக்குப் போய் தான் ஆகணும். கட்டிட்டு வந்த வீட்டுலயும் அவ்வளவு சொத்தில்ல ஒரு ஆளு வேல செஞ்சு எப்பிடிக் குடும்பம் நடத்துகிறது. அதான் நானே வேலைக்கு கிளம்பிட்டேன்.  நான் கத்துக்கிட்ட சமையல் சோறுபோடுது. நம்ம வீட்டுல செய்றது மாதிரியே இன்னொரு வீட்டுல செய்றோம் . அவ்வளவு தான் மிஞ்சுறதக் கொண்டு வாறேன். அதுவே வீட்டுக்கு சரியா இருக்கு’’ பெறகு என்ன கவலை வேண்டியிருக்கு.
இதுல ஒரு பெரிய வீட்டுல ஒரு பெரியம்மாவும் பெரியப்பாவும் என்னோட சமையலுக்கு அடிமை. அப்பிடிச் சாப்பிடுவாங்க. என்ன பேச்சுலர்ஸ் இருக்கிற வீட்டுல சமைக்கிறது தான் கொஞ்சம் கஷ்டம். அங்கங்க அப்பிடி அப்பிடியே கெடக்கும். அதுலயும் தனியாகச் சமைக்கிறதுக்கு கொஞ்சம் பயமா இருக்கும். எல்லாரும் ஒண்ணு போல இருக்க மாட்டாங்கள்ல’’ கொஞ்சம் பணிவாய்ச் சொன்னாள் செல்வி.
‘‘ஆமா செல்வி… நீ சொல்றது உண்மை தான். இப்பவெல்லாம் ஒரு பொண்ணு தனியா வெளிய போய்ட்டு வீட்டுக்கு வர்றதுல அவ்வளவு செரமம் இருக்கு’’ நீ இத்தன வீடுகளுக்குப் போயிட்டு வாரியே அதுவே பெரிய விசயம் என்று பெருமிதத்தோடு சொன்னான் பாஸ்கரன்.
‘‘பேசிட்டே இருக்கோம்.  நீ கல்யாணம் பண்ணிட்டயா பாஸ்கரா?’’
‘‘ம்… பண்ணிட்டனே… ரெண்டு குழந்தைங்க… ஒருத்தன் ஸ்கூலுக்குப் போறான். ஒருத்தன் இடுப்புல இருக்கான். வீட்டுக்காரம்மாவும் ஏதோ வேல செய்றா, ரொம்ப கஷ்டமாயிருக்கு செல்வி.
‘‘நீ எப்பவுமே சாமி… மந்திரமுன்னு இருப்ப அதுமட்டுமில்லாம நல்லாப் படிப்பியே பாஸ்கரா… என்ன வேல பாக்குற? கேள்வியாய்க் கேட்டாள் செல்வி.
‘‘என்ன வேல பாப்பேன்னு நெனைக்கிற? நீயே சொல்லு பூடகம் போட்டான் பாஸ்கரன்.
‘‘டாக்டர்… என்ஜினீயர்… வக்கீல் என படபடவென அடுக்கினாள். எல்லாவற்றிற்கும் இல்லையன்றே தலையசைத்தான் பாஸ்கரன்.
சற்று யோசித்தாள் செல்வி.
‘‘ம்… அப்பெறம் என்ன வேல செய்ற டீச்சர், மேனேஜர், கேசியர் அதற்கும் இல்லையென்றே சொன்னான்.
‘‘சரி… இதுக்கு மேல எனக்குத் தெரியாது நீயே சொல்லு’’ செல்வியை நிதானமாய் பாத்தான் பாஸ்கரன்.
‘‘நீ அஞ்சு வீட்டுல சமைக்கிற. நான் பத்து வீட்டுல இருக்கிற பிள்ளையார் கோயில்ல மந்திரம் சொல்றேன். அவ்வளவு தான்.’’ என்றான்.
‘‘அப்பிடின்னா?’’ வியப்பாய்க் கேட்டாள் செல்வி.
‘‘ஒவ்வொரு வீட்லயும் இருக்கிற சின்னச் சின்ன பிள்ளையார் சிலைகள தண்ணியில கழுவி பொட்டு வச்சு, பூவச்சு மந்திரம் சொல்லுவேன் .இது தான் இப்போதைய வேல. அவங்க குடுக்கிற காசு தான் குடும்பத்தக் காப்பாத்துது’’ பாவமாய்ச் சொன்னான் பாஸ்கரன்.
‘‘என்ன பாஸ்கரா இப்பிடிச் சொல்ற? சரி பரவாயில்ல  புண்ணியம் சேக்குற?’’ பெருமிதமாய்ச் சொன்னாள் செல்வி.
‘‘புண்ணியத்தை விட பசி பெருசு செல்வி. கோயில யார் வேணுமென்றாலும் சுத்தம் செய்யலாம். யார் வேணும்னாலும் மந்திரம் சொல்லலாம். ஆனா அவனவன் பசிக்கு அவனவன் தான் சம்பாரிக்கணும். நெறையா எடங்களுக்கு வேலைக்குப் போனேன். எங்கயும் நிக்க முடியல… யாரையும் நைசாப் பேசிக்….  கவுக்கத் தெரியல… அதான் எங்கவும் ரொம்ப நாள் என்னால நீடிக்க முடியல…’’ என்றான் பாஸ்கரன்.
‘‘சரி பாஸ்கரா எங்க வீட்டுக்கு வா…’’ என தன் வீட்டின் முகவரியைக் கொடுத்துச் சென்றாள் செல்வி.
அன்றும் வழக்கம் போல் செல்வி வீடுகளில் சமையல் செய்து போட்டாள்.
‘‘செல்வியோட சமையல் பக்குவம் என்ன மாதிரியிருக்கு. இவ கைக்கு தங்கக் காப்புப் போடலாம்’’ எனச் சொன்னார் ஒருவர்.
பாஸ்கரனும் எல்லா வீடுகளுக்கும் சென்று பிள்ளையாரைக் கழுவிச் சுத்தம் செய்தான். மணி அடித்தான். பாடல் பாடினான், பூஜை செய்தான்.
செல்வி சமையல் செய்த வீட்டிலிருந்து சாப்பாடு, குழம்பு கொண்டு வந்தாள். வீட்டில் உள்ளவர்கள் பசியாறினார்கள். பாஸ்கரன் பழம், தேங்காய் கொண்டு வந்தான். வீட்டில் உள்ளவர்களின் பசி அடங்கவில்லை. கொஞ்சக் காலங்களில் பூஜை செய்து பிழைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
‘‘ஏங்க வேற வேல செய்யலாமே . இத நம்பி எவ்வளவு தூரம் போக முடியும்’’ என்றாள் மனைவி . யோசித்தான் பாஸ்கரன்.
பூஜை மூலம் வரும் வருமானம் போதுமானதாக தெரியவில்லை . முடிவெடுத்தான்பாஸ்கரன் . அவன்
மற்றுமொரு முறை செல்வியைச் சந்திக்க வேண்டிய நிலை எற்பட்டது.
‘‘என்ன பாஸ்கரா எப்பிடியிருக்க?
‘‘ம்… இருக்கேன்…
‘‘செல்வி… எனக்காக ஒண்ணு செய்வியா?
‘‘சொல்லு பாஸ்கரா’’
வீட்டுல ரொம்பக் கஷ்டமாயிருக்கு. நானும் ஒன்ன மாதிரி சமையல் பண்ண வரலாமா? என்றான்.
‘‘ஓ … தாராளமாக என்று கூறிக்கொண்டே  பாஸ்கரனை அதிர்ச்சியாய் பார்த்தாள் செல்வி.
பிள்ளையார் பாஸ்கரனை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது.