மனஸ்வினி ஸ்ரீதரின் 100வது நாட்டிய நிகழ்ச்சி: நடிகை ஷோபனா, நந்தினி ரமணி, மதுரை முரளீதரன் வாழ்த்து

மனஸ்வினி ஸ்ரீதர் –பரதார்ப்பணா நாட்டியப்பள்ளியின் நிறுவனர் சுமா மணியின் பெருமைமிகு சிஷ்யை. 2004–ம் ஆண்டில் அரங்கேற்றம் கண்டார். கடந்த 10 ஆண்டுகளில் வெற்றிகரமாக 99 மேடைகளைக் கண்டவரின் 100வது நிகழ்ச்சி வாணிமகால் ஒபுல்ரெட்டி ஹாலில் மிகச்சிறப்பாக நடந்தது.
பரதநாட்டிய விற்பன்னர்கள் நந்தினி ரமணி, மதுரை ஆர். முரளீதரன் மற்றும் மக்கள் குரல் வீ.ராம்ஜீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள். குரு சுமா மணியின்  குரு நடிகை ஷோபனா கவுரவ விருந்தினராக பங்கேற்று குரு–சிஷ்யை இருவரையும் மனம் திறந்து பாராட்டினார்.
நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு மாணவி. ‘லிட்டில் ஷோபனா’ என்று நாட்டியப் பேரொளி பத்மினியால் பாராட்டுப் பெற்றவர் மனஸ்வினி ஸ்ரீதர். பல்வேறு சபாக்களிலும், கோவில் விழாக்களிலும், தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பவர் மாணவியாக இருந்துகொண்டு குரு சுமா மணிக்கு உதவியாக சக மாணவிகளுக்கு நாட்டிய பாடமும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சதாத்தமா ரங்கப்பிரவேசம்’ என்று தலைப்பிட்டு 100வது நிகழ்ச்சியை மனஸ்வினி வெற்றிகரமாக நடத்தினார். அழைப்பிதழில் அவரின் அற்புதமான முகபாவத்துடன் கூடிய படத்தின் அடியில் ‘எ டே டு டேஸ்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார். அசாத்திய தன்னம்பிக்கையோடு. ‘பிரமிப்பூட்டும்…. வியப்பிலாழ்த்தும் நாள்… என்பது அதற்கு அர்த்தம். சொன்னது அப்படியே பலித்தது. நாட்டியம்– வியப்பிலாழ்த்தியதே?!
130 நிமிட நேரம் ஆடிய நாட்டியத்தில்– பார்வையாளர்களின் கைத்தட்டலையும், ஏகோபித்த பாராட்டுக்களையும் அவர் பெற்றார்.
சித்ராம்பரி கிருஷ்ணகுமார் – வாய்ப்பாட்டு, வெங்கட சுப்பிர மணியன்–மிருதங்கம், சேஷாத்ரி–வயலின், முத்துக்குமார்–புல்லாங் குழல், நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.
எதிர்காலத்தில் சிறந்த நாட்டியத்தாரகையாக இடம் பிடிப்பார் மனஸ்வினி என்று சிறப்பு விருந்தினர்கள் 4 பேரும் வாழ்த்தினார்கள்.
தந்தை ஸ்ரீதர் வரவேற்றார். நிகழ்ச்சியை ‘அழகுதமிழ் ஆரூர் சுந்தர்ராமன் தொகுத்து வழங்கினார்.