சிறுகதை

முதல் தெய்வம் | நன்னிலம் இளங்கோவன்

அம்மாவ பத்தி நானே சொல்லக்கூடாது. ஆனாலும் எங்க அம்மாவ எனக்குதான நல்லாத் தெரியும்.

என்னோட ஒவ்வோரு அசைவிலயும் எங்கம்மா எனக்குள்ள இருக்கறதுதான் எனக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

நான் பிறந்த முப்பதாவது நாள் – எங்கப்பா ஒரு விபத்துல இறந்துட்டாரு…

அதுக்காக எங்கம்மா மத்தவங்கள மாதிரி அப்பன முழுங்கனவ ; பெத்த அப்பனையே சாகடிச்சவ; அப்படி இப்படின்னு திட்டாம இன்னைக்கு வரயிலயும் என்ன பொத்திப் பொத்தி வளக்குறாங்க…. அப்படி இருக்குற அம்மா இல்லாம நான் எப்பிடி நல்லா இருக்க முடியும்?

எங்கப்பாவும் நல்லவருதானாம்…. தனியார் பஸ் கம்பெனியில டிரைவரா இருந்தவரு அம்மாகிட்ட அடிக்கடி சொல்லுவாராம்.

நமக்குன்னு, ஒரு பொம்பள பிள்ளை வேணும். வயசான காலத்துல நம்ப உம்புக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா நம்பள பக்கத்துல இருந்து பாத்துக்குறத்துக்கு பொம்பள புள்ள வேணும். ஆம்பள பசங்கள நம்ப முடியாதும்மா. இப்படி அப்பா அடிக்கடி சொல்வதாக அம்மா சொல்லுவாங்க.

என் அண்ணன் அசோக் பறந்து ஐந்து வருசத்துக்கு பிறகுதான் நான் பிறந்தேன். நான் பிறந்த முப்பதாம் நாலு எங்க அப்பா விபத்துல இறந்துட்டாரு.

பொம்பளபுள்ளை வேணும்னு ஆசைப்பட்டதாலோ என்னவோ நான் புறந்ததும் அப்பா ஆசை நிராசையாய் போயிட்டு. அப்பாவை நானும் பார்த்ததுல்ல… ஆனா இன்னிக்கும் அப்பா போட்டோவைத்தான் நான் கடவுளா நினச்சு கும்பிடறேன்.

அப்பாவோட வருமானத்துலதான் எங்க குடும்பம் நடந்துகிட்டிருந்துச்சு . அப்பா இறந்ததுக்கப்புறம் அண்ணனையும் என்னையும் வளர்க்க அம்மா பட்டபாடு சொல்லி மாளாது .வேற எந்த அம்மாவுக்கும் இந்த நிலைமை வந்துடக்கூடாது.

ஓட்டல்ல பாத்திரம் தேய்ச்சுகிட்டு எங்க ரெண்டு பேரையும் கஷ்டத்தோட படிக்கவைச்சத நினைச்சு அம்மா மேல எங்க ரெண்டு பேருக்கும் அளவு கடந்த பாசமும் மரியாதையும் உண்டு.

அம்மா சொல்றத நாங்க ரெண்டு பேரும் தட்டிக் கழிச்சதே கிடையாது. அம்மாவும் எங்க மேல ரொம்ப பாசமா இருப்பாங்க.

அண்ணனும் அப்படி இப்படின்னு கஷ்டப்பட்டு காலேஜ் வரையிலும் படிச்சுது… அண்ணன் படிச்சிகிட்டு இருக்குறப்ப பார்ட்டைம் வேலையும் பார்த்து என்னையும் படிக்க வைச்சுது.

அண்ணன் படிப்பை முடிச்சதும் பேங்க் பரீட்சை எழுதி பாஸ்பண்ணி பேங்ல கேஷியரா வேலைக்கு சேர்ந்துடுச்சு….

அப்பாடா….. எங்க ரெண்டு பேருக்காவும் ராப்பகலா ஓட்டல்ல பாத்திரம் தேய்ச்ச அம்மாவுக்கு ஓய்வு கிடைச்சுடுச்சு….

அண்ணன் பேங்க் வேலைக்கு போய், இன்னையோட ஒரு வருசம் முடிச்சிடுச்சு… எங்க அப்பாவுக்குன்னு இருந்த மண்குடிசை கூரை வீட்டை பேங்க் லோன் வாங்கி மாடி வீடா கட்டி முடிச்சுடுச்சு எங்கண்ணன்….

அண்ணனுக்கு வேலை கிடைச்சது; கூரை வீட்டை மாடிவீடா கட்டுனது; இப்படி எத பத்தியும் அம்மா நினச்சுபார்த்து சந்தோசமடைந்ததா எனக்கு தெரியல . எப்பவும் அம்மாவுக்கு அப்பாவோட நினைப்புதான்.

காலையில் குளிச்சி முடிச்சு அப்பா படத்துக்கு விளக்கேத்தி வைச்சு பிரார்த்தனை பன்றது அம்மாவோட வழக்கமா மாறிடுச்சு.

நானும் இப்ப பி.காம் முடிச்சிட்டன். சார்வீஸ் கமிஷன் தேர்வு எழுதப் போறன். ஆனால் அம்மாவும் அண்ணனும் தெரிந்த தரகர்கிட்ட என்னோட ஜாதகம் போட்டோ எல்லாத்தையும் குடுத்துட்டதா அம்மாகிட்ட அண்ணன் சொன்னதை கேட்டுக்கிட்டேன்.

எனக்கு என்னமோ இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு தோனுச்சு. அம்மா கிட்ட சொல்லிப் பார்த்தேன். அண்ணன்கிட்டயும் பேசி பார்த்தேன் என் பேச்சு எடுபடல.

காலத்தோட எதையும் செய்ஞ்சுடணும். இல்லேன்னா எல்லோருக்கும் கஷ்டம்தான் ஏற்படும்னு, அம்மாவும், அண்ணனும் என்ன திருமணத்துக்கு சம்மத்திக்க வைச்சுட்டாங்க,

தரகர் சொன்ன தேதியில, மாப்பிள்ளை வீட்டுலருந்து என்னைப் பெண் பார்க்கநேரில் வந்தாங்க. மாப்பிள்ளை அரசாங்க வேலையில இருக்காராம். மாப்பிள்ளையோட அம்மா, அப்பா, மாப்பிள்ளையோட தங்கச்சி, மாப்பிள்ளை இவங்க எல்லோரும் என்ன பார்த்துட்டு பொன்னு பிடிச்சிருக்குன்னு தகவல் சொல்லிட்டு போயிட்டாங்க.

ஒரு வழியா எனக்கும் விஜயனுக்கும் திருமணம் நிச்சயமாயிடுச்சு..

திருமணம் நடக்கிற அன்னிக்கு விழா மேடையில அம்மா மேடை பக்கமே பார்க்க முடியல ஏன்னு எனக்கே தெரியல அம்மாவ எதிர்பார்த்து என் கண்ணே பூத்துப் போச்சு.

மாப்பிள்ளை தன்னோட அம்மா, அப்பாவுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ஞ்சு முடிச்சாரு.

பொண்ண அழைச்சிட்டு வாங்கன்னு அய்யரு சொன்னதும் மணமகள் அறையிலிருந்து என்னை மணமேடைக்கு அழைச்சுட்டு போனாங்க.

எனக்குன்னு இருக்குற உறவு எங்க அம்மாவும் அண்ணனும் மட்டும் தான். அண்ணனுக்கு இன்னும் கல்யாணமாகலை. அம்மா விதவைங்கறதால மேடையில அம்மாவ ஏறவிடலேன்னு எனக்கு அப்புறமாதான் தெரிஞ்சது. அதனால மாமனாருக்கும் மாமனாருக்கும் பொண்ணு சடங்கு செய்யலாம்னு பெரியவங்க சொன்னது என் காதுல விழுந்தது.

என் மனசு பொங்கி கண்ணீர் ஆறா ஓட ஆரம்பிச்சுடுச்சு..

எனக்கு எப்படி இப்படியொரு தைரியம் வந்ததுன்னு தெரியல. எனக்கு அப்பா இல்லேன்னா என்ன. எங்கம்மா கிட்ட நான் ஆசிர்வாதம் வாங்கிக்கறேன். மேடைக்கு அம்மாவ வரச்சொல்லுங்கன்னு அழுதுட்டேன்

மேடையில இருந்த பெரியவங்க, பெண்கள் எல்லாம் என்னை பார்த்து கோபிச்சுக்காதம்மா!

சுப நிகழ்ச்சி நடக்குற இந்த மேடைக்கு கைம் பெண்ணா இருக்குற வங்கல்லாம் வரக் கூடாதும்மா.

அப்படின்னா, என்னை ஆசிர்வாதம் பண்ண எங்கம்மா வரமாட்டாங்களா! சரி. எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க. மனித சமுதாயத்துல அம்மாத்தான் முதல் தெய்வம். அவளாலதான் இந்த மண்ணுக்கே நாம வந்தோம். அம்மாதான் நடமாடும் தெய்வம். அப்படி இப்படின்னு கொண்டாடற நாம அந்த அம்மா விதவையாயிட்டா…. நாம தெய்வம்னு சொல்ற நிலையை இழந்துடுவாங்ளா என்ன? என்னைப் பொறுத்தவரை எனக்கு எங்கம்மாதான் தெய்வமா தெரியறாங்க.

என் அம்மா இல்லாம , அவுங்களோட ஆசிர்வாதம் எனக்கு கிடைக்காம – இந்தக் கல்யாணம் நடக்காது.

இதுக்கு சம்மதிச்சா நான் இவரைக் கணவரா ஏத்துக்கிறேன்.

இல்லேன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு…. மேடையிலேருந்து இறங்கிட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *