லஷ்மன் ஸ்ருதி குழுவினர் அமெரிக்காவில் தொடர் இசை நிகழ்ச்சி

3011

சென்னை, செப். 30–
கலாலயா யு.எஸ்.ஏ சார்பாக லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு அக்டோபர்  3–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை வட அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப் பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
பின்னணிப் பாடகர்கள் மற்றும் விஜய் தொலைக்காட்சி புகழ் சூப்பர் சிங்கர்ஸ்  ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.   3–ந்தேதி ஆஸ்டின் நகரில் தொடங்கும் இசை நிகழ்ச்சி 26–ந் தேதி வாஷிங்டன் நகரில் நிறைவடைகிறது.
இது சம்பந்தமாக லஷ்மன் ஸ்ருதி குழுவின் இயக்குனர் லஷ்மன் கூறுகையில்,
பலமுறை அமெரிக்காவில் இசைப் பயணம் செய்துள்ள லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு இந்த முறை  நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பின்னணிப் பாடகர்கள் க்ரிஷ், ஹரிஹரசுதன், வேல்முருகன், மாலதி லஷ்மன், ரோஷினி மற்றும் சூப்பர் சிங்கர்கள் சாய்சரண், அனு, அனிதா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் பல்வேறு நாடுகளில் 8000 நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தி உள்ள லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு 1994–ம் ஆண்டு சென்னை காமராஜர் அரங்கில் தொடர்ந்து 36 மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை படைத்தது.
வேகமான விஞ்ஞான வளர்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்கள் இருப்பினும் மேடையில் எந்தவிதமான கரோக்கி, மைனஸ் ஒன் ட்ராக் போன்றவற்றை பயன்படுத்தாமல் 100 சதவீதம் எல்லா இசைக்கருவிகளையும் இசைத்துப் பாடும் இசைக்குழு லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு. திறமை வாய்ந்த பாடகர்களுடன் அமெரிக்கா மற்றும் கனடாவில் களம் இறங்க உள்ளது.  இசை ரசிகர்களின் காதுகளுக்கும் கண்களுக்கும் விருந்தாய் இந்தத் இசை பயணம் அமையும்.
அமெரிக்காவில்  அக்டோபர்  3–ந்தேதி ஆஸ்டின், 4–ந்தேதி சான்டியாகோ, 5 –ந்தேதி  சியாட்டில், 10–ந்தேதி  டாலஸ், 11–ந்தேதி  சிக்காகோ,12–ந்தேதி  செயிண்ட் லூயிஸ்,17–ந்தேதி சாக்ரிமன்டோ, 18–ந்தேதி சான் ஹுசே, 19–ந்தேதி வேன்கூவர், (கனடா) 24–ந்தேதி நியூயார்க், 25–ந்தேதி பிலடெல்பியா, 26–ந்தேதி  வாஷிங்டன் டி.சி ஆகிய இடங்களில் 12 இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
குழந்தைகள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், பெரியவர்கள் என்று எல்லோருக்கும் ஏற்றவாறு பாடல்கள் இடம் பெறும்.
சான் ஹுசே நகரில் நடைபெறும் நிகழ்ச்சி அமெரிக்காவில் லஷ்மன் ஸ்ருதி நடத்தும் 50வது இசை நிகழ்ச்சி என்பதால் இசையமைப்பாளர் கங்கை அமரன், நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர்  கலந்து கொள்கிறார்கள்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும்  கலா ஐயர் ஏற்பாடு செய்கிறார். ஐந்தாவது தூண் அமைப்பின் நிறுவனர்  விஜய் ஆனந்த் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குகிறார்.
நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை சுலேகா.காம் (sulekha.com) மூலமாகவும், நிகழ்ச்சி அமைப்பாளர்களின் இணையதளங்களின் மூலமாகவும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Posts