‘மக்கள் குரல்–டிரினிட்டி மிரர்’ இணைந்து சென்னையில் 3–ம் ஆண்டு ‘டிரினிட்டி கலை விழா’: நாட்டிய மேதை வைஜெயந்தி மாலா துவக்கினார்

2705

2706

சென்னை, டிச. 27–
‘மக்கள் குரல்–டிரினிட்டி மிரர்’ இணைந்து வழங்கும் ‘டிரினிட்டி ஆர்ட்ஸ் பெஸ்ட்டிவெல் ஆப் இந்தியா’ 3–ம் ஆண்டு கலை விழா வழக்கமான எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் அடையாறில் உள்ள  குமாரராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று மாலை குதூகலமாகத் துவங்கியது.
பிரபல நாட்டிய மேதையும், முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் வைஜெயந்தி மாலா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இசை– கலை விழாவைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.
பிரபல பரத நாட்டியக் கலைஞர் ஊர்மிளா சத்யநாராயணனுக்கு ‘பரதகலா ரத்னா விருதையும், வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வைஜெயந்தி மாலா வழங்கி வாழ்த்தினார்.
இதேபோல நாட்டியக் கலைஞர்கள்– வித்யா சுப்பிரமணி்யம், திவ்யா சிவசுந்தர்– ஆகியோருக்கு ‘நாட்டிய கலா ரத்னா’ விருதையும்,
பிரபல மிருதங்க கலைஞர் சக்திவேல் முருகானந்தத்துக்கு– ‘லயகலா ரத்னா’ விருதையும்,
கர்நாடக இசைப் பாடகி டாக்டர்  சுபாஷினி பார்த்தசாரதிக்கு ‘விதூஷி டி.முக்தா நூற்றாண்டு விருதை’யும்,
பிரபல வயலின் கலைஞர் விட்டல் ராமமூர்த்திக்கு– ‘வயலின் மேஸ்ட்ராே  லால்குடி ஜி.ஜெயராமன் நினைவு விருதை’யும்
வளர்ந்து வரும் இசைக் கலைஞன் அரவிந்த் பார்கவ்விற்கு– ‘மாண்டலின்   மாஸ்ட்ரோ யு.ஸ்ரீனிவாஸ் நினைவு விருதையும் வழங்கி வாழ்த்தினார்.
இசை–நாட்டிய உலகில் 40 ஆண்டுகளாக அரிய கலைச்சேவை ஆற்றி வரும்  ஸ்ரீகிருஷ்ணகான சபா செயலாளர் ஒய்.பிரபுவுக்கு ‘கலா சேவா ரத்னா’ விருதையும் வழங்கி டாக்டர் வைஜெயந்தி மாலா வாழ்த்தினார்.
* இளம் பருவத்திலிருந்தே நாட்டியத்தை தன் வாழ்க்கையாக தீர்மானித்து– அதற்காகவே முழு நேரத்தையும் செலவிட்டு வரும் அற்புதமான ஆடலரசி ஊர்மிளா சத்யநாராயணன் ஆண்டுக்கு ஆண்டு மேடையேற்றும் புதிய நாட்டிய நிகழ்ச்சியில் வித்யாசமாக எதையாவது செய்து காட்ட வேண்டும் என்று முனைப்போடு செயல்படும் அருமையான நாட்டியக் கலைஞர். வளர்ந்து வரும் நாட்டியக் கலைஞர்களுக்கு மத்தியில் தனக்கென்று ஒரு தனிப்பாணியை புகுத்தி நல்ல வரவேற்பை பெற்று வருபவர் என்று வைஜெயந்தி மாலா புகழாரம் சூட்டினார்.
* ‘என்னுடைய இசைக்குழுவிலும் பணியாற்றி வருபவர்  சக்திவேல் முருகானந்தம். அருமையான மிருதங்கக் கலைஞர். அவரது  விரல்கள் பேசும். நாட்டியக் கலைஞர்களின் நடை–பாவம்– முத்திரைகளுக்கு ஏற்ப– லயத்தில் விளையாடும் அவரது விரல்கள், சாமான்யனையும் சரி, இசை, நாட்டியம்  அறிந்துணர்ந்த பண்டிதனையும் சரி– ரசிக்க வைக்கும் ஆற்றல் மிக்கவர் என்று புகழாரம் சூட்டினார்.
* ‘வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் பாரம்பரியம்– குருகுலத்தில் வளர்ந்த கலைஞர் விட்டல் ராமமூர்த்தி. குருவுக்கு பேர் சொல்லும் சிஷ்யனாக– வெற்றி வலம் வந்து கொண்டிருக்கும் கலைஞன் என்று குறிப்பிட்டு மனம் திறந்து வாழ்த்தினார்.
‘மக்கள் குரல்–டிரினிட்டி மிரர்’
பத்திரிகைகளுக்கு பாராட்டு
வளர்ந்த இசைக் கலைஞர்கள் மட்டுமல்ல– வளரும் இசை, நாட்டிய–வாத்தியக் கலைஞர்களின் திறமையைக் கண்டறிந்து விருதளித்து கவுரவிக்கும்  ‘மக்கள் குரல்–டிரினிட்டி மிரர்’ பத்திரிகைகளின் ஆசிரியர் ஆர்.முத்துக்குமாரையும், இசை கலை விழாவின் அமைப்பாளர் முரளி ராகவனையும் (அமெரிக்க வாழ் தமிழர்) மனம் திறந்து பாராட்டுகிறேன் என்றும் வைஜெயந்தி மாலா குறிப்பிட்டார்.
மார்கழி மாதத்தில் டிசம்பர், ஜனவரி இசைக் கலைவிழா நேரத்தில் ‘மக்கள் குரல்–டிரினிட்டி மிரரும்’ தங்கள் பங்குக்கு   இசை விழா நடத்துவது மகிழ்ச்சிக்குரியது என்றும் மனம் திறந்து பாராட்டினார்.
‘டிரினிட்டி ஆர்ட்ஸ் பெஸ்ட்டிவல் ஆப் இந்தியா 2013’  கலை விழா தொடர்ந்து 3–ம் ஆண்டாக நடத்தப்படுகிறது. மேடை அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கர்நாடக இசை மும்மூர்த்திகள் தியாகராஜர்– முத்துசாமி தீட்சிதர்– சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரின் படங்கள்,  சமீபத்தில் மரணமடைந்தாலும்… என்றும் நினைவில் வாழும் ‘வயலின் மேதை’  லால்குடி ஜி.ஜெயராமன், மாண்டலின் மேதி யு.சீனிவாஸ்– இருவரின் உருவப்படங்கள்,  ‘மக்கள் குரல்’ நிறுவன ஆசிரியர் எம்.சண்முகவேல் உருவப்படம் வைக்கப்பட்டு மேடை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. (பிரபல கர்நாடக இசை விதூஷி டி.முக்தா, வயலின் மேதை லால்குடி ஜெயராமன், மாண்டலின் மேதை சீனிவாஸ்– கலைஞர்களுக்கு அர்ப்பணிப்பு இந்த கலைவிழா)
முரளி ராகவன்
ஆரம்பத்தில் கலை விழாவின் அமைப்பாளர் முரளி ராகவன் வரவேற்புரையாற்றினார். டிரினிட்டி ஆர்ட்ஸ் பெஸ்ட்டிவல் நடத்தப்படுவதன் நோக்கம்– அதன் செயல்பாடு– துணை நிற்கும் மக்கள் குரல் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார் மற்றும் குழுமத்தின் பங்களிப்பு பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.
எதிர்கால இளையத்தலைமுறையை ஊக்குவிக்கும் விதத்தில் வெளிநாடுகளில் வாழ் தமிழ்க் கலைஞர்களோடு– நம்ம ஊர் கலைஞர்களுக்கும் மேடை போட்டுக் கொடுப்பதற்காக இந்த ஆண்டு 7 நாட்களாக விழா நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
விருது பெறும் இசைக் கலைஞர்களுக்கும்– தனக்கும் இருக்கும் தொடர்பை வெளிப்படுத்திய முரளி ராகவன், சென்னை இசை விழாவில்  ‘மக்கள் குரல்’–‘டிரினிட்டி மிரர் குழுமமும் தனக்குரிய முத்திரையைப் பதித்து, நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
ஆன்லைன் மூலம்
தேர்வானார்  ஊர்மிளா
பிரபலமான 3 பரதக்கலைஞர்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து– அவர்களுக்கு மத்தியில்– ஆன்லைன் மூலம் கலா ரசிகர்களிடம் நடத்தப்பட்ட தேர்வில்– ஊர்மிளா சத்யநாராயணனுக்கு அதிக வாக்குகள் கிடைத்தது என்றும்,அதன் முடிவில் அவருக்கு ‘பாரத கலா ரத்னா விருதும்’, ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதும் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்பது தெரியும். ஆனால் அவருக்கு முன்னோடியாக பாட்டும், பரதமும் நுண் கலைகளில் சூப்பர் ஸ்டார் வைஜெயந்தி மாலா’ என்று குறிப்பிட்டதும் பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்றனர்.
‘இந்த வயதிலும் இசை–பரதம் குறித்த பல்வேறு அம்சங்களையும் படித்துப் படித்து தன்னை பதிவு செய்துக் கொண்டு வரும் அருமையான படைப்பாளி அவர்’ என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
ஆர்.முத்துக்குமார்
கலைவிழாவின் தலைவர் மக்கள் குரல்– டிரினிட்டி மிரர் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார் சிறப்பு விருந்தினர்கள், விருது பெறும் கலைஞர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
இசை விழா ஏற்பாடுகளின் பின்னணியில் எங்கள் குழுமத்தின் வளர்ச்சியில் என்றும் அக்கறை உள்ள முரளி ராகவனின் கடும் உழைப்பை மறக்க முடியாது. அதற்கு பாராட்டுக்களையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பெரிய நிறுவனங்கள் மட்டுமே நடத்தி வந்த பெரும் கச்சேரி திருவிழாவில் உழைக்கும் பத்திரிகையாளர்களான எங்களின் முயற்சி ஒரு சிறு விழாவாக இருந்தாலும் எங்கள் வளர்ச்சியில் அக்கறை உள்ள நட்பு வட்டம் கொடுத்த ஆதரவும் ஈடுபாடும் அபரிமிதமானது என்று குறிப்பிட்டார்.
டிசம்பர் சீசனில் நம்ம ஊர் கலைஞர்களுக்கு, வெளிநாட்டு கலைஞர்களின் போட்டியும் வர ஆரம்பித்துவிட்டதால், சுருதி தவறாமல், அழுத்தம் திருத்தமாக கச்சேரிகள் வழங்கியாக வேண்டிய நிர்ப்பந்தம் அதிகரித்துவிட்டது. சரியான போட்டி என்று ரசிகர்கள் மகிழத்தான் செய்கிறார்கள். ஆக மொத்தம், மார்கழி இசை விழா சென்னைக்கு அழகூட்டுகிறது. மேலும் பாரம்பரிய கர்நாடக இசை கச்சேரிகள் இடையே ஜனரஞ்சக ரசிகர்களை கவரும் தமிழ் கச்சேரிகளும் அதிகரித்து விட்டது என்றார்.
வெளிநாட்டு பறவைகள் வருவதைப்போல இசை விழாவில் வெளிநாட்டில் இருந்து  வரும்  கலைஞர்களுக்கு சென்னை வேடந்தாங்கலாகி விட்டது என்று அவர்  குறிப்பிட்டார்.
ஒய்.பிரபு
விருது பெற்ற கலைஞர்கள் ஒவ்வொருவர் பற்றியும் ரத்னச் சுருக்கமாகக் குறிப்பிட்டு வாழ்த்தினார் ஒய்.பிரபு.
