போஸ்டர் செய்தி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.5 கோடி உதவி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, ஆக.10-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் சில மாவட்டங்களில் பெய்த கனமழையும் வரலாறு காணாத வெள்ளமும் சொத்துக்களுக்கு பெரிய சேதத்தையும், பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கேரள மாநில மக்களுக்கு சொல்லொண்ணா துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த மழை வெள்ளத்தால் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் தமிழக அரசின் சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மழை–வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடி மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதிலும் மிக சிரமமான பணிகளை வரப்போகும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய நிலையில் கேரள மாநிலம் இருக்கிறது. மழை–வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பகுதிகளை மறுகட்டுமானம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள அரசுக்கும், மாநில மக்களுக்கும் தமிழக அரசு மற்றும் மக்களின் ஆதரவையும், உணர்வுகளையும் காட்டுவதன் தொடக்க அடையாளமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து கேரளத்துக்கு உடனடியாக ரூ.5 கோடியை விடுவிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.

கேரள அரசுக்கு தேவைப்படும் வேறு எந்த உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *