வெளிச்சத்துக்கு வராத ரகசியங்கள்

‘கிஷோர் மொகத்த ஒரு பக்கமாத் திருப்புங்க. எமோசனல் சீன் பண்ணும்போது உள்ள இருந்து உணர்ச்சி பிச்சுக்கிட்டு வரணும்ங்க. சும்மா பாறை மாதிரி நின்னா எப்பிடி? இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணுங்க’ கோபித்தாள் நடிப்புப் பயிற்சிப் பள்ளியின் ஆசிரியை ஸ்ரீதேவி.
‘மேடம்… இது போதுமான்னு பாருங்க’ என கொஞ்சம் முகத்தைச் சோகமாக வைத்துக் காட்டினான் கிஷோர்.
‘ஐயோ கிஷோர் டயலாக்கச் சொல்லிட்டே  ரியாக்சன் பண்ணுங்க. அப்ப ஒங்க மூஞ்சி எப்பிடி இருக்குன்னு பாக்குறேன்’ கடுமையாகச் சொன்னாள் ஸ்ரீதேவி.
‘மீனா… நான்  உன்னை என் உசுராவே நெனச்சேன். ஆனா நீ தான் என்னை  ஏறெடுத்துக் கூடப் பாக்கல. எப்பிடியோ நீ ஒரு ஆம்பளையத் தான கல்யாணம் பண்ணப்போற அது ஏன் நானா இருக்கக்கூடாது.
என்னமோ மீனா… எவ்வளவோ பெண்களக் கடந்து போயிருக்கேன். ஆனா நீ மட்டும் தான் என்னைய ரொம்ப பாதிச்சுருக்க. நீ இல்லன்னா என்னால வாழ முடியாது மீனா’ எனப் பேசிக் காட்டினான் கிஷோர்.
கிஷோர் நீ பேசுற டயலாக்குக்கும் பேஸ் ரியாக்சனுக்கும் வேரியேசன் இருக்கு. டயலாக்க ஒதட்டுல சொல்லிட்டு பீல் பண்ணாமலே இருக்கீங்க. இப்பப் பாருங்க. நான்  நடிச்சுக் காட்டுறேன். அதப் பாத்திட்டு அப்பெறமா நீங்க செய்யுங்க’  என ஸ்ரீதேவி அதே டயலாக்கை சொல்லிக் கொண்டே நடித்தும் காட்டினாள்.
‘சூப்பர், பென்டாஸ்டிக், என்ன ஒரு ரியாலிட்டி. அப்பிடியே அந்தக் கேரக்டரா மாறிட்டீங்க மேடம் என்று ஸ்ரீதேவியைப் புகழ்ந்தார்கள் மாணவர்கள்.
‘ஹலோ ஓவரா ஆக்ட் பண்ணாதீங்க, நடிப்புங்கிறது ஏதோ ஒங்ககிட்ட நான் சொல்லிக் காட்டல. அது உசுரோட ஒட்டியிருக்கிற ஒண்ணு. “Acting is nothing but an Act”ன்னு சொல்வாங்க. நடிப்ப நடிப்பாப் பாக்கக் கூடாது. அந்த கேரக்டர மனசில உள்வாங்கணும். அப்பிடி நெனச்சுட்டு நீ எந்த டயலாக்கோ எந்த சீனோ பண்ணுனா அது சூப்பரா வரும்’ எங்க இப்பப் பண்ணு பாப்போம்’ என கிஷோரை மீண்டும் நடிக்கச் சொன்னாள்.
கிஷோர் டயலாக்கை மீண்டும் சொன்னான். ஸ்ரீதேவி கோபத்தின் உச்சிக்கே போனாள்.
’ஹலோ… என்ன பண்றீங்க? டயலாக்கும் பேஸ் ரியாக்சனும் வேறு வேறாயிருக்கு.  ரெண்டும் ஒட்டல.
ஆமா… நீங்க எங்க இருந்து வாரீங்க?
‘மயிலாப்பூர்…’
அப்பா என்ன பண்றார்?
‘பிஸினஸ் மேன் மேடம்’
‘ஓ…. அப்ப நல்ல வசதியா இருக்கீங்க?
‘ம்…. சின்னதாய்ச் சிரித்தான் கிஷோர்.
‘எதுக்காக இங்க வந்து நடிப்புப் பயிற்சி எடுக்குறீங்க?
‘இல்ல மேடம்… இந்த ஒலகத்தில சினிமாவுல இருக்கிறவங்களுக்குத் தான் கிரேஸ் அதிகம். அவங்களைத்தான் மதிக்கிறாங்க. அதுனால தான் நான் இங்க ஆக்டிங் கத்துக்கிறேன்’ படபடவெனச் சொன்னான் கிஷோர்.
‘சுட்டுப் போட்டாலும் ஒனக்கு நடிப்பு வராது. பேருக்கும் புகழுக்கும் நீ நடிக்க வந்திருக்க. அது இல்ல கிஷோர் ஆக்டிங்கிறது அது ஒரு  தவம். அது கடவுள் குடுக்கிற வரம். காசு சம்பாரிக்கவும்  பேரு எடுக்கவும் நீங்க இங்க வந்தீங்கன்னா இது சுத்த வேஸ்ட். நீங்க என்ன பண்ணுவீங்க? சொந்தமா பணமிருக்கு. நீங்களே படம் எடுக்கலாம். நீங்களே அதைப் பெருமையா நெனச்சிட்டு வாழ்ந்துட்டும் போவீங்க. கோபமாய்  ஸ்ரீதேவி பேசுவதையே கவனித்தான் கிஷோர்.
‘இதெல்லாம் ஆக்டிங்க்குக்கான முறை இல்ல கிஷோர். நான் என்ன சொல்றேனா அதே அப்பிடியே செய்யுங்க. நான் சொன்ன கேரக்டரா மாறுங்க. உண்மையிலேயே லவ்வுல பெயிலியர் ஆன மாதிரி நெனச்சுக்கங்க. அப்பிடி நீங்க நெனச்சுட்டுப் பண்ணுனா தான் நீங்க நல்ல நடிகனா வர முடியும். இல்ல நீங்க இங்க வர்ரது; எனக்கு குடுக்கிற பீஸ்; எல்லாமே வேஸ்ட்’ குமுறினாள் ஸ்ரீதேவி.
மீண்டும் ஒரு முறை செய்து காட்டினான் கிஷோர். அதற்கும் ஸ்ரீதேவி திருப்தியடையவில்லை.
‘கிஷோர் நீங்க ஒக்காருங்க’ கிஷோர் உட்கார்ந்தான். ‘பழனி நீங்க வாங்க’ பழனி நடிப்புப் பயிற்சி மாணவர்களின் மத்தியில் நின்றான் கிஷோர் .பேசிய டயலாக்கை அப்பிடியே பேசினான்.
‘சூப்பர் அப்பிடியே தத்ரூபமா இருக்கு. பழனி நீங்க நல்ல நடிகனா வருவீங்க’ வாழ்த்தினாள் ஸ்ரீதேவி.
‘தேங்க்யூ மேடம்’ என பழனி உட்கார்ந்தான்.
கிஷோருக்கு என்னமோ போலாகிவிட்டது.
‘என்ன கிஷோர் பழனியப் பாத்தீங்கள்ல. நடிப்புன்னா அப்பிடி இருக்கணும். சும்மா நடிகனாகப் போறேன்னு சொல்லிட்டு எங்கள வந்து கழுத்தறுக்கக் கூடாது சரியா? இப்படி ஸ்ரீதேவி சொன்னதும் நடிப்புப் பயிற்சியில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தார்கள். கிஷோர் வெக்கப்பட்டான். அன்றிலிருந்து நடிப்புப் பயிற்சி வருவதை நிறுத்திக் கொண்டான்.
சிறிது காலத்துக்கெல்லாம் ஸ்ரீதேவிக்கு கிஷோரைப் பற்றிய நினைவுகள் கொஞ்சங்கொஞ்சமாய் மறையத் தொடங்கின.
ஒவ்வொரு வருடமும் நிறைய மாணவர்கள் நடிப்புப் பயிற்சி பெற்றுச் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் யாரும் பெரிதாக ஜெயிக்க முடியவில்லை. பழனி உட்பட்ட நன்றாக நடித்த மாணவர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.
அன்று வழக்கம் போல வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் ஆனது. ஒரு புதிய இயக்குனர் இயக்கிய படம் திரைக்கு வந்தது. பழனி உட்பட எல்லோரும் படத்தைப் பார்க்கப் போனார்கள். படத்தைப் பார்த்தவர்களுக்கு இந்தப் படத்தின் இயக்குனர் பெயரை எங்கோ கேட்டது ஞாபகத்திற்கு வந்தது. ‘கிஷோர்’ இவன் நம்ம கூடப்படிச்சவனாச்சே’ என்றான் பழனி.
‘ஏங்க இப்பவெல்லாம் ஒரே பேர்ல நெறயாப் பேரு இருக்காங்க. ‘கிஷோர்’ அவருதான்னு அப்படி உறுதியாச் சொல்ல முடியுமா? என்றனர் நண்பர்கள். படத்தின் முடிவில் கிஷோர் வந்தான்’ டேய் அவனே தாண்டா. படத்த சூப்பரா எடுத்திருக்கான்ல.
‘கிஷோர்….’ படம் சூப்பர். நடிக்க வந்திட்டு எப்பிடி டைரக்டர் ஆகிட்டான்னு பாத்தியா? எப்பிடியோ தொழிலக் கத்திட்டான்டா. நாமளும் தான் இன்னும் அப்பிடியே நடிப்பு நடிப்புன்னு இருக்கோம்’ என பழனி உட்பட்ட பலர் புலம்பினார்கள். படத்தின் வெற்றியை ரசகிர்களுடன் கொண்டாடினான் கிஷோர். பழனி மற்றும் நண்பர்களைக் கண்டு கொள்ளவில்லை.
திரையரங்கின் வாசலில் டிவியில் பேட்டியும் கண்டார்கள்.
‘இந்தப் படம் தமிழ் சினிமாவுல ஒரு மைல் கல்லா இருக்குமுன்னு நெனைக்கிறேன்’ இந்த வெற்றியக் குடுத்தவங்கள நான் மறக்கவே மாட்டேன்’ என்றான் கிஷோர்.
‘சார் ஒங்களோட அடுத்த படம் பத்திச் சொல்லுங்களேன்? என்றார் ஒரு நிருபர்.
‘சொல்றேன்’ என நகர்ந்தான் கிஷோர்.
அன்று மாலை கிஷோரின் சினிமா அலுவலகத்தில் உதவி இயக்குனர்கள் உட்பட நிறையப் பேர் கூடினார்கள்.
‘சண்முகம் இங்க வாங்க’ என்றான் கிஷோர்: ‘‘நானே அடுத்த படத்த டைரக்ட் பண்ணி நடிக்கலாமா?’’ என்றான்.
‘கிஷோர் சார்.. ஒங்ககிட்ட பணமிருக்குன்னு நான் டைரக்ட் பண்ணுன படத்தில டைரக்டருன்னு ஒங்க பேரப் போட்டுடீங்க. ஏதோ என்னோட வறுமை அதுக்கு நான் ஒத்துக்கிட்டேன்.  திரைக்குப் பின்னாடி இருக்கிற எல்லாமே ரகசியம். வெளிச்சத்துக்கு வரும்போது எல்லாம் தெரிஞ்சுரும்.இதெல்லாம் வோண்டாம் சார்.
ஏன் காசு இருக்கிறவரைக்கும் என்னை மாதிரி ஆளுகள நீங்க பயன்படுத்துறீங்க. நாளைக்கே நெலம மாறலாம்’ என்றார் சண்முகம்.
கிஷோர் முதல் முறையாகக் கூனிக் குறுக ஆரம்பித்தான்.