தந்தை (ஸ்ரீகிருஷ்ணகான சபா யக்ஞ ராமன்) வழிகாட்டுதலில்– கலைச்சேவை புரிந்து வரும் எனக்கு– என்னையும் மேடையேற்றி கலா சேவா ரத்னா வழங்கியிருக்கும் ஆர்.முத்துக்குமார்– முரளி ராகவனுக்கு ஆத்மார்த்தமாக நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.  கலை வளர்க்கும் ஒரு சபா நிர்வாகியை அதே கலை வளர்க்கும் இன்னொரு அமைப்பின் நிர்வாகி அங்கீகரித்து–விருதளித்து கவுரவிப்பது அபூர்வம். அதைச் செய்திருக்கும் ‘மக்கள் குரல்–டிரினிட்டி மிரர்’ குடும்பத்துக்கு இருக்கும் அந்தப் பெரிய மனதுக்காக தலைவணங்குகிறேன் என்று குறிப்பிட்டு ஆத்மார்த்தமாக நன்றி சொன்னார் ஒய்.பிரபு.
வாசம்–சுவாசம் நாட்டியம்
‘வாசமும்–நாட்டியம், சுவாசமும் நாட்டியம்’ என்றிருக்கும் இளையதலைமுறைக் கலைஞர் ஊர்மிளா சத்யநாராயணன், நாட்டியத்துக்கே முழு அர்ப்பணிப்பு. அவரை இன்று வாழ்நாள் சாதனையாளர் விருதையும், பரத கலா ரத்னா விருதையும் பெற வைத்திருக்கிறது என்று குறிப்பிட்டு வாழ்த்தினார்.
அமெரிக்க வாழ் தமிழர்– வித்யா சுப்பிரமணியம், அந்நிய மண்ணில் பரதத்தை பரப்பிடும் ஒப்பற்றக் கலைஞர்.
பரத நாட்டிய மேதைகளான தனஞ்செயன்– சாரதா தனஞ்செயனின் குடும்பத்து கலைவாரிசு திவ்யா சிவசுந்தர்.
இவரது மிருதங்கம் வாசிப்பு என்றால் பரதக் கலைஞர்கள் மத்தியில் தனி மவுசு. இவரது தேதியே கிடைப்பது அறிது என்று அடையாளம் காணப்பட்டிருப்பவர் மிருதங்கக் கலைஞர் சக்திவேல்  முருகானந்த். (நீண்ட நெடிய அனுபவத்தில் முதல் முறையாக ஒரு கலை அமைப்பின் சார்பில் ‘மக்கள் குரல்–டிரினிட்டி மிரர்’ விருதை பெறுபவர்).
தனக்கென்று தனி ஒரு மரியாதையுடன் இசைப் பாரம்பரியத்தில் வளர்ந்து வரும் கலைஞர் டாக்டர் சுபாஷிணி பார்த்தசாரதி.
வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் குரு–சிஷ்யா பாரம்பரியத்தில் வளர்ந்த ‘தனித்திறமை’ கலைஞர். அமெரிக்கா, சென்னை என்று பறந்து கொண்டிருக்கும் ஆற்றல்மிகு கலைஞர் விட்டல் ராமமூர்த்தி.
குருவுக்கு ஏற்ற சிஷ்யன்– மாண்டலின் யு.சீனிவாசிடம் பயின்ற அரவிந்த் பார்கவ். ஆசானைப் போல எதிர்காலத்தில் மாண்டலினுக்கு ஒரு மவுசையும், மரியாதையையும் ஏற்படுத்திடுவார்–அரவிந்த் பார்கவ்
– என்று விருது பெற்ற ஒவ்வொருவர் பற்றியும் தனித்தனியாகக் குறிப்பிட்டு பாராட்டினார் பிரபு.
தஞ்சை ஓவியம் என்றால்
குமார ராணி நினைவு
கலைகளை வளர்ப்பதிலும், கல்விச் சாலைகளை நிர்வகிப்பதிலும் நல்ல கலைஞர்களை கவுரவிப்பதிலும் செட்டி நாட்டரசர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் குமாரி ராணி மீனா முத்தையா என்றாலே தஞ்சை ஓவியங்கள்  பெயிண்டிங்ஸ்தான் நினைவுக்கு வரும். கலைகளின் போஷகர் அவர் என்று விசேஷமாகக் குறிப்பிட்டு குமாரராணியை வாழ்த்தினார் ஒய்.பிரபு.
முடிவில் ‘மக்கள் குரல்’ இயக்குனர் ஏ.கே.சித்தரஞ்சன் நன்றி கூறினார்.

Related Posts