காதலுக்கு வயது இல்லை (சிறுகதை) ராஜாசெல்லமுத்து

000lovers-day

‘‘என்னது ரங்கசாமி செத்துப் போயிட்டாரா? நல்ல மனுசங்க. இவ்வளவு சீக்கிரமா செத்துப் போவார்ன்னு நெனச்சுக் கூடப் பாக்கலீங்க’’ என்று வருத்தப்பட்டார் துக்கம் விசாரிக்க வந்திருந்த ஒருவர்.
‘‘ஏங்க ரங்கசாமிக்கு சின்ன வயசாயென்னா தொண்ணூற்றி அஞ்சு வயசாகுதுங்க. ஆண்டு அனுபவிச்சுட்டுத் தான போய்ச் சேர்ந்திருக்காரு. ஒரு சராசரி மனுசன் என்னென்ன செய்யணுமோ அம்புட்டும் செஞ்சுட்டுத் தான் போயிருக்காரு. ஒரு மனுசனாப் பெறந்து முழுமை அடைஞ்சிட்டாரு. இதுக்கு மேல என்ன வேணும். போதுமுங்க இதுக்கு மேல இருந்தாலும் ரொம்பக் கஷ்டம்’’ என்றார் வேறொருவர்.
‘‘சரியாச் சொன்னீங்க. இந்த வயசு வரைக்கும் ஒரு மனுசன் காலாற நடமாடிட்டு இருந்ததே பெரிய விஷயமுங்க. அப்புறம் படுத்துக்கிட்டு அடுத்தவங்களக் கஷ்டப்படுத்துறது எல்லாருக்கும் வெறுப்பக் குடுக்கும். அதான் நல்ல சாவாச் செத்திருக்காரு.’’
‘‘நீங்க சொல்றது சரிதாங்க. இப்பவெல்லாம் நெறயாப் பேரு அறுபது வயசிலேயே சகல வியாதியிலயும் படுத்திட்டு வீட்டுல இருக்கிற ஆளுகள தொந்தரவு பண்றாங்க.’’ இவரு இப்படி போனது நல்லது தான்.’’
‘‘என்னங்க அப்பிடிச் சொல்லிப்புட்டீங்க. பெத்த தாய் தகப்பனப் பாக்குறது தொந்தரவா. அவங்க பெத்த கொழந்தைகளை எல்லாப் பணிவிடையும் செஞ்சுதான வளத்து ஆளாக்குறாங்க.
அந்தத் தாய் தகப்பன் படுத்திட்டா மட்டும் ச்சீ… அசிங்கம். அது இதுன்னு மூக்கப் பிடிச்சிட்டுப் போறாங்க. இது எந்த விதத்தில நியாயம்?’’
இப்படி வந்தவர்கள் ரங்கசாமியின் இறப்பு பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ரங்கசாமி மதிலோடு சாத்தி வைக்கப்பட்டிருந்தார். சொந்த பந்தங்கள் கூடி அழுது கொண்டிருந்தார்கள்.
‘‘அவங்க குடும்பம் மட்டும் வந்தா விடக்கூடாது. அவங்கள அங்கயே தடுத்து நிறுத்துங்க… இல்ல நமக்கு ரொம்ப அசிங்கமாப் போயிடும்’’ என்று ஆதங்கப்பட்டான் ரங்கசாமியின் மகன் கணேசன்.
‘‘ஆமா கணேசா நீ சொல்றது சரிதான். அவங்க இங்க வந்தா நமக்குப் பெரிய அசிங்கமாப் போயிரும். பெறகு இவ்வளவு நாள் சேத்து வச்சிருந்த மானமெல்லாம் காத்துல போயிரும்.அவங்கள விடக்கூடாது’’ வருத்தப்பட்டார் ரங்கசாமியின் மகள் சரிதா.
‘‘அவங்க இங்க வருவாங்களா? எந்த மூஞ்சிய வச்சிட்டு இங்க வருவாங்க. அவங்களுக்கு துப்பு இருக்கா என்ன? அவங்க வரட்டும் நாலு வார்த்த நாக்கப் புடிங்கிட்டுச் சாகுறது மாதிரிக் கேக்குறேன்’’ என்றாள் ரங்கசாமியின் மருமகள் சீதா.
‘‘வரட்டுமுங்க. அவங்க வந்து பாத்தா மட்டும், செத்துப் போன ரங்கசாமி திரும்பி வரப் போறாரா என்ன? விடுங்க வந்து பாத்திட்டுத்தான் போகட்டுமே’’ என்றார் ரங்கசாமியின் உறவினர் ராமசாமி.
‘‘அதெல்லாம் முடியாதுங்க. இது லேசுப்பட்ட காரியமில்லங்க. எங்க எல்லாத்துக்கும் அசிங்கம் வந்து சேருமுங்க’’ என விடாப்பிடியாக மறுத்தார் கணேசன்.
‘‘ஏங்க செத்தது செத்துப் போயிட்டாரு. கடைசி காலத்துல அவரோட ஆத்மாவாவது ஆறுதல் அடையட்டுமே. சரி கொஞ்சம் விட்டுப் புடிங்க. அவங்க வந்து பாத்துட்டுப் போகட்டுமே’’ இப்படி ஆறுதலாய்ச் சொன்ன யார் பேச்சையும் ரங்கசாமியின் குடும்பத்தார்கள் கேட்கவே இல்லை.
‘‘ ரங்கசாமி சாத்தி வைக்கப்பட்டிருந்தார்.
‘‘ஏங்க ரங்கசாமி யாரையோ நெனச்சிட்டுச் செத்துப் போயிருக்காரு போலங்க. தொண்டைக் குழியில பெரிய குழி இருக்கு பாருங்க’’ என்றார் இறந்த வீட்டில் இருந்த தனசேகரன்.
‘‘ஆமாங்க… நீங்க சொல்றது சரிதான் நெஞ்சுக்குழிக்குள்ள ஏதோ நெனப்பு கெடந்திருக்கு போல. இத ரங்கசாமி வீட்டுக்காரங்க புரிஞ்சுக்கிற மாட்டேங்கிறாங்களே.’’
‘‘போனவர் போய்ட்டாரு. ஆனாலும் இவனுக பிடிவாதத்தை விட்டுக் குடுக்க மாட்டேங்கிறானுகளே’’ என அங்கே இருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.
‘‘நேரம் ஆகிக் கொண்டிருந்தது.
‘‘சாயங்காலம் அஞ்சு மணிக்கெல்லாம் அடக்கம் முடிஞ்சிரணுமுங்க. வானம் பொருமலா இருக்கு. பெறகு மழை கிழை வந்திருச்சின்னா சிக்கலாகும்.’’ என்று பேசிக் கொணட்டார்கள்.
‘‘ஆமாங்க இப்ப மணி எத்தனை யாகுது?’’
‘‘மூணு மணி!’’
‘‘ம்… இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு’’ அதுக்குள்ள என்னென்ன நடக்கப் போகுதுன்னு யாருக்குத் தெரியும்?’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பந்தலுக்குள் ஒரு ஆட்டோ வந்து நின்றது.
எல்லோரும் பரபரப்பாக ஆட்டோ நோக்கி ஓடினார்கள். அங்கே கமலாப் பாட்டியும் பேத்தி ஐஸ்வர்யாவும் ஆட்டோவில் இருந்தார்கள். கணேசன், சரிதா ஆட்டோ முன்னால் போய் நின்றார்கள்.
‘‘இங்க வரக்கூடாதுன்னு சொன்னமே. ஏன் வந்தீங்க இங்க இருந்து போகலன்னா போலீஸ்ல சொல்ல வேண்டியிருக்கும்.’’ கடுமையான கோபத்தில் பேசினான் கணேசன். உடன் நிறையப் பேர் சேர்ந்து கொண்டு இதையே பேசினார்கள்.
‘‘கமலாப் பாட்டி கண்களில் கண்ணீர் வழிந்தது.
‘‘பாட்டி விடுங்க. அழாதீங்க. அதான் சொன்னேனே இவங்கெல்லாம் மனுசங்களே இல்ல. பணத்துமேல வச்சிருக்கிற பாசத்த மனுசன் மேல வைக்கமாட்டாங்க. இங்கெல்லாம் அப்பிடித்தான் பாட்டி எதையும் வாயில தான் பேசுவாங்களேயொழிய நடைமுறைப்படுத்திப் பாக்கமாட்டீங்க. வேண்டாம் அழாத பாட்டி’’ என கமலாவைத் தேற்றினாள் பேத்தி ஐஸ்வர்யா.
‘‘இல்லம்மா அவரு மொகத்த மட்டும் ஒரு எட்டுப் பாத்திட்டுப் போகலாம்னு நெனக்கிறேன். விடமாட்டேன்னு சொல்றாங்களே’’ அழுது கொண்டே சொன்னாள் கமலாப் பாட்டி.
கமலாப் பாட்டியை ஆட்டோவை விட்டு கீழே இறங்கவிடாமல் தடுத்தார்கள்.
‘‘என்ன நெஞ்சழுத்தம் இருந்தா இந்தக் கெழவி இங்க வந்திருப்பா… பெரிய கைகாரியா இருப்பா போல எனப் பேசினார்கள் அங்கிருந்த ஆட்கள்.
‘‘அப்பிடியெல்லாம் சொல்லாதீங்க. அந்தப் பாட்டி வச்சிருக்கிறது உண்மையான பாசம்… இங்க இருக்கிற எல்லாரையும் விட அந்தப் பாட்டிக்குத் தான் உண்மையிலயே கஷ்டம் இருக்கு. மத்தவங்கெல்லாம் சும்மா பேச்சுக்குத் தான் அழுகுறாங்களேயொழிய ஈரத்தோட யாரும் அழுகல. ஆனா உண்மையா அழுகுறது அந்தப் பாட்டி மட்டும் தான்’’ என்றார் தனசேகரன்.
‘‘ஆமாங்க சரியாச் சொன்னீங்க நீங்க சொல்றது தான் நெசம்.’’ என தனசேகரின் வார்த்தையை ஆமோதித்தார் சின்னச்சாமி. கமலாப் பாட்டி எவ்வளவோ அழுது பார்த்தும் அந்தப் பாட்டியை ஆட்டோவை விட்டுக் கீழே இறங்க விடவே இல்லை.
அழுது கொண்டே இருந்தாள் பாட்டி.
‘‘யோவ் ஆட்டோவத் திருப்பு. இல்ல ஒன் கைய வெட்டிப்புடுவேன்’’ என ஆட்டோக்காரனை சிலர் மிரட்டினார்கள்.
ஆட்டோக்காரன் ஆட்டோவைச் சற்று திருப்பினான் ஐஸ்வர்யா பாட்டியைச் சமாதானப்படுத்த முயன்றாள். அழுது கொண்டிருந்த பாட்டி சற்றே அழுகையை நிறுத்தி இருந்தாள். ஐஸ்வர்யா பாட்டியைத் தொட்டாள்.
‘‘பாட்டி ஏன் அழுகைய நிப்பாட்டுனீங்க?’’ என தோளைக் குலுக்கினாள். பாட்டியின் உடம்பு சில்லிட்டது.
‘‘பாட்டி… பாட்டி’’ என உசுப்பிப் பார்த்தாள். பாட்டி அசையவே இல்லை.
‘‘பாட்டி பாட்டி… என ஓங்கிக் கத்தினாள். அப்போது பாட்டி இறந்து போயிருந்தாள். பந்தலில் இருந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.
‘‘ச்சே… பாவம்டா அந்தக் கெழவி. அந்தக் கெழவனப் பார்த்திருந்தாலாவது ஏதோ ஆறுதல் அடைஞ்சிருக்கும். இவனுக பாக்க விடாமலே செஞ்சுட்டானுக. அதான் செத்துப் போயிருச்சு போல’’ புலம்பினார்கள்.
‘‘ஏங்க அந்தப் பாட்டிய ஏன் செத்த வீட்டுக்குள்ள விடமாட்டேன்னு சொல்லிட்டீங்க. என்ன பிரச்சினை… அவங்க இவரோட பொண்டாட்டிதான’’ எனக் கேட்டார் அந்த வீட்டிலிருந்த ஒருவர்.
‘‘ அத ஏன் நீ கேட்குற?. அது பெரிய கூத்து’’ என்று சொன்ன போது கமலாப் பாட்டியும் ரங்கசாமியும் ஒரே இடத்தில் செத்துக் கிடந்தார்கள்.
ரங்கசாமியின் நெஞ்சுக்குழியிலிருந்து நினைவுகள் விரிந்தன.
‘‘டேய்… கணேசா நான் வாக்கிங் போற எடத்துல கமலான்னு ஒருத்தவங்களச் சந்திச்சேன். ரொம்ப நல்லவங்கடா ‘‘அவங்கள நான் லவ் பண்றேன்’’ என்றார் ரங்கசாமி…
‘‘அப்பா ஒங்களுக்குப் புத்திக்கித்தி கெட்டுப் போச்சா? ஒங்களுக்கு என்ன வயசாகுது. இப்பிடிச் பேசுறீங்க’’ கோபித்தான் கணேசன்.
‘‘இதுல என்னடா தப்பு. ஒங்க அம்மா அதான் என்னோட பொண்டாட்டி செத்துப் போயி இருபத்தஞ்சு வருசமா நான் தனியாத்தான் இருக்கேன். எனக்குன்னு ஒரு தொண வேணாமா. கமலா நல்லா எங்கூடப் பேசுறா. அவகூட நான் மனம் விட்டுப் பேசுறேன். என்னைய நல்லாப் பாத்துக்கிரு வாடா’’
‘‘அப்பா’’ அதெல்லாம் முடியாது. பேரன் பேத்திகளை வச்சிட்டுப் பேசுற பேச்சா இது.’’
‘‘முடியாதுடா. நீங்கெல்லாம் குடும்பத்தோட இருக்க நான் மட்டும் தனியா இருக்கணுமா? முடியாது. கமலாவும் கணவன இழந்து தனியாத்தான் இருக்கா. அவளுக்கும் ஒரு தொண தேவைப்படுது.
ரெண்டு பேரும் பேசிட்டோம்.
அவங்க வீட்டுல எந்தப் பிரச்சினையும் இல்ல. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணப் போறோம். முடிவாய்ச் சொன்னார் ரங்கசாமி.
‘‘அப்பா முடியாது.’’ இந்தக் காதலுக்கு நாங்க ஒத்துக்கிற மாட்டோம். என்ன சொன்னாலும் ஒங்கள சேர விட மாட்டோம் ’’ என ஒரே முடிவில் இருந்தனர் ரங்கசாமி வீட்டார்கள்.
‘‘ இல்லடா வாழ்ந்தா என்னோட கமலா கூட தான் வாழ்வேன். இல்ல நான் செத்துப் போயிருவேன்,’’ அடம் பிடித்தார் ரங்கசாமி.
‘‘அப்பா சொல்றதக் கேளுங்க.. ஒங்களுக்கு என்ன வயசாகுது. கடைசி காலத்துல கெட்ட பேரு வந்து சேரும். பேசாம எங்களோட சேர்ந்து வாழ்ந்துட்டு போய்ச் சேருற வழியப்பாருங்க’’ என்றார் ரங்கசாமியின் மகன் சிவா.
‘‘என்னடா கடைசி காலம். இன்னும் என் ஆயுள் இருக்கு. இன்னும் எவ்வளவோ சாதனைகளை நான் செய்வேன்டா. இப்படிப் பேசிய ரங்கசாமியை யாரும் வீட்டை விட்டு வெளியே விடவே இல்லை.
‘டேய் கடைசி காலத்தில கிழவன் காதல் அது, இதுன்னு போயிட்டா, அவர் பேர்ல இருக்கிற சொத்து கல்யாணம் பண்றவங்களுக்கும் போய்ச் சேரும். இத எப்படியாவது தடுத்து நிறுத்தணும் ’ என்று பேசிய நாளிலிருந்து வீட்டுக்குள்ளேயே கிடந்தார் ரங்கசாமி.

ரங்கசாமியின் நெஞ்சுக்குழியில் கமலாவின் நினைவுகள் கிடந்தன. இப்படியாய்த் தினமும் கமலாவை நினைத்துக் கொண்டே அவள் நினைவிலேயே இறந்து போனார்.
‘‘…ச்சே செத்தது செத்துப் போயிட்டா கெழவி. அதுவும் இங்க வந்தா சாகணும். நமக்குப் பெரிய கேவலமாப் போச்சு’’ பொறுமினார்கள்.
கமலாப் பாட்டியை அழுது கொண்டே ஆட்டோவில் கொண்டு போனாள் ஐஸ்வர்யா. ரங்கசாமி வீட்டார்கள் கமலாவை கடைசி வரைக்கும் விடவே இல்லை.
ரங்கசாமியைப் புதைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.
இந்த மனுசங்க எல்லாக் காதலையும் சேத்து வைக்க மாட்டானுக. எளசுகளையும் சேரவிட மாட்டேங்கிறாங்க. வயசானவங்களையும் சேரவிடமாட்டேங்கிறாங்க. இவனுக மனுசனுகளே கெடையாது. உசுரோட இருக்கிறவங்கள வேணும்னா சேர விடாமத் தடுக்கலாம். ஆனா ஒத்துப்போன மனசுகளைப் பிரிக்க இங்க எவனுக்குச் சக்தி இருக்கு? ரங்கசாமியின் எண்ணமும் கமலாவின் எண்ணமும் கருத்தொருமித்து விட்ட பிறகு எப்படிப் பிரிக்க முடியும். அப்போது இரண்டு பிணங்களையும் புதைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.