செய்திகள்

ரூ.600 கோடியில் மேலும் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க முடிவு

சென்னை, ஜூலை 17–

மக்களின் நலன்களில் அதிக அக்கறை கொண்டுள்ள அம்மாவின் ஆசி பெற்றுள்ள இந்த அரசு இந்த ஆண்டு (2018–2019) 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேலும், 3,000 புதிய பேருந்துகள் வாங்கிட முடிவு செய்யப்பட்டு, அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டமானது, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார், அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர்கள், பொது மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு தலைமையேற்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசுகையில் கூறியதாவது:–

அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பொது மக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் பெரும்பங்காற்றி வருகின்றன. போக்குவரத்துச் சேவையினை மேம்படுத்திடும் உயரிய நோக்கில், அம்மா கடந்த 2016ம் ஆண்டில் 516 கோடி ரூபாய் செலவில், 2000 அதிநவீன பேருந்துகளும், 100 சிற்றுந்துகளும் வாங்கப்படும் என்று அறிவித்தார்.

அம்மா வழியில் நல்லாட்சியினைத் தொடர்ந்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதற்குச் சான்றாக, கடந்த 3.7.2018 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், 134.53 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ள புதிய பேருந்துகளை தொடங்கி வைத்து சிறப்பித்தார். அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரலாற்றில் முதன்முறையாக, படுக்கை வசதி, கழிவறை வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் ஒலிக் கருவி, பேருந்து நிறுத்தங்களை பயணிகளுக்கு தெரிவித்திடும் வசதி, பேருந்து நிலையங்களில் இவ்வகை பேருந்துகளை ஓட்டுநர்கள் தாமாகவே குறித்த இடத்தில் நிறுத்தம் செய்திட ஏதுவாக நவீன சென்சார் கருவி, நீண்ட தூர பயணங்களில் ஓட்டுநர் சோர்வடைவதை தவிர்த்திடும் எச்சரிக்கை ஒலிக் கருவி உள்ளிட்ட பல நவீன வசதிகளை கொண்டுள்ள பேருந்துகள் மற்றும் இடைநிறுத்தம் இல்லாத பேருந்துகள் பொது மக்களை பெரிதும் கவர்ந்துள்ளன.

35 விருதுகள்

கடந்த ஓராண்டில், போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகளாக, அனைத்து தொழிலாளர்களின் ஒன்றுபட்ட உழைப்பின் பயனாக, போக்குவரத்துத் துறையில் நிகழ்த்தப்பட்டுள்ள பல்வேறு செயல்திறன்களுக்காக, அனைத்திந்திய சாலைப் போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பின் விருதுகளை கடந்த 2013ம் ஆண்டு முதற்கொண்டு தொடர்ந்து பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளது.

கடந்த (2016–17) ஆண்டிற்கான 35 விருதுகளில் 11 விருதுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்கள் பெற்று, இத்துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பெருமையினைத் தேடித்தந்துள்ளது.

தொழிலாளர் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள அம்மாவின் அரசு, 2,247.39 கோடி ரூபாய் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையில், அம்மாவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கான முழுஉடற் பரிசோதனைத்திட்டத்தின்கீழ், ஏறத்தாழ 55,772 தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 24,627 தொழிலாளர்களுக்கு தொடர் சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.1¼ கோடியில் நவீன சி.டி. ஸ்கேன் கருவி

மேலும், 1.20 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள நவீன சி.டி. ஸ்கேன் கருவி மூலம் 19,672 தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். 1.93 கோடி ரூபாய் செலவில் 354 தொழிலாளர்களின் ஓய்வறைகள் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளன.

பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்காக 100 இடங்களில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஆண்டுதோறும் 30 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சென்னை மாநகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டையானது, 52.97 கோடி ரூபாய் செலவில், 3 லட்சத்து 11 ஆயிரத்து 930 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ரூ.542 கோடி செலவில் பயண சலுகை அட்டை

541.78 கோடி ரூபாய் செலவில், 27 லட்சத்து 84 ஆயிரத்து 785 மாணவ மாணவியர்களுக்கு கையடக்க கட்டணமில்லா மற்றும் 50 விழுக்காடு பேருந்து பயண சலுகை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

போக்குவரத்துத் துறையில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்தி தேசிய அளவில் பெற்று வரும் விருதுகளை தொடர்ந்து பெறுவதோடு, பொதுமக்களுக்கு மேலும் பயன் தருகின்ற வகையில் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்து சேவைகள் தொய்வின்றித் தொடர்ந்திட அலுவலர்களாகிய நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்போடு பணியாற்றி, துறைக்கு பெருமை சேர்ந்திட வேண்டும்.”

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *