விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே

எந்த ஒரு காரியமும் வெற்றி பெற, தொழில் நல்ல முறையில் லாபகரமாய் நடக்க, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற, மணமகனை தேர்வு செய்ய, மணமகளை உறுதி செய்ய, புதியதாய் வீடு கட்ட  புதிய வீட்டில் குடி புக, புதிய வாகனம் வாங்க, முதன் முதல் பணியில் சேர, குழந்தைக்கு பெயர் வைக்க…
இப்படி எல்லா சுபகாரியங்களுக்கும் விநாயகப் பெருமானை வேண்டிக் கொண்டால் நிச்சயம் வெற்றி கிட்டும். அதனாலே தான் விநாயகப் பெருமானை முழுமுதற் கடவுள் என்று போற்றுகிறோம்.
எந்த திக்கிலிருந்தாலும் ஏக தந்தனை வேண்டினால் நம்மைக் காத்திடுவார். எருக்கம் பூவை வைத்து வணங்கினால், எல்லா சுகமும் தந்திடுவார். அருகம்புல்லை  வைத்து  ஆராதனை செய்தால், அனைத்து வேண்டுதலையும் அப்பொழுதே நிறைவேற்றிடுவார்.
2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளையார் பட்டி  என்ற ஊ ரில் உள்ள சிறு குன்றில் உள்ள பாறைக் குகையில் செதுக்கப்பட்ட அழகிய கற்பக விநாயகர் அந்த ஊருக்கு அருள் பாலித்து வருகிறார். மேலும் இங்கு உள்ள விநாயகப் பெருமானுக்கு வலது புறமாக துதிக்கை சுற்றி வைத்திருப்பதால், இவரை வலம்புரி பிள்ளையார்  என்றும் அழைக்கிறார்கள். இந்த வெற்றிக் கடவுள் தான் இங்குள்ள கோவிலுக்கு முக்கிய கடவுளாக இருக்கிறார்.
மேலும்  இங்கு எம்பெருமான் திருவீசருக்கும் ஒரு சிலையை செதுக்கியுள்ளனர். இங்குள்ள சிவபெருமானும் மிகவும் பிரசித்தி ஆனவர். அவர் அர்ஜுனபுரீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார்.
இத்திருத்தலத்தில் திருமண வேண்டுதலை நிறைவேற்றித் தரும் கார்த்தியாயினி, புத்திர சந்தானம் நல்கும் நாகலிங்கம், செல்வத்துக்கு அருள் பாலிக்கும் பசுபதீஸ்வரர் ஆகிய தெய்வங்களும் உள்ளன.  6 அடி உயரத்தில் விநாயகர் வீற்றிருந்து காட்சி தருகிறார். இது குகையில் செதுக்கி யுள்ள காரணத்தால் எம்பிரானை பிரதட்ஷிணமாக சுற்றி வர இயலாது. உட்பிரகாரம் எண்ணை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தங்கக் கவசம்
விநாயகப் பெருமானை தங்கக் கவசத்தால் அலங்கரித்துள்ளனர். அபிஷேகம், நீராட்டு நடைபெறும் நேரங்களில் மட்டும் இந்த புராதன சிலையை காண முடியும்.
இத்திருத்தலம் முந்தைய பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாகும். இங்கு 14 சிற்பங்களை செதுக்கி யுள்ளனர். இங்குள்ள கல்வெட்டுக் களில் உள்ள எழுத்துக்கள் மூலம் இது தெரிகிறது. ஆகம விளக்கங்கள் மூ லம் இந்தத் தலம் 1091 லிருந்து 1238 க்குள்  நிர்மாணிக்கப் பட்டதாக அறியப்படுகிறது.
தற்சமயம், இத்திருக்கோவில் நகரத்தார் என்ற சமூகத்தினரால் நிர்வாகிக்கப்பட்டு தினசரி பூஜைகளும் நடத்தப்பட்டு வருகிறது. திறமையுடன் திருக்கோவிலை சுத்தமாக வைத்திருக்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் விநாயக சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும் வந்து, அச்சமயம் நடைபெறும் தேரோட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
கற்பக விநாயகர் திருக்கோவில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி என்ற ஊரில் உள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து தினசரி புறப்படும் சென்னை – ராமேஸ்வரம் ரெயிலில் காரைக்குடியில் இறங்கி பஸ் மூலம் 12 கிலோ மீட்டர் தூரமுள்ள திருப்பத்தூர் வரலாம். இந்த புனிதமான கோவி லுக்கு அருகில் குன்றக்குடி முருகன் கோவில், காளையார் கோவில், சிவன் கோயில் ஆகியவை பிரசித்திப் பெற்ற கோவில்களையும் தரிசித்து வரலாம்.
-: எஸ். தீன தயாளன் :-