சிறுகதை

தள்ளி உட்காருங்க…. | ராஜா செல்லமுத்து

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை.

வேலை நாட்களை விட்டு விட்டு விடுமுறை நாட்களில் வேலை அதிகம் இருக்கும்.

அந்த ஒரு வார அழுக்கை ஒரே நாளில் துவைக்க வேண்டிய கட்டாயம். இல்லையென்றால் வரும் நாள் எல்லாம் அழுக்காகவே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்ற ஆதங்கத்தில் ஒவ்வொரு ஞாயிறும் எனக்கு துணி துவைக்கும் நாளாகவே தோன்றும்.

அந்த ஞாயிறும் துணியைத் துவைத்து போட்டுவிட்டு “உஷ்” என உட்கார்ந்தேன்.

ஒருநாளும் வீட்டில் இருந்ததில்லை. விடியும்போது வெளியே போனால் இருள் கவிழும் போது தான் வீடு வருவது வழக்கமாகவே கொண்டிருந்ததால் ஞாயிறு பகல் நகராமலே இருந்தது.

என்ன செய்யலாம். யோசனை செய்ய புத்தியில் சுரீரென்று உரைத்தது இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை சங்கர் வீட்டுக்கு போனா சாப்பிட்டு வரலாமே சரி போன் போடுவோம்.

நண்பருக்கு போன் செய்தேன். டிரிங் ….. டிரிங்…. டிரிங்….

“நல்லாயிருக்கேன்” இன்னைக்கு ஞாயித்துக்கிழமை வீட்டில் இருந்தேன். பொழுது போகல, அப்படியே உங்க வீட்டுக்கும் வந்து சமச்சு சாப்பிட்டு வரலாம்னுட்டு இருக்கேன் வரலாமா?

“ஓ” தாராளமா வாப்பா”என்ன மட்டன் சமைச்சிரலாமா?

“ஓ.கே”

வரும் போது அரைக்கிலோ மட்டன் எடுத்திட்டு வாரீயா?

என்னது அரைக்கிலோ மட்டனா?

“ஆமா”

இதுக்கு நான் வீட்டுலயே இருந்திருக்கலாம் போல”

சரி சிக்கன் எடுத்திரலாமா?

“வேணாம். எனக்கு ஹீட்டு. மட்டன் வேணாமுங்க. அது எனக்கு ஃபேட்டு என்றேன்.

சரி வா வீட்டுக்கு என்றார் நண்பர்.

வரும் வழியிலேயே சிக்கன் கடை தென்பட சிக்கன் வாங்கிட்டு வரவா என்றேன்.

நானும் வருகிறேன் என்ற நண்பர் சிக்கன் கடைக்கே வந்துவிட்டார்.

அரைக்கிலோ சிக்கன்”

அதற்குண்டான வெங்காயம் தக்காளி இஞ்சி –மசாலா வகையறா “கூடவே பினாயில் பாட்டில்ஹேற அத்தனையும் வாங்கினார்.

அடப்பாவிகளா, இதுக்கு நான் ஓட்டல்ல பிரியாணியே சாப்பிடுருக்கலாம் போல” சலித்தபடியே பணம் கொடுத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தோம்.

சிக்கன் குழம்பை நானே வைத்தேன். சாப்பிடும் போது உடன் ஒரு நண்பரும் இணைந்து கொண்டார். வேலை இல்லாத மனிதர்களுடன் சாப்பிடுவது கூட ஒரு சாபம் எனப்பட்டது எனக்கு .

சாப்பிட்டு விட்டு லேசாக கண்ணயர்ந்தேன். நண்பர் விழா ஒன்றுக்கு அழைத்தார்.

“இந்தா வாரேன் ’’என்ற படியே கிளம்பினேன்.

விழாவுக்கு சற்று தாமதமாகவே செல்ல முடிந்தது. காரணம் பிரதான சாலையின் குறுக்கே சாமி சிலையை வைத்தும் கயிற்றைக் கட்டியும் போக்கு வரத்தை மறைத்திருந்தனர்.

அடே …. எந்தக் கடவுள்டா ரோட்ட மறுச்சு, மக்களுக்கு எடைஞ்சல் பண்ணி சாமி கும்பிடச் சொன்னது. இவனுக திருந்த மாட்டானுக போல என்று சலித்தபடியே ஷேர் ஆட்டோவில் விரைந்தேன். விழா களைகட்டியிருந்தது. விழாவில் கிடைத்த சந்தோசத்தைச் சுமந்துகொண்டு விடைபெற்றேன். வீடு வருவதற்கு ஷேர் ஆட்டோவைத் தேடினேன். எல்லா ஆட்டோக்களும் கூட்டத்தில் நிரம்பித் தத்தளித்தது.

ச்சே… என்ன இது? இந்நேரம் இவ்வளவு கூட்டமா இருக்கு?., இவனுகெல்லாம் இப்படி எங்க போவானுக என்ற படியே ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தேன்.

மேலும் மேலும் ஆட்டோ முன்னேற அந்த ஆட்டோவில் கூட்டம் அவ்வளவாக இல்லை.

ஜன்னல் ஓரம் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரின் அருகே நான் உட்கார்ந்தேன். ஷேர் ஆட்டோ இன்னும் சில ஆட்களுக்காக நின்றது கூட்டமா இருக்கிற ஆட்டோ நிக்க மாட்டேன்கிறானுக. கூட்டம் இல்லாத ஆட்டோவுல ஏறுனா நின்னுட்டே இருக்கானுக. என்ன கொடுமை, இது என்றபடியே உட்கார்ந்திருந்தேன்.

இரண்டு பேர் திடீரென ஏறினர்.

ஜன்னல் ஓரம் இருந்தவர் தள்ளி உட்காராமலே இருந்தார்.

எனக்கு கோபம் கொப்பளித்தது. ‘கொஞ்சம் தள்ளி ஒக்காருங்க’ என்றேன் கடுப்பாக.

அவரும் எதுவும் சொல்லாமலே தள்ளி உட்கார்ந்தார்.

‘ஷேர் ஆட்டோவில ஏறுனா நல்லா தள்ளி தான ஒக்காரணும். இவரு பேசாம இப்பிடி ஒக்காருராரு இவ்வளவு விசாலமா ஒக்கார நினைக்கிற ஆளு தனியா ஒரு ஆட்டோ பிடிச்சு போகலாமே’ என்று மனதுக்குள் நினைத்தபடியே சென்று கொண்டிருந்தேன். ‘டர்ன் பண்ணி நிறுத்துங்க’ என்றார் என் அருகில் இருந்தவர்.

‘யப்பா…, இப்பவாவது எறங்குறாரே என்ற சந்தோசத்தில் நான் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தேன். அவர் இறங்கத் தயாரான போது என் மனது ரொம்பவே வலித்தது.

ச்சே… நாம தப்பு பண்ணிட்டோம். யாரையும் இப்பிடி சாதாரணமா கோவிச்சுக்கூடாது. பாக்குற பார்வையில யாரையும் தப்பா நெனைக்கக் கூடாது என்று என் புத்தியில் அறைந்த போது, அவர் எழ முடியாமல் இறங்கினார். அவர் ஒரு மாற்றுத்திறனாளி. அவர் இறங்க மற்றவர்கள் உதவி செய்தார்கள். அது எனக்கு என்னவோ போலானது.

‘இனிமே யாரையும் தள்ளி ஒக்காருங்கன்னு சொல்லக் கூடாது…., அவங்களா தள்ளி ஒக்காந்தா ஒக்காரட்டுமே இனி நாம எதையும் பேசக் கூடாது’’, என்றபடியே என் பயணம் தொடர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *