சிறுகதை

வயதுக்கு மரியாதை | துரை. சக்திவேல்

சென்னையில் உள்ள அரசு அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர் சுந்தரம்.

அவரது மனைவி ரஞ்சனி வங்கி மேலாளராக பணியாற்றி வந்தார்.

அவர்களது ஒரே மகன் சஞ்சய். தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.

கணவன் மனைவி இரண்டு பேரும் உயர்ந்த பதவியில் இருப்பதால் சென்னையில் சொந்தமாக பங்களா வீடு கட்டி நல்ல வசதியாக வாழ்ந்தனர்.

வீட்டில் சமையல் வேலை மற்றும் துணி துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளை பார்த்துக் கொள்ள வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொண்டனர்.

அவர்கள் 2 பேரும் வேலைக்கு செல்வதற்காக அலுவலக கார்களை பயன்படுத்தி கொண்டனர்.

தங்களது சொந்த காரை மகன் சஞ்சய் பள்ளிக்கு செல்வதற்கும் அவனை வீட்டுக்கு அழைத்துவதற்கும் பயன்படுத்தி அதற்கு டிரைவரை வேலைக்கு வைத்துக் கொண்டனர்.

ஒரே மகன் என்பதால் சஞ்சய் செல்லமாக வளர்க்கப்பட்டான்.

காலையில் எழுந்து கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்கு செல்வார்கள். மகன் பள்ளிக் சென்று வருவான்.

இவ்வாறாக வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சுந்தரம் மெதுவாக எழுந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

சமையில் அறையில் மனைவி ரஞ்சனி பணியாளர்களிடம் வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது சுந்தரத்தில் சொல்போன் மணி அடித்தது.

சுந்தரம் போனை எடுத்து பார்த்த போது, பெயர் இல்லாமல் வெறும் நம்பர் மட்டும் வந்தது.

யாரோ தெரியாத நபர் கூப்பிடுகிறார் என்று நினைத்துக் கொண்டு போனை எடுத்தார்.

அப்போது எதிர் முனையில் இருந்து பேசியவர்.

சுந்தரம் இருக்காரா என்று கேட்டார்.

ஆமாம். இருக்கார்… நீங்கள் யார்…? என்று சுந்தரம் கேட்டார்.

என் பெயர் முருகன்.

நானும் சுந்தரமும் கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பர்கள் என்று கூறினார்.

உடனே சுந்தரத்திற்கு முருகனை ஞாபகம் வந்தது.

டே வாத்தியாரே…. நல்லா இருக்கேயா… நான் தான் சுந்தரம் பேசுறேன் என்றார்.

நான் நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்க… உன் மனைவி, குழந்தைகள் எல்லாம் எப்படி இருக்காங்க என்று இவரும் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.

முருகனும் சுந்தரமும் கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பர்கள்.

சுந்தரம் அரசு வேலையில் சேர்ந்து பல்வேறு ஊர்களில் வேலைக்கு சென்றதால் முருகனுடனான தொடர்பு குறைந்தது.

முருகன் கல்லூரி படிப்பை முடித்து ஆசிரியர் பணியில் சேர்ந்து, தனது சொந்த ஊரிலே வசித்து வந்தார்.

அவருக்கு சுந்தரம் சென்னையில் இருப்பது தெரியும்.

இந்த நேரத்தில் முருகனுக்கு சொந்த வேலை காரணமாக சென்னைக்கு வரவேண்டி இருந்தது.

இதைத் தொடர்ந்து தனது நண்பனை பார்க்கலாம் என்ற ஆசையில் சுந்தரத்தின் உறவினர் மூலம் அவரது செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டார்.

சென்னையில் 3 நாட்கள் தங்கியிருந்த முருகன். அன்று ஞாயிற்று கிழமை என்பதால் சுந்தரத்தை இன்று பார்க்கலாம் என்று முடிவு செய்து அவனுக்கு போன் செய்தார்.

சுந்தரமும் முருகனிடம் நலம் விசாரித்து எங்கு இருக்கிறாய் என்று கேட்டார்.

முருகனும் சென்னை வந்திருப்பதாக கூறினார்.

உடனே சுந்தரம், உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு எங்கள் வீட்டுக்கு கிளம்பி வா என்று தனது முகவரியை கூறினார்.

முருகனும் தனது கல்லூரி நண்பன் சுந்தரத்தை பார்க்க அவனது வீட்டுக்கு வந்தார்.

முருகனை வீட்டுக்குள் அழைத்து சென்ற சுந்தரம், தனது மனைவி மற்றும் மகனிடம் அறிமுகம் செய்து வைத்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது சஞ்சய் டிராயிங் வகுப்பு செல்ல வேண்டும் என்று தனது தந்தையிடம் கூறினான்.

நீ காரில் போயிட்டு வா…. என்று சுந்தரம் கூறினார்.

அப்பா… இந்த ராமசாமி வர வர நான் சொல்றதை கேட்க மாட்டேங்கிறான்… என்று சஞ்சய் கூறினான்.

சரி நீ போய் டிரைவரை கூட்டிட்டு வா என்று சுந்தரம் கூறினார்.

உடனே சஞ்சய், ‘‘ராமசாமி… ராமசாமி… அப்பா உன்னை கூப்பிடுறாரு’’’ என்று கத்திக் கொண்டே சென்றான்.

அதைத் தொடர்ந்து வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த காரை தண்ணீர் ஊற்றி துடைத்துக் கொண்டிருந்த டிரைவர் ராமசாமி வேகமாக வீட்டுக்குள் வந்து, சுந்தரத்திடம் ‘‘சார் சொல்லுங்க சார்’’ என்று கேட்டார்.

அவரை பார்த்ததும் முருகனுக்கு அதிர்ச்சியானது.

ஏனென்றால் அவருக்கு 55 வயதுக்கு மேல் இருக்கும். அவரை சிறுவன் சஞ்சய் பெயரை சொல்லி அழைக்கிறானே என்று யோசித்தார்.

வயசுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை கூட சொல்லிக் கொடுக்காமல் அவனை வளர்த்து வருகிறார்களே என்று மனதிற்குள்ளே வேதனை பட்டார்.

என்ன ராமசாமி பையன் சொல்றத கேட்க மாட்டேங்கிறாளாமே… சொல்றான் என்று சுந்தரம் கேட்டார்.

அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது சார் என்று டிரைவர் ராமசாமி கூறினார்.

சரி அவனை டிராயிங் கிளாசுக்கு கூட்டிட்டு இருந்து திரும்ப கூட்டிட்டு வாங்க என்று அனுப்பி வைத்தார்.

சஞ்சய் கிளம்பிச் சென்றான்.

சுந்தரமும் முருகன் வீட்டு வரவேற்பு அறையில் உட்கார்ந்து தங்களது பழைய நினைவுகளை பேசிக் கொண்டிருந்தனர்.

ரஞ்சனி அதிகாரி என்பதால் தன்னிடம் வேலை செய்பவர்களை அதிகார தோரணையிலே வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த முருகன், ரஞ்சனியின் செயல்பாடே சஞ்சய்க்கு முன் உதாரணமாக உள்ளது என்பதை உணர்ந்து கொண்டார்.

சிறிது நேரத்திற்கு பின்னர் சஞ்சய் வீட்டுக்கு திரும்பி வந்தான்.

வீட்டில் மதிய உணவு தயாரானது.

ரஞ்சனி, முருகன் மற்றும் தனது கணவர் சுந்தரத்தை சாப்பிட அழைத்தார்.

அனைவரும் சாப்பாடு மேஜையில் உட்கார்ந்தனர்.

சமையல் வேலை செய்யும் மல்லிகா உணவு பரிமாறத் தொடங்கினார்.

அப்போது சிறுவன் சஞ்சய் ,‘‘ மல்லிகா அந்தத் தண்ணீரை எடுத்துக் கொடு’’ என்று அதிகாரமாக பெயரைச் சொல்லி அழைத்தான்.

அப்போதும் முருகனுக்கு மனது வலித்தது.

மல்லிகாவும் எந்தவித கோபமும் இல்லாமல் அவன் கேட்டதை எடுத்துக் கொடுத்தாள்.

அவள் கோபப்பட முடியாது. ஏனென்றால் அவள் அவர்களிடம் வேலை பார்க்கிறாள்.

வேலைக்கு வந்த இடத்தில் மரியாதையை எதிர்பார்க்க கூடாது என்பது அவளது எண்ணம்.

இந்த தவறுக்கு காரணம் சுந்தரம் மற்றும் அவரது மனைவி ரஞ்சினி தான் என்பதை முருகன் உணர்ந்தார்.

அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்.

முருகனும் சுந்தரமும் வீட்டு சோபாவில் அமர்ந்தனர்.

அப்போது முருகன் சுந்தரம் மற்றும் அவனது மனைவி ரஞ்சனியிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று கூறினார்.

சரி சொல்லுங்கள் முருகன் என்று சுந்தரம் கூறினார்.

உடனே முருகன், வீட்டு வேலை ஆட்கள் இருக்கிறார்கள். தனியாகப் போய் பேசலாமா என்று கூறினார்.

சுந்தரம், அவரது மனைவி ரஞ்சனி மற்றும் முருகன் ஆகியோர் மாடியில் உள்ள அறைக்கு சென்றனர்.

என்ன முருகன் என்ன பேச வேண்டும் என்று கேட்டார் சுந்தரம்.

முருகன் பேசத் தொடங்கினார்.

சுந்தரம் நான் சொல்றேன் தப்பா நினைக்க வேண்டாம்.

நீங்கள் இரண்டு பேரும் உயர்ந்த பதவியில் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது.

அதே போல் ஒவ்வொருவருக்கும் ஒரு மரியாதை இருக்கிறது.

உங்கள் வீட்டில் வேலை பார்க்கும் நபர்கள் உங்களுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும். உங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை இயல்பு.

அதே நேரத்தில் அவர்களை கவுரவமாக நடத்த வேண்டியது நமது கடமை.

நீங்கள் அவர்களை எப்படி அழைத்தாலும் கவலை இல்லை. ஏனென்றால் நீங்கள் உயர்ந்த பதவியில் இருக்கிறீர்கள்.

அதே நேரத்தில் உங்கள் மகன் அவர்களது வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

ஆனால் அவன் பேசுவதை பார்த்தால் எனக்கு மனசு ரொம்ப வலிக்குது.

உங்கள் மகன் சஞ்சய் உங்களது பணியாளர்களின் வயதுக்கு மரியாதை கொடுக்காமல் அவர்கள் ஒவ்வொருவரையும் பெயரை சொல்லி அழைப்பதும் மிகவும் வருந்ததக்கதாகும்.

அது அவனது தவறு கிடையாது.

ஏனென்றால் பெற்றோர்கள் அவனுக்கு கற்று கொடுக்க வேண்டும்.

அதனால் அவனுக்கு மரியாதையாக பேச தெரியவில்லை.

இது உங்கள் வீட்டில் மட்டுமல்ல… ஒரு சில வீடுகளில் இந்த மாதிரி நடக்கத்தான் செய்கிறது.

குறிப்பாக சென்னை போன்ற பெரிய நகரங்களில் கணவன், மனைவி இரண்டு பேரும் வேலைக்கு செல்லும் வீடுகளில் உள்ள குழந்தைகளின் மனநிலை இப்படித் தான் இருக்கிறது.

பேப்பர் போடுபவர்களை, ‘‘அந்த பேப்பர் போடுபவன் இன்னும் வரலையா… இந்த பையன் எப்போதும் இப்படித்தான்’’

பால் போடுபவர்களை, ‘‘இந்த பால் போடுபவன் வர வர ரொம்ப லேட்டா வந்துக்கிட்டே இருக்கான்’’

தண்ணீர் கேன் போடுபவர்களை… ஏம்ப்பா… கொஞ்ச சீக்கிரம் வரமாட்டாயா’’ என்று அவர்களுக்கு நாம் மரியாதை கொடுப்பதே கிடையாது.

பேப்பர் போடுபவர்களும் பால் போடுபவர்களும் தண்ணீர் கேன் போடுபவர்களும் வீட்டு வேலைக்காரர்களும் ஒரு நாள் வரவில்லை என்றால் நாம் படும் பாடு திண்டாட்டம் தான்.

அவர்கள் எளியோர் நம்மை சார்ந்து தான் இருக்கிறார்கள் என்ற எண்ணம் தான் இதற்கு காணரம்.

உண்மையை சொல்லப்போனால் நாம் தான் அவர்களை சார்ந்துள்ளோம்.

அவர்கள் எல்லாம் பணத்தால் நம்மைவிட எளியோர்கள். ஆனால் வலியவர்கள் இல்லை. நமக்கு அடிமையும் இல்லை.

நமது சூழ்நிலை நன்றாக படித்து நல்ல வேலைக்கு வந்து விட்டோம்.

அவர்களது குடும்ப சூழ்நிலை படிக்க முடியாமல் வீட்டு வேலைக்கு வந்து விட்டனர்.

கணவன், மனைவி இருவருமே வேலைக்கு சொல்லும் சூழ்நிலையில் நாம் பலபேரை சார்ந்து இருக்க வேண்டி உள்ளது.

அவர்களுக்கு உரிய மரியாதை அவசியம் நாம் கொடுத்து தான் ஆகவேண்டும்.

அதிலும் நம் வீட்டு பிள்ளைகளை அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

வயதுக்கு மரியாதை கொடுப்பது என்பது நமது கலாச்சாரத்தோடு கலந்தது.

அதனால் தயவு செய்து அதனை நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல மறக்க வேண்டாம்.

நான் சொல்வதில் ஏதாவது தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும் என்று வாத்தியார் முருகன் ஒரே மூச்சில் தனது கருத்துகளை சுந்தரம் மற்றும் அவரது மனைவியிடம் கூறினார்.

அப்போது தான் அவர்களது தவறு அவர்களுக்கு புரிந்தது.

முருகன் கூறியது அனைத்தும் உண்மை என்பதால் சுந்தரத்தால் மறுக்க முடியவில்லை.

தங்களது தவறுக்கு வருத்தினர்.

இனிமேல் தாங்கள் திருத்திக் கொள்வதாக முருகனிடம் உறுதி அளித்தனர்.

அதோடு மட்டுமல்லாமல் தனது மகனை அழைத்து வீட்டில் உள்ளவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

முருகன் தனது பழைய நண்பரை பார்த்த மகிழ்ச்சியில் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *