டிரினிட்டி ஆர்ட்ஸ் கலை விழா 2 ஆம் நாள் நிகழ்ச்சி பார்வையாளர்களை மகுடிமுன் பாம்பாக்கிய “கொன்னக்கோல்” வி.வி.எஸ்.மணியன்

kunnakol vvs manian 4.30  PH 1 nithyasree 1

சென்னை, டிச.28 –
‘மக்கள் குரல்’, ‘டிரினிட்டி மிரர்’ இணைந்து நடத்தும் “டிரினிட்டி ஆர்ட்ஸ் பெஸ்ட்டிவெல் ஆப் இந்தியா” மூன்றாம் ஆண்டு கலைவிழா நேற்று முன்தினம் அடையார் குமாரி ராணி மீனா முத்தையா கல்லூரி அரங்கில் கோலகலமாக துவங்கியது.
இவ்விழாவின் 2வது நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாலை 4.30 மணியளவில் வி.வி.எஸ் மணியன், அவரது மாணவர்கள் குழுவினருடன் சேர்ந்து நடத்திய “கொன்னக்கோல்” என்கிற வாய்த்தாளம் கச்சேரி நடந்தது.
“கொன்னக்கோல்” எனும் கலை மீது இக்கால மக்களிடம் நாட்டம் குறைந்திருந்திருந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் ரா…ரா.. சரசுக்கு ரா…ரா… பாடலில் ‘தாம்தரிகட தீம் தரிகட  தோம் தரிகட…’ என்ற ‘கொன்னக்கோல்’ வரிகள் தான் அப்பாடலுக்கு உத்வேகம் கொடுத்தது எனலாம். அந்த வாய்த்தாள வரிகள் ‘கொன்னக்கோல்’ வி.வி.எஸ்.மணியனின் குரலில் ஒலித்தது. இவர் திருச்சி தாயுமானவரிடம் முறையாக இக்கலையை பயின்றவர். மாணவர்களுக்கு கொன்னக்கோல் மூலம் ஆத்திச்சூடி, திருக்குறள், ராமயாணம், மகாபாரத பாடல்களை கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக பணியாற்றுகிறார். மேலும் சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொன்னக்கோலை கற்றுத் தந்துள்ளார்.
இக்கலை குழந்தைகளுக்கு வல்லினம், மெல்லினம் உள்ளிட்ட தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்புகள், நா சுழற்சி உள்ளிட்ட திறன்களை வளர்த்து கொள்ள பெரிதும் உதவுகிறது.
இவ்விழாவில்  பாடல்கள், இலக்கிய பாடல்கள், 60 தமிழ்வருடங்களின் பெயர்களின் பாடல்கள் மற்றும் ஆங்கில மொழி பாடல்களையும் வாய்த்தாளத்தில் தனது 15 மாணவர்கள் குழுவுடன் பாடி பார்வையாளர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். மாணவர்கள் 6லிருந்து 10 வயதிற்குட்பட்டவர்கள் சென்னை கே.கே. நகரிலுள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி படிப்பவர்கள். இதே பள்ளியில் வி.வி.எஸ்.மணியனும் ஆசிரியாராக பணியாற்றி வருகிறார்.
முத்தாய்ப்பாய் 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் பாடிய ‘முத்தைத்திரு பத்தித் திரு நகை….’என்ற திருப்புகழ் பாடலின் மெட்டில் கடவுள்களின் வாழ்தும் பாடலைப்பாடி பார்வையளர்களை பரவசப்படுத்தினார்.
சுதந்திர போரட்ட வீரர்களுக்கு நன்றி கூறும் “வந்தேமாதரம்”  பாடலை குரு  வி.வி.எஸ்.மணியினுடன் குழந்தைகளும் உணர்ச்சி பொங்க பாடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது. ‘தமிழ் என்றாலே அழகு’ அதில் மழலை மொழியில்  தமிழ் சொல்ல கேட்பது பார்வையாளரின் மனங்களை கொள்ளை கொள்ளும் வகையில் இருந்தது.
சென்னை பைன் ஆர்ட்ஸ்
முரளிதரன்
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட “சென்னை பைன் ஆர்ட்ஸின்” நிறுவனர் முரளிதரன்  கூறுகையில், சென்னையில் பெரும்பாலான குழந்தைகள் ஆங்கில வழிக்கல்வியிலே பயின்று வருவதால், தமிழ் இலக்கிய பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தி கற்று கொடுத்தால் குழந்தைகள் தமிழ் உச்சரிப்புகளில் வளர்த்துகொள்ள உதவும் என்று கூறினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜிபி குழுமத்தலைவர்  விஜி சந்தோசம்  நிகழ்ச்சியின் முடிவில் கொன்னக்கோல்  வி.வி.எஸ்.மணியனுக்கு சால்வை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கியும்  கவுரவித்தார். மேலும் அவரது மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

Related Posts