மார்கழி இசை – நாட்டிய விழா: மனசில் இடம் பிடித்த எம்.ஜி.சக்கரபாணியின் கொள்ளுப்பேத்தி வர்ஷினி

எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியின் மகள் லீலாவதியின் (எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் வழங்கியவர்) பேத்தி வர்ஷினியின் பரத நாட்டியம் சென்னை மயிலாப்பூர் ஆர்.கே. சுவாமி ஹாலில் விமர்சையாக நடந்தது.
குமஸ்கட்டில் 11–ம் வகுப்பு படித்து வரும் வர்ஷினி அந்த நாட்டிலேயே பிரபல நாட்டிய கலைஞர் பத்மினி கிருஷ்ணமூர்த்தியிடம் (திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர்) முறைப்படி  பரத நாட்டியம் கற்றுக் கொள்ள வைத்தனர், பெற்றோர்கள் முரளி – ஹேமா. பிரபல நாட்டிய கலைஞர் கோபிகாவர்மா நடத்தி வரும் ‘தாஸ்யம்’ என்ற அமைப்பின் சார்பில் நடந்த மார்கழி மாத இசை விழா நிகழ்ச்சியில் தனது குரு பத்மினி கிருஷ்ணமூர்த்தியோடு வர்ஷினி மஸ்கட்டிலிருந்து சென்னைக்கு வந்து நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினார்.
ஆரபி ராகத்தில் புஷ்பாஞ்சலியும், கமஸ் ராகத்தில் ‘‘வேலனைக் காண்போம்…’ (வர்ணம்), சௌராஷ்டிரம் ராகத்தில் (பழைய பதம்) ‘அதுவும் சொல்லுவாள்….’ சிம்மேந்திர மத்திமத்தில் தில்லானா… ஆகிய அயிட்டங்களைஆடினார் வர்ஷினி.
பத்மினி கிருஷ்ணமூர்த்தியின் நட்டுவாங்கம், வானதிரகுராமன் பாட்டு, ஸ்ரீராம்மோகன் மிருதங்கம், ஸ்ரீகலையரசன் வயலின் பெருமை சேர்த்தனர்.
‘சமூக சேவைகளுக்காக நிதி திரட்ட யார் முன்வந்தாலும் மஸ்கட்டிலிருந்து வந்து இலவசமாக பரதநாட்டிய நிகழ்ச்சியை நடத்தித் தருகிறேன்’ என்று கூறிய வர்ஷினிக்கு ‘தாஸ்யம்’ அமைப்பின் சார்பில் நற்சான்றிதழை நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் வழங்கினார்.