சிறுகதை

கல்லூரி முதல்வர் அறிவுரை | கோவிந்தராம்

அன்று கல்லூரி முதல்வர் இரண்டாம் ஆண்டு மாணவ –மாணவிகளை அழைத்து சில கட்டுப்பாடுளைக் கடைப்பிடித்தால் இந்தாண்டு அனைத்து பாடத்திலும் முழுமையாக தேர்ச்சி பெற முடியும் ; முதல் ஆண்டு பாக்கி உள்ள பாடத்திலும் தேர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது என்றார் கல்லூரி முதல்வர் .

உடனே மாணவிகள் அனைவரும் கூட்டமாக எழுந்து நின்று முதல்வர் சொல்லும் அனைத்தையும் முழுமையாகக் கடைப்பிடிப்போம் என்று கூறி அமர்ந்தனர்.

உடனே முதல்வர் இனிவரும் நாட்களில் வகுப்பில் பேராசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவ –மாணவிகள் கவனத்துடன் மனதில் பதிவு செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக வகுப்பில் பாடம் நடத்தும் நேரத்தில் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசிக் கொண்டோ, அல்லது செல்போனில் மெசேஜ் அனுப்புவதும் மெசேஜ் படிப்பதும் கூடாது. கல்லூரி முடிந்து வீட்டிற்கோ அல்லது விடுதிக்கோ சென்ற பின், அன்றைய வகுப்பில் நடந்த பாடத்தை மனதில் ஒருமுறை திரும்பிப் பார்த்தால், உடனே கேள்விகளுக்கு பதில் எழுத முடியும்.

கூடியவரை செல்போன்கள், டேப்லெட்கள், கணிப் பொறிகளில் மனதை திசைத் திருப்பும் காட்சிகளையும் செயலிகளையும் தவிர்க்க வேண்டும். நல்ல உணவுகளை உண்டபின் நித்திரைக்குச் செல்ல வேண்டும். அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அந்த நாளில் செயல்பாடுகள் மகிழ்ச்சியாகவும் மனதுக்கு திருப்தியாகவும் இருக்கும் என்று முதல்வர் கூறி முடித்தார்.

மாணவிகள் அனைவரும் அறையை விட்டுச் செல்லும் போது, இனி நாம் முதல்வர் அறிவுரைகளை ஏற்று அதன்படி நடந்து கொள்வோம் என்று பேசி சென்றனர். மாணவர்கள் இன்னும் முதல்வர் அந்தக் காலத்திலேயே இருக்கிறார். நவீன மாறுதல்களை அவர் இன்னும் அனுபவித்துப் பார்த்ததில்லை போலிருக்கிறது. பேஸ்புக், வாட்ஸ் அப், சாட்டிங், மெசேஜ் அனுப்புதல் போன்ற விஷயங்களை அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும் என்று முதல்வரை கேலி பேசி வெளியே சென்றனர்.

அடுத்து நடைபெற்ற தேர்வுகளின் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகரித்தது. மகிழ்ச்சி அடைந்த முதல்வர் அந்த மாத கூட்டத்தை அழைத்தார். மாணவிகளை வெகுவாக பாராட்டி இந்த நிலையைத் தொடர வேண்டும் என்றார். மேலும் உங்களுக்கு தேவையென்றால் விடுதியில் வைபை வசதி செய்து தருவதாகக் கூறினார். ஒட்டு மொத்தமாக எல்லா மாணவிகளும் வைபை வசதி வேண்டாம் என்று கூறினார்.

விடுதியில் வசதியாக கணிப் பொறி புத்தகங்களைப் படிக்க வைபை வசதியாக இருக்குமே என்றார். கணிப் பொறியில் பதிவிறக்கம் செய்து புத்தகங்களை படிப்பதை விட, புத்தகத்தை நேரடியாக படிப்பது தான் சுலபமாக இருக்கும் என்றனர். புத்தகங்களை கையில் பிடித்து பக்கங்களை புரட்டுவது தான் படிப்பதில் மகிழ்ச்சி என்றனர். மாணவிகள் வெளிப்படையாக பேசியது மாணவர்களை சிறிது சிந்திக்கச் செய்தது. சில மாணவர்கள் எங்கள் விடுதியிலும் வைபை வசதி வேண்டாம் என்று சொல்ல மாணவன் கைதட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

வெளியே வந்த மாணவர்கள் வைபை வேண்டாம் என்று சொன்ன மாணவர்களை கேலி செய்ய ஆரம்பித்தனர்.

அவர் கூறிய காரணங்கள் கேலி செய்த மாணவர்களை யோசிக்க செய்தது. மாணவிகள் அனைவரும் தங்களுக்கு வைபை, பேஸ்புக், வாட்ஸ் அப், மெசேஜிங் சாட்டிங் தேவையில்லை என்று சொன்ன பிறகு நாம் எதற்கு அதையெல்லாம் பயன்படுத்த வேண்டும். அவர்கள் படிப்பில் அக்கரை செலுத்தி தேர்வில் முதலிடம் பிடிக்கும் போது நாம் தரத்தை இழக்கிறோம் என்று சில மாணவர்கள் கருத்து சொல்ல மாணவிகளை போல் நாமும் திருத்தி படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

அடுத்த மாதக் கூட்டத்தில் கல்லூரி முதல்வர் பேசும் போது மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கூடியதற்கு என்ன காரணம் என்று விசாரித்தார். மாணவர்கள் கண்ணியத்துடன் எழுந்து முதற் கூட்டத்தில் கல்லூரி முதல்வர் கூறிய அறிவுரைகளை நாங்களும் கடைப் பிடிக்க ஆரம்பித்ததன் பலன் தான் என்றனர்.

மிக்க மகிழ்ச்சி தான் எனக்கு. ஆனாலும் மாணவிகளைப் போல் நாங்கள் முதல்வரின் அறிவுரைகளை ஏற்றுக் கொண்டோம் என்று சொல்வதற்கு கூச்சப்பட்டு முதல்வரின் அறிவுரைகளை தாமதமாக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி என்றார்.

எப்படியோ கல்லூரி முதல்வரின் அறிவுரைகளை ஏற்றுக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தி தேர்வில் வெற்றி பெற்று எதிர்கால வாழ்க்கைக்கு வழி வகுத்ததற்கு கல்லூரி முதல்வர் பாராட்டுகளை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *