‘கவனகர்’ கந்தசாமி…(சிறுகதை) ஜி சுந்தரேசன்

storyஅரிய கலைகளில் ஒன்றான கவனகத்தையும்  அதில் தேர்ந்த தன் திறமையையும் இன்றைய தலைமுறையினருக்கு விளக்க வேண்டி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, உற்சாகத்துடன்  நாமக்கல்லில் ரயிலேறினார் கவனகர் கந்தசாமி.
அதென்ன கவனகம் என்று ஆச்சர்யப்பட்டு கேட்பவர்கள், கூட்டத்தில் கந்தசாமி கூறுவதைக் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள். முதலில் ரொம்பப் பேசுவார். சொல்லப்போகும் விஷயம் முக்கியமானதால் வாசிப்பவர்கள் பொறுத்துக் கொள்ளவேண்டும்
சென்னையில் கூட்டம் ஒரு 300 பேரைக் கொண்டதாயிருந்தது. அனைவரும் ஆவலுடன் இவரது திறமையைக் காண ஒரு கல்யாண மண்டபத்தில் கூடியிருந்தனர்.
ஒரு சிலர் எப்பொழுதோ டிவியில் ஒளிபரப்பான இவரின் நிகழ்ச்சியைக் கண்டு வியந்தததால்,  நேரில் காண, வீட்டில் உள்ள குழந்தைகளுடன் வந்திருந்தனர்.
முதலில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் பேசினார்:
ஐயா கந்தசாமி அவர்கள். இவர்  ஒரு அஷ்டாவதானி. அவர் அறிவின் ஆற்றல் அளவிடற்கரியது. நினைவாற்றல் நினத்துப்பார்க்க முடியாத அளவுக்கு ஆச்சர்யம் தரக்கூடியது. மனித மூளையின் அற்புதத் திறனை வெளிக்காட்டும் முறையில் நம்மிடையே பல செயல்களை ஐயா நிகழ்த்திக் காட்ட இருக்கிறார்.  இன்றைய அபாகஸ் (ABACUS) போன்ற,  மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்தும் பயிற்சியினை நம் தமிழறிஞர்கள், காசைக் கறக்காமல், ஆர்வம் உள்ளவர்களுக்கு அன்றே கற்றுத் தந்திருக்கின்றனர்.. இனி கவனகர் கந்தசாமி ஐயா அவர்கள் நம்மிடையே அந்த அற்புதக்கலையை வெளிப்படுத்துவார்.”
கூட்டம் அரைநிமிடம் இடைவிடாமல் கைதட்டியது.
கைதட்டல் நின்றதும் கவனகர் கந்தசாமி பேசினார்:
‘ முதல்ல கவனகம்னா என்னன்னு சொல்றேன். சிம்பிளா சொல்லப்போனா மனதில கவனமா – தேவைப்பட்டதை அழுத்தமா பதிஞ்சு வைச்சுக்கிறதுதான் கவனகம்.. தேவைப்பட்டபோது அதை நாம கூப்பிட்டா, அது அப்பிடியே ஓடியாந்திரும். அதுக்கு சில டெக்னிக் அல்லது பயிற்சி தேவைப்படும் அவ்வளவுதான். ஸ்கூல்ல பாடத்தை நல்லா கவனின்னு ஆசிரியர்கள் சொல்றதோட அர்த்தம் இதுதான்.”
மேலும் காலத்திற்கு ஏற்றவாறு மனித மனதையும் மூளையும் இணைத்து விவரித்தார்.
மனிதனின் மூளை ஒரு ஹார்டுவேர் போல.  மனம் ஒரு சாப்டு வேர் மாதிரி. இப்ப உள்ள கம்ப்யூட்டரையெல்லாம் இந்த ரெண்டும் சேர்ந்து தூக்கிச் சாப்பிட்டுடும். இந்த ஜிகாபைட், மெகாபைட்ங்கிற வரையறைக்குள்ள இவுகளை அடக்கிட முடியாது. ஆங்கிலத்தில இன்பினிட்டுன்னு -infinite-  சொல்றாங்களே அதைப்போல.’
தொடர்ந்தார் கவனகர்.
இந்த மூளை + மனதின் ஆற்றலை அல்லது நுட்பத்தை மேலை நாடுகளில்ல அல்பா மைண்ட் , பீட்டா மைண்டுனு பேர் வைச்சு பிரிச்சு அழைக்கிறாங்கய்யா . சிலபேர் அதைக் கத்துகிட்டு வந்து இங்க தொழில் பண்ராங்க.
பரவாயில்ல . நல்லதைக் கத்துக்கிட நாலு காசு செலவழிக்கிறது தப்பில்லை.  போகட்டும்  விசயத்துக்கு வாரேன். நாம எதையுமே அரைகுறையாத்தான் தெரிஞ்சுக்குவோம். முழுமையாத் தெரிஞ்சுக்கிறதும் இல்ல.. அட தெருஞ்சுகிட்டதை முழுமையாப் பயன்படுத்திக்கிறதுமில்ல. அதுமாதிரிதான் நம்ம மூளையின் ஆற்றலை நாம முழுமையாப் பயன்படுத்திக்கலைன்னு  சொல்ல வாறேன்.”
சிரித்துக் கொண்டே நயம்படச் சொன்னார் கவனகர்.
உதாரணத்துக்கு சொல்றேன் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த ஆர்வலர் என்னை அஷ்டாவதானின்னு அறிமுகப்படுத்தினார். வடமொழியில அஷ்டம்னா எட்டு. அதாவது நான் எட்டு கவனகம் கொண்ட திறமைசாலின்னு அறிமுகப்படுத்தினார். இல்ல.. நான் பத்து கவனகம் பயின்றவன். அதாவது தசாவதானி.  நூறு கவனக ஆற்றல் கொண்ட  சதாவதானி செய்குதம்பிப் பாவலரும் நம்ம தமிழன்தான்யா..” என்று சொல்லிவிட்டு நிகழ்ச்சியைத் தொடங்கினார் கவனகர் கந்தசாமி.
முதலில் கூட்டத்தைப் பார்த்து திருக்குறளில் ஏதாவது ஒரு குறள் எண்ணை சொல்லச் சொன்னார்.
ஒருவர் ஆர்வமுடன் எழுந்து 444 வது குறள் என்னன்னு சொல்ல முடியுமா”ன்னு கேட்டார்.  மிகச் சரியாகச் சொன்னார் கவனகர்.
கூட்டம் கைதட்டி ஆரவாரித்தது.
அடுத்தது எண் கவனகத்துக்குப் போவோமா.. என்று சொல்லிவிட்டு, உங்கள்ல யாராவது  20  எண்களை கட்டம் போட்டு  குறிச்சு வைச்சுக்குங்க அதை மாத்தி மாத்தி சொல்லுங்க அதை நீங்க குறிச்சு வைச்ச வரிசையிலே திரும்ப நான் சொல்றேன். சரிங்களா..”
அதன்படியே சரியாகச் சொல்ல கூட்டம் அசந்துபோனது.
இது போன்று பிறந்த தேதி சொன்னவர்களின் பிறந்த கிழமைகளைப் பட்டென்று சொன்னார்.
பெயர் கவனம், எழுத்துக் கவனம், வண்ணக் கவனம் போன்றவற்றிலும் தன் திறமையை வெளிப்படுத்தி,  கூட்டத்தை அசரவைத்தார் தசாவதானி கந்தசாமி.
வந்திருந்த எல்லோருக்கும் ஆச்சர்யம்.  அவரைச்  சூழ்ந்து கொண்டு  கேள்விமேல்
கேள்விகள் கேட்டனர். எல்லாவற்றிற்கும் புன்சிரிப்போடு பதில் சொன்னார் கவனகர்.
ஒருவர் கேட்டார்  – இதை எல்லோருக்கும் சொல்லித் தருவீங்களா..”
இதில என்ன இருக்கு வாங்க சொல்லித்தாரேன்..”
பணம் ரொம்பக் கேப்பீங்களோ.?.” என்றார் ஒருவர் தயக்கத்துடன்.
ஒங்க பையன் எல் கே ஜி பீஸைவிடக் கம்மியாத்தான் கேட்பேன்..”
இந்தத் திறமையை வைச்சுகிட்டு என்னலாம் பண்ணலாங்க..” ஆர்வமுடன் கேட்டார் இன்னொருவர்.
என்ன வேணும்னாலும் பண்ணலாம்.  அது உங்க திறமையப் பொறுத்தது.”
நீங்க இத எப்படிப் பயன்படுத்திறீங்க..?  ஐ மீன்.” இழுத்தான் இன்றைய இளைஞன்.”
உங்க கேள்வி விளங்கலைய்யா..”
இதை வச்சுத்தான் உங்க வருமானமா..இல்ல ” திரும்பக்கேட்டான் இளைஞன்.
ஒரு கணம் யோசித்துவிட்டு சொன்னார் கந்தசாமி:
இந்த மாதிரிக் கூட்டங்களுக்கு உங்களைப்போல படித்த இளைஞர்கள் வர்றதில்லையே தம்பி.  வந்தா நீங்க கேட்ட கேள்விக்கு பதிலிருக்கும். குறிப்பாச்  சொல்லப்போனா, இந்தத் திறமைய எப்படி மார்க்கெட் பண்றதுன்னு எனக்குத் தெரியலை.  இந்தக் கலையைக் கையாண்ட முன்னோர்களும் இதை வச்சுப்பணம் பண்ணனும்னு நினைக்கலை ..”
பின் ஒருமுறை அந்த இளைஞனை மேலும் கீழும் பார்த்துக்  ட்டார்.
தம்பி  நீங்க என்ன படிச்சிருக்கீங்க..”
பி.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ்..”
நீங்க இந்தக் கலைய எங்கிட்டக் கத்துகிட்டு அதை வித்யாசமாப் பயன் படுத்தலாமே..”
எப்படி..?” கண்ணில் ஆர்வமுடன் கேட்டான் இளைஞன்.
சிரிப்போடும் உள்ளார்ந்த அர்த்தத்துடன் சொன்னார் கவனகர்.
இந்தக் கலையை நீங்க என்கிட்டப் படிச்சு கைதேர்ந்துட்டா.. உங்க கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்கில உள்ள அத்தனை போல்டரையும்  நீங்க உங்க மெமரியில ஏத்திக்கலாம். கம்ப்யூட்டர் கரப்ட் ஆனாக்கூட பாதிப்பு ஏதும் வாராதுல்ல..”
கவனகரை மனதுக்குள் பாராட்டிவிட்டு சொன்னான் இளைஞன்:
‘‘சார் நீங்க சாதாரண ஆளில்லை சார்.. ’’
‘‘நீங்க சொல்றது சரிதான் தம்பி.. சாதாரண ஆள் கவனகர் ஆக முடியாதில்ல..’’
எந்தப் பால் போட்டாலும் கோல் போட்றாரே என்று வடிவேல் போல் ஆச்சர்யப்பட்டான் இளைஞன்.
குனிந்து அவன் காதில்  மெதுவாகச் சொன்னார் கந்தசாமி :
‘‘ தம்பி.. நீங்க ஒரு கவனகரா மாறி உங்க மைண்ட் கரப்ட்டா இருந்தா. உங்க கம்பெனியின் முக்கியமான டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும பென் ட்ரைவ் (pen drive) இல்லாமலேயே காப்பி பண்ணி அடுத்த கம்பெனிக்கு லாபத்துக்கு விக்கலாம். ஏன்னா நீங்க இந்தக் காலத்து ஆள் பாருங்க..   என்ன… . உங்களுக்கு கவனகர்னு பேர் வாராது. ட்ரெய்டர்னு பேர் வரும்  பரவாயில்லையா..?”
இளைஞன் பதில் பேசாமல் விக்கித்துப் போனான்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவருக்கு ரொம்ப மகிழ்ச்சி.
காரில் கந்தசாமியை ஹோட்டல் ரூமிலிருந்து ரயிவே ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லும்போது
‘‘ ஐயா.. வந்திருந்த எல்லோருக்கும்  உங்க நிகழ்ச்சி ரொம்பப் புடிச்சுப் போச்சு. அத்தனை பேரையும் அசத்திப் புட்டீங்க..என்ன ஒரு நினைவாற்றல் ஐயா உங்களுக்கு’’ என்று மன நிறைவுடன் சொன்னார் விழா அமைப்பாளர்.
பெருமிதத்தோடு ரயிவே ஸ்டேஷனில் இறங்கினார் கவனகர் கந்தசாமி. கைப்பையைத் திறந்து பார்த்துவிட்டு
அழைத்து வந்தவர் காதில் சொன்னார் கவனகர் கந்தசாமி
பர்ஸை ஹோட்டல் ரூமில மறந்து வைச்சுட்டேன். திரும்பப் போய் எடுத்து வந்திடலாமா. வண்டிவர நேரமிருக்கில்ல..”
எவ்வளவு பெரிய கவனகர் இவர். இந்தச் சின்ன விஷயத்தை மறந்திட்டாரே என்று நினைத்து விழித்தபடியே   நின்றார் விழா அமைப்பாளர்.