விழி திறந்தாள்! (சிறுகதை) ராஜா செல்லமுத்து

DE10_PG3_3-COL_DEL_1204348fபிரசன்னா புக் ஃபேர் போவமா?
‘போவோம் சார்’ என்றான் பிரசன்னா.
இருவரும் பொங்கல் சந்தடிகளைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தோம். மவுண்ட் வழியாகப் போய் ஒரு வழியாக நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தை அடைந்தபோது மணி ஐந்தைக் கடந்திருந்தது.
புத்தகத் திருவிழாவின் மேன்மை குறித்த அலங்கார வளைவுகளில் அழகழகான வாசகங்கள் ஆங்காங்கே தென்பட்டன.
‘பிரசன்னா டூவீலர விட்டுட்டு வா… நான் நிக்கிறேன்’ என்றேன்
‘சரி சார்’ என வாசலில் என்னை இறக்கி விட்டுச் சென்றான் பிரசன்னா. கொஞ்ச நேரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு வந்தான்.
நானும் பிரசன்னாவும் புத்தகத் திருவிழா நடக்கும் இடத்திற்குச் சென்றோம்.
‘சார் என்ட்ரன்ஸ் டிக்கெட் எடுக்கணுமே’
‘ம்… ஆமா பிரசன்னா… எடு…’
பிரசன்னா இரண்டு டிக்கெட்டுகளை எடுத்தான். இருவரும்  நுழைந்தோம். ஆட்கள் புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். இருவரும் உள்ளே நடந்து கொண்டிருந்தோம்.
‘புத்தகத் திருவிழாவுக்கெல்லாம் டிக்கெட் போடக் கூடாது பிரசன்னா… அதுலயும் ஒரு ஆளுக்கு பத்து ரூபா. அப்பிடின்னா நூறு பேருக்கு ஆயிரம் ரூபாய், ஆயிரம் பேருக்கு பத்தாயிரம். பத்தாயிரம் பேருக்கு ஒரு லட்சம்.
இப்படியே நான் சொல்லச் சொல்ல பிரசன்னா வியப்பின் உச்சிக்கே போனான்.
‘ஆமா சார் நீங்க சொல்றது உண்மை தான் சார்.’
‘அதுமட்மில்ல பிரசன்னா இப்பவெல்லாம் புத்தகங்கள யாரும் படிக்கிறதே இல்ல… மனுசங்கள எப்பிடியாவது உள்ள வர வைக்கணும். இதுல என்னா பணம் வசூல் பண்ணிட்டு இருக்கானுக.’ ஒண்ணு தெரியுமா பிரசன்னா?
சர்ச், தர்க்காவுல யாராவது டிக்கெட் வசூல் பண்றாங்களா? இந்துக் கோயில்ல மட்டும் தான் சிறப்பு நுழைவுச் சீட்டு அது இதுன்னு காசப் புடுங்குறானுக. எந்தக் கடவுளையும் பாக்குறதுக்கு காசு வசூலிக்கக் கூடாது. அப்பிடித்தான் புத்தகத் திருவிழாவும் இருக்கணும். அப்பத்தான் ஒரு சமத்துவம் அது மேல ஒரு ஆர்வம் ஏற்படும்’ என நான் சொன்னபோது பிரசன்னா ஆச்சர்யப்பட்டான்.
‘என்ன சார் இது இவ்வளவு புத்தக ஸ்டால் இருக்கு’
‘ஆமா… எழுதுறவனெல்லாம் அச்சகம் வச்சிருந்தா இதுமட்டுமில்ல இதுக்கு மேலயும் ஸ்டால் இருக்கும். முன்னையெல்லாம் ஒரு புத்தகம் போடணுமின்னா கண்ணு முழி பிதுங்கிப் போகும். இப்பக் காசு குடுத்தா ‘சட்டையை எப்படி அயர்ன் பண்ணிப் போடணும்…’ எப்பிடிச் சோறு சாப்பிடணும், அப்பிடி இப்படின்னு  உப்புக் கல்லுக்குப் பிரயோசப்படாத விஷயத்துக்குக் கூடப் புத்தகப் போடுறானுக. ‘வெளக்க இன்னொரு வௌக்கு ஏத்தணும். எழுத்துங்கிறது படிக்கிறவன இன்னொரு எழுத்தாளன் ஆக்கணும். அது தான் உண்மையான எழுத்து. அத விட்டுட்டு என்னென்னமோ எழுதுறாங்க’ இதெல்லாம் யாரு கேக்குறா? நொந்து சொன்னேன்.
‘ஆமா சார்… நீங்க சொன்னது மாதிரி தான் இப்பவெல்லாம் புத்தகம் வருவது. ஒரு சில புத்தகங்கள் நல்லாயிருக்கு. ஆனா ஆனை வெல குதிரை வெல போட்டுருக்கான். புத்தகத்தப் பெரட்டிப் பாத்துட்டு வந்திர வேண்டியது தான்.
‘ஆமா பிரசன்னா எல்லாம் வியாபாரம். எழுத்து வியாபாரம். நல்லா எழுதுறவனெல்லாம் ரோட்டுல திரியுறானுக. அதப் பதிப்பிச்சி விக்கிறவன் தான் கார்ல போறாங்க. இங்க படைக்கிறவன விட பந்தி வைக்கிறவன் தான் பணக்காரன் ஆகிறான்’ என்று இருவரும் பேசிக்கொண்டே ஒவ்வொரு புத்தகக் கடையாய் ஏறி இறங்கினோம்.
பிரசன்னா இந்த வருசம் புத்தகங்களோட விலைப் பட்டியல் வாங்கிக்க அடுத்த வருசம் புத்தகம் வாங்கலாம்’ என்றேன். பிரசன்னா சிரித்தான்.  இருவரும் ஒருசில புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியே வர முற்பட்டோம்.
‘சார் ஏதோ பங்ஷன் நடக்குது சார்.
‘தெனமும் தான் நடக்கும் பிரசன்னா…. சரி… சரி நேரமாயிடுச்சு நாளைக்கு வருவமா? இப்பவே மணி எட்டாகிருச்சு வா வீட்டுக்குப் போவோம்’ என இருவரும் புத்தக அரங்கை விட்டு வெளியே வந்தோம்.
புத்தக அரங்கைச் சுற்றி திருவிழாக் கூட்டம் போல ஆட்கள் சென்று கொண்டிருந்தார்கள். சிலர் தின்று கொண்டிருந்தார்கள். இரண்டு பக்கமும் எண்ணற்ற கடைகள் இருந்தன.
சார் சுண்டல், கடலை, கடலை என விற்றுக் கொண்டிருந்த குரல்கள் என் நாவில் ருசியைத் தூண்டியது.
‘பத்து ரூபாய்க்கு கடல தாங்க’ என்றேன்.
பத்து ரூபாயை வாங்கி கடைக்காரர் சூடான கடலையை பேப்பரில் மடித்து என்னிடம் கொடுத்தார்.
இருவரும் கடலையைப் பகிர்ந்து சாப்பிட்டோம்.
‘பிரசன்னா நீ டூ வீலர எடுத்திட்டு வா நான் வாசல்ல நிக்குறேன்’ என அவனை அனுப்பி வைத்துவிட்டு மீதமிருந்த கடலையைச் சாப்பிட்டு விட்டு பேப்பரை கசக்கி ரோட்டில் எறிந்தேன்.
‘என் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு பெண் வேகமாய் வந்தாள். அவளுக்கு வயது இருபத்தைந்து இருக்கலாம். நான் வீசி எறிந்த பேப்பரை கீழே குனிந்து எடுத்தாள். நேரே என்னிடம் வந்தாள்.
‘சார்… இதக் குப்பைத் தொட்டியில போடுங்க’ என்று நான் வீசிய குப்பைப் பேப்பரை எடுத்து என் கையில் கொடுத்து   இப்படிச் சொன்னபோது எனக்குக் கோபம் தலைக்கேறியது.
‘ஹலோ என்ன சொல்றீங்க?’
என்னைப் பார்த்த அவள் மீண்டும் சொன்னாள்.
‘இது நீங்க போட்ட பேப்பர் தான’ அப்ப நீங்க தான் குப்பத் தொட்டியில போடணும்’ என மீண்டும் சொன்னாள்.
‘இங்க எங்க குப்பத் தொட்டி இருக்கு’கோபமாய்க் கேட்டேன்.
‘குப்பத் தொட்டி எங்க இருக்கோ அங்க கொண்டு போய் போடுங்க’ மீண்டும் சொன்னாள். அவள் சொன்னபோது என் கவுரவம் தலை தூக்கியது.
‘ஹலோ நான் யார் தெரியுமில்ல. நான் ஒரு பிலிம் டைரக்டர்’ என பெருமையாகச் சொன்னேன்.
அவள் அதைச் சற்றும் சட்டை செய்யாமல் ‘ஓ’ நீங்க பிலிம் டைரக்டரா? ஒங்க படமும் அப்படித் தான் இருக்கும். நானாவது சாதாரணப் பெண். நீங்க  மக்களோட பிரதிநிதி. எனக்கு இருக்கிற சமூக அக்கறை கூட ஒங்களுக்கு இல்லையே… என்னைய விட கூடுதலா ஒங்களுக்குத்தான் பொறுப்பு அதிகம் இருக்கணும்’ என மீண்டும் என்னைக் கோபப்படுத்தினாள். அவள்  பேசிய பேச்சு என்னை மேலும் அவமானப்பட வைத்தது.
சரி என என்கையில் இருந்த குப்பைப் பேப்பரை அவள் கையில் கொடுத்து நீங்களே இதப் போட்டுருங்க என்றேன்.
‘சரி நானே போட்டுர்றேன்’ என அந்தப் பேப்பரை பெருந்தன்மையோடு வாங்கினாள்.
நம்முடைய குப்பையை வேறொரு பெண் வாங்குகிறாளே அவமானத்தில் தலை கவிழ்ந்தேன். அவள் என்னைப் பார்த்தாள். எனக்கு என்னவோ போலானது. மீண்டும் அவள் கையில் இருந்த குப்பைப் பேப்பரைக் கேட்டேன்.  ஸாரி நானே போடுறேன் என்றேன். எதுவும் சொல்லாமல் என்னிடம் கொடுத்தாள்.
ஏங்க ஒங்கள மாதிரி ஒரு பொண்ண என் லைப்லயே சந்திச்சதில்லீங்க’
அவள் சிரித்தாள் ‘தேங்க்யூ’ என்றாள் அவள் செல்ல வேண்டிய கார் வந்து நின்றது. என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே சென்றாள். சினிமாவில் தான் இப்படிப்பட்ட புரட்சிகரமான பெண்களைப் பாத்திருக்கிறோம். ஆனால் நிஜத்தில் இப்படி ஒரு பெண்ணை நான் சந்தித்ததேயில்லை. என்னுள் ஒரு ஒழுக்கமான தூய்மையை நட்டு விட்டுச் சென்று விட்டாள். நம் நாட்டைச் சுத்தமாக  ஒவ்வொரு மனிதனும் வைத்திருக்க வேண்டுமென்ற கருத்தை எனக்குள் விதைத்து விட்டாள். அவளிடமிருந்து வாங்கிய என்குப்பையை என் கையிலேயே வைத்துக் கொண்டேன். அப்போது பிரசன்னா டூவீலரை எடுத்துக் கொண்டு வந்தான். நடந்த எல்லா விவரங்களையும் சொன்னேன். ஆச்சர்யப்பட்டான்.
‘சார் அந்தப் பொண்ணு ஒரு புரட்சிப் பொண்ணு சார். இவங்கள மாதிரி ஒவ்வொருத்தவங்களும் இருந்தா நம்ம நாடு சீக்கிரம் முன்னேறும் சார் என்றான் பிரசன்னா.
‘ஆமா பிரசன்னா இங்க ஒரு கொலையே நடந்தாலும் என்னான்னு கேக்காத இந்தச் சென்னையில இப்பிடியொரு பெண்ணா? வியப்பா இருக்கு பிரசன்னா என்றேன்.
பிரசன்னா என்னை வீட்டில் இறக்கி விட்டுச் சென்றான். அந்தப் பேப்பரை நான் கீழே போடவேயில்லை. என் நாட்குறிப்பில் பின்னிட்டு அவள் பேசிய அத்தனை பேச்சுக்களையும் எழுதி வைத்துவிட்டேன். இது குறித்து நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன். எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். அன்று இரவு முழுவதும் நான் தூங்கவேயில்லை. இனிமேல் குப்பையைத் தெருவில் வீசக் கூடாது என முடிவு செய்தேன்.
புத்தகத் திருவிழாவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் சொல்லாத உண்மையை வீதியில் நின்றிருந்த ஒருத்தி சொல்லிவிட்டுச் சென்று விட்டாள். எனக்குள் ஆயிரம் சிந்தனைகள் சிறகு விரிக்கின்றன.
அந்தப் பெண் போல் ஒரு புரட்சிக்கரமான ஒருத்தி தான் என் அடுத்த படத்தின் கதாநாயகி.