செய்திகள்

பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை: தமிழகத்தின் கோரிக்கையை மீண்டும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்

டெல்லி, ஆக. 10–

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக, தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், நளினி உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சுமார் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வரும் இவர்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதைத் தொடர்ந்து 7 பேரின் உடல்நிலை, குடும்ப சூழல், பொருளாதார பின்னணி குறித்த விவரங்களை கோரி தமிழக அரசுக்கு மத்திய அரசு அண்மையில் கடிதம் அனுப்பியது.

பரிசீலிக்க வேண்டும்

இதற்கு தமிழக அரசு உரிய பதிலளித்தது. தமிழக அரசு அனுப்பிய 7 குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த குடியரசுத் தலைவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழக அரசின் கருத்தோடு மத்திய அரசு ஒத்து போகவில்லை என்று கூறி 7 பேரையும் விடுதலை செய்ய மறுத்து தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தார்.

இந்த நிலையில், தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு இன்று (ஆகஸ்ட் 10) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *