போஸ்டர் செய்தி

ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

சென்னை, ஆக. 10–

கருணாநிதி மறைவையடுத்து அவருக்கு அரசு சார்பில் என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் அரசு செய்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் நச்சு கருத்தை கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தி.மு.க.வினருக்கு அண்ணா தி.மு.க. அரசின் கள்ளமில்லா வெள்ளை உள்ளம் புரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைமை பழைய பாதையில் பயணித்து பழிச்சொல் வீசுவது கண்டு கலங்கப்போவதுமில்லை; கடமை தவறப்போவதுமில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அண்ணா தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சருமான டி. ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

டாக்டர் எம்.ஜி.ஆரோடு நெருங்கிய நட்பும், புரட்சித் தலைவரின் அன்பான முயற்சியால் பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவர் என்ற புகழும் பெற்றிருந்த மதிப்பிற்குரிய பெருந்தகை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி 95 வயதில், முதுமையாலும், உடல்நலக் குறைவாலும் காலமானார் என்ற துயரமான நிகழ்வு நடைபெற்ற சில மணி நேரங்களுக்குள்ளாகவே, முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினின் கடிதத்தில் காணப்படும் அபாண்டமான குற்றச்சாட்டும், நஞ்சை விதைக்கும் பழிச் சொல்லும் கண்டு உள்ளம் பதைபதைக்கிறது.

நச்சு கருத்து

பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை கடனாக வாங்கி இருப்பதால் அதை திருப்பித் தருவதற்காக அண்ணா சமாதி அருகே கலைஞர் மு. கருணாநிதியை நல்லடக்கம் செய்ய வேண்டியது இன்றியமையாதது என்று அண்ணா சதுக்கத்தில் இடம் கேட்டதாகவும், அந்த வேண்டுகோளை காழ்ப்புணர்ச்சியாலும், ஆட்டுவிப்போரின் சூழ்ச்சியாலும் அண்ணாசதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுத்தார்’’ என்று மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் நச்சுக் கருத்து ஒன்றினை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மறைந்த ஒரு முதுபெரும் தமிழக அரசியல் தலைவருக்கு உள்ளார்ந்த மரியாதையுடனும், அக்கறையுடனும், அண்ணா தி.மு.க. அரசு செய்திருக்கும் சிறப்புகளை பட்டியலிட்டுக் கூறும் நிலைக்கு, மு.க. ஸ்டாலினின் கடிதம் நம்மை தள்ளியிருக்கிறது. சொல்லிக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு சிறிதும் இல்லை. ஆனால், பதிவு செய்வது வரலாற்றுக் கட்டாயம் என்பதால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் புகழைப் போற்ற, தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இங்கே பட்டியலிடுகிறோம்.

எடுத்த நடவடிக்கை

* இறுதிச் சடங்கு நாளான 8.8.2018 அன்று மாநில அரசு அலுவலகங்கள், மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது.

* கலைஞர் மு. கருணாநிதியின் பூத உடல் மக்களின் பார்வைக்கு ராஜாஜி ஹாலில் வைப்பதற்கு அனுமதி வழங்கியது; அன்னாரது உடலை நல்லடக்கம் செய்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியது; அவரது உடல் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லம் செல்வதற்கும், மீண்டும் அங்கிருந்து ராஜாஜி ஹாலுக்கு கொண்டுசெல்லப்பட்டு மக்கள் பார்வைக்கு வைத்தும், பின்னர் அங்கிருந்து கொண்டு சென்று நல்லடக்கம் செய்யும் வரையிலும் காவல் துறையினர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அரைக் கம்பத்தில் தேசியக் கொடி

* மத்திய அரசின் உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அனுமதி பெற்று, அரைக் கம்பத்தில் தேசியக் கொடி பறந்தது; சவப் பெட்டி மீது தேசியக் கொடி போர்த்தியது; ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது; இறுதிச் சடங்கின் போது குண்டுகள் முழங்கியது, முதலான அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

* துக்கம் அனுசரிக்கும் வகையில் 7 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறப்பது மற்றும் அரசு சார்ந்த விழாக்கள் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது.

* இரங்கல் செய்தி அரசிதழில் வெளியிடப்பட்டது.

மெரினா கடற்கரையில் புதிய கல்லறைகள், நினைவிடங்கள் அமைப்பது தொடர்பாக ஐந்து மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளாக நிலுவையில் இருந்தன. கோடான கோடி மக்களால் ‘‘அம்மா’’ என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட புரட்சித் தலைவி அம்மாவின் நினைவிடத்தை மெரினா கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்திவிடத் துடித்தவர்கள் தொடுத்த வழக்குகள் தான் அவை ஐந்தும்.

காழ்ப்புணர்ச்சியா?

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் சட்டச் சிக்கல்கள் உருவாகி, கடைசி நேரத்தில் பெரும் குழப்பம் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் தான் அண்ணா சதுக்கத்தில் இடம் தருவது இயலாமல் போய், நல்லடக்கத்திற்கான காரியங்கள் நடைபெறுவதில், நடைமுறை இடர்ப்பாடுகள் வந்துவிடக்கூடாது என்பதால், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரே மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம், போற்றுதலுக்குரிய போராளி ஐயா இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரது நினைவிடங்களுக்கு அருகே கலைஞர் மு. கருணாநிதிக்கும் 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு முன்வந்தது. இதில் ஏது காழ்ப்புணர்ச்சி?

புரட்சித் தலைவி அம்மாவின் திருஉருவப் படத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குள் திறந்து வைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகடியம் பேசிய தி.மு.க.வினருக்கு, மெரினா கடற்கரையில் இருந்து புரட்சித் தலைவியின் நினைவிடத்தை அப்புறப்படுத்துவோம் என்று மேடை போட்டு பேசிய தி.மு.க.வினருக்கு மனசாட்சி இருக்கிறதா? என்ற கேள்வியே எழுகிறது.

குத்திக்காட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, சரித்திர நிகழ்வு என்பதற்காகவும், பழமையை மறந்தோர்க்கு எதிர்காலம் மட்டுமல்ல, நிகழ்காலமுமே கூட வழிகாட்ட ஒளியின்றி தடுமாற்றம் ஏற்படுத்திவிடும் என்பதற்காக ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அன்று மறுத்தது ஏன்?

பெருந்தலைவர் காமராஜர் மறைந்த போதும், தமிழ்நாடு முதலமைச்சராகப் பணியாற்றிய ஜானகி அம்மையார் மறைந்த போதும், அவர்களுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க அப்போது முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதியிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. முதலமைச்சராகவே இருந்து மரணமடைவோருக்கு மட்டும் தான் மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதி அளிக்கப்படும் என்று, வழக்குகள் ஏதும் இல்லாத நிலையிலும் கூட மறுத்தவர் தான் மறைந்த கலைஞர் மு. கருணாநிதி என்று, அந்த நிகழ்வுகளின் போது அவரிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்து ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள் இன்றும் நம்முடன் வாழ்கிறார்கள். அவர்கள் கூறிய தகவல்கள் தான் இவை என்பதை நினைவூட்டுகிறேன்.

அண்ணா தி.மு.க.வின் வெள்ளை உள்ளம்

தாங்கள் ஏதோ போதிமரத்தின் கீழ் ஞானம் பெற்ற புத்தபெருமான் போலவும், அப்பழுக்கில்லாமல் ஆட்சி நடத்திய சித்தர்களைப் போலவும், தாங்கள் அள்ளிக் குவித்து வைத்திருக்கும் ஆயிரம் தலைமுறைக்கான செல்வம் தங்கள் அயராத உழைப்பாலும், அறிவுத்திறத்தாலும் வந்தது போலவும், புரட்சித் தலைவி அம்மா மீது எண்ணற்ற வழக்குகளைப் போட்டு, சிறையில் தள்ளி, சித்ரவதை செய்து அவருக்கு மனவேதனையையும், அவமானத்தையும் பரிசளித்த தி.மு.க.வினருக்கு, அண்ணா தி.மு.க. அரசின் களங்கமில்லா வெள்ளை உள்ளம் புரியாது. புரியவே புரியாது! ஆனால், அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம் நன்கு புரிந்துகொள்ளும்.

காட்சிக்கு எளியவர்களாய், கடுஞ்சொல் அற்றவர்களாய், எல்லோர்க்கும் எல்லாமும் ஆகி தமிழகத்தை வலிமை மிக்க எதிர்காலம் நோக்கி வழிநடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும், நாங்களும், திமுக தலைமை பழைய பாதையில் பயணித்து பழிச் சொல் வீசுவது கண்டு கலங்கப்போவதுமில்லை; கடமை தவறப்போவதுமில்லை.

இவ்வாறு அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